பெண்ணே விழித்தெழு!

பெண்கள் பிறரை கவனித்து கொள்வது போல, தங்களையும் கவனித்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்த கட்டுரையை படியுங்கள்.

பெண்ணே விழித்தெழு!

பெண்கள், தங்கள் குடும்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கவனிப்பது சிறந்த, பாராட்டத்தக்க விஷயம். ஆனால் அவர்கள் சில சமயம் தங்களை கவனிக்க மறந்து விடுகிறார்கள். தங்களை கவனிக்க அவர்கள் மெனக்கெட வேண்டும். இதை வலியுறுத்தும் இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

சுயநலம் :

நாம் நன்றாக இருந்தால் தான் நம்மை சுற்றி இருப்பவர்களும் நன்றாக இருப்பார்கள். பிறருக்கே முன்னுரிமை கொடுத்து பழக்கப்பட்ட பெண்களுக்கு, இதை கடைப்பிடிப்பது ஆரம்பத்தில் கடினமாக தான் இருக்கும். உங்களுக்கு காலையில் எழுந்ததும் காபி குடிக்க தோன்றுகிறதா??? அப்போது முதலில் உங்களை கவனித்து விட்டு அடுத்த வேலை செய்ய தொடங்குங்கள்.

முக்கியத்துவம்:

உங்கள் குடும்பத்தாரிடமும், மற்றவர்களிடமும் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை தெளிவாகச் சொல்லி விடுங்கள். தேவையில்லாத பிரச்சினைகளை இதன் மூலம் தவிர்க்கலாம்.

பொன்னான நேரம் :

உங்கள் ஒட்டுமொத்த நேரத்தையும் குடும்பத்துக்கே வாரி வழங்க வேண்டாம். உங்களுக்காகவும் நேரம் செலவழியுங்கள்.

பணத் தேவை :

நீங்கள் வேலைக்கு சென்றாலும் சரி, செல்லா விட்டாலும் சரி, உங்களுக்கு என்று ஒரு சேமிப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும்.அது உங்களை தன்னம்பிக்கையுடன் செயல்பட வைக்கும்.

தண்ணீர் குடியுங்கள் :

பெண்களின் பெரும்பாலான உடல் உபாதைகளுக்கு காரணம் தண்ணீர் அதிகம் குடிக்காதது தான். எனவே எவ்வளவு பிசியாக இருந்ததாலும் சரி, தண்ணீர் குடியுங்கள்.

ஆரோக்கிய உணவு :

இரும்புச்சத்து, புரோட்டீன்,வைட்டமின் C, கால்சியம் என எல்லா சத்துக்களும் நிறைந்த சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் . தலைமுடி வளர்ச்சிக்கும் சரும ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், சரியான மாதவிடாய் சுழற்சிக்கும் இவை அவசியம்.

உடற்பயிற்சி :

உடற்பயிற்சி செய்வதை வழக்கத்தில் கொள்ளுங்கள். இது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.இதனால் உடல் பலம் பெறும், இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

தூக்கம் :

ஏழு மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். ஷோபாவில் டிவி பார்த்துக் கொண்டே தூங்குவதெல்லாம் இந்த கணக்கில் சேராது. உணவு முறை சரியாக இருந்தாலும் போதுமான தூக்கம் இல்லாவிட்டால் ஹார்மோன் பிரச்சனைகள் வந்துவிடும்.

தோற்றத்தில் அக்கறை செலுத்துங்கள்:

நல்ல உடைகளை அணியுங்கள். உங்களுக்கான ஆடை தேர்வில் கவனமாக இருங்கள். அழகு என்பது நம்மை வெளிப்படுத்துவதில் தான் இருக்கிறது. வீட்டில் இருந்தாலும், வெளியில் இருந்தாலும் அணியும் உடைகளில் நேர்த்தி வேண்டும். பெரும்பாலான பெண்கள் பழைய டி-ஷர்ட்டு மற்றும் நைட்டி என அதையே அணிந்து நாட்களை கடத்தி விடுகிறாரகள். இதில் மாற்றம் செய்து பாருங்கள். உங்கள் மனநிலையிலும் நல்ல மாற்றம் ஏற்படும்.

பெண்களை சுற்றியுள்ள கட்டுபாடுகளை எல்லாம் ஒரே நாளில் தாண்டி விடவோ, அழித்து விடவோ முடியாது. ஆரோக்கியமான முறையில் சிறிது சிறிதாக முயற்சிக்க வேண்டும்.ஒவ்வொரு நாளும் பெண்கள் புதிய விஷயங்களை கற்று கொண்டே வரவேண்டும். நம் தகுதிகளை கூட்டி கொண்டே வெற்றிக்கு முயற்சிக்க வேண்டும். வெற்றி கிடைத்தாலும், அதை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து உழைக்க வேண்டும். 

நம் முன்னேற்றம் நம் கையில்!