ஆஸ்கர் வாங்கிய 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' !

ரகுவும் பொம்மியும் யானைக்குட்டிகள்.. பொம்மனும் பெள்ளியும் அவற்றை பராமரிப்பவர்கள்.. இவர்களின் பாசப்பிணைப்பு தான் படத்தின் கதை.

ஆஸ்கர் வாங்கிய 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' !

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றுவரும் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த குறும்படத்திற்கான விருதைப் பெற்றிருக்கிறது இந்த ஆவணப்படம். இந்தியாவிலிருந்து முதன்முதலாக குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது ''தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்'.ஊட்டியில் பிறந்து, கோவையில் இளங்கலை பயின்ற கார்டிகி, அனிமல் பிளானட், டிஸ்கவரி உள்ளிட்ட தொலைக்காட்சி நிறுவனங்களில் கேமரா ஆபரேட்டராக பணியாற்றியவர். ஆசியாவின் மிகப்பெரிய வளர்ப்பு யானைகள் முகாமான முதுமலை தெப்பக்காட்டில், பணிபுரியும் தம்பதியர் பொம்மன் மற்றும் பெள்ளி குறித்து எடுத்த ஆவணப்படம் தான் இந்த தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' !

அங்கே ரகு, பொம்மி என்ற இரண்டு யானைக்குட்டிகளுக்கும், பொம்மன் மற்றும் பெள்ளிக்கு இடையே இருந்த பாசப்பிணைப்பு தான் படத்தின் கதை. 

கிருஷ்ணகிரி அருகே கடந்த 2017 ஆம் ஆண்டு தாயைப் பிரிந்து காயங்களுடன் சுற்றித் திரிந்த குட்டியானை வனத்துறையினரால் மீட்கப்பட்டு தெப்பக்காடு முகாமிற்கு அழைத்து வரப்படுகிறது. அதற்கு ரகு என பெயரிட்டு பெற்ற பிள்ளைபோல் பராமரிக்கின்றனர் பொம்மனும், பெள்ளியும்.அதேபோல, 2019 ஆம் ஆண்டு முகாமிற்கு கொண்டுவரப்பட்ட யானைக்குட்டிக்கு பொம்மி என பெயரிட்டு, இரண்டு யானைக்குட்டிகளும் தாயைப் பிரிந்த சோகம் அறியாமல் பார்த்துக் கொண்டனர் இந்த தம்பதியர்.

இந்த பாசப் பிணைப்பை மிகைப்படுத்தாமல் படமாக்கி இருக்கிறார் கார்டிகி. கடந்த ஆண்டு ஓ.டி.டி. தளத்தில் வெளியான இந்த ஆவணப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் இந்த படம் வெற்றி பெற்று பாராட்டுகளை குவித்து வருகிறது.

இந்த படம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே தந்துள்ளோம். படித்து பார்த்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

1. இந்த ஆவண குறும்பட பிரிவில் ஆஸ்கார் விருது வாங்கிய முதல் படம் 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' தான்.

2. இந்த படம் முதுமலை யானை காப்பகத்தில் எடுக்கப்பட்டது.

3. இந்த படத்தில் தென்னிந்திய காடுகளை பற்றியும் அந்த காடுகளில் வாழும் பல வன விலங்குகளை பற்றியும் காட்டப்பட்டுள்ளது.

4. இந்த படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்களான பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதிகள் தான், கைவிடப்பட்ட இரண்டு யானை குட்டிகளை எடுத்து அவற்றை பாதுகாப்பாக வளர்த்துள்ளனர். இவற்றை தென்னிந்தியாவில் செய்த முதல் தம்பதிகளாக இவர்கள் கருதப்படுகிறார்கள்.

5. இப்படத்தின் இயக்குநர் கோன்சால்வ்ஸ் 2017 இல் இதன் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இவர், DSLRகள் மற்றும் கோ-ப்ரோ கேமராக்கள் மூலம் படமெடுத்துள்ளார். அதன் பின்னர் தான் தொழில் முறை கேமராக்கள் மற்றும் ட்ரோன் மூலம் படம் பிடிக்க ஆரம்பித்துள்ளார்.