சிறுகதை: பாதை மாறும் பயணம்

தான் இடத்தின் உரிமைக்காக

சிறுகதை: பாதை மாறும் பயணம்

அன்று 25.09.1983

சோ... வென்று மழை. ...

பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறான் கரன்... மேகம் மட்டும் பொழியவில்லை அவன் கண்களும் தான், அவன் கண்ணங்களின் வழிந்தோடும் கண்ணீரை மழை நீர் மறைத்திருந்தது... அவனால் வலியை தாங்க முடியவில்லை... நடக்கும் போது தன் கால்களால் சாலையில் ஓடும் நீரை கிழித்தபடி செல்கிறான்...

வீடு வருகிறான், தன் தந்தையை கட்டி கொண்டு அழுகிறான், இந்த தாயில்லா சிறுவன். தந்தை ஆசுவாச படுத்துகிறார்... எனினும் அவராலும் தன் பிள்ளையை அமைதி படுத்த முடியவில்லை...

இரவெல்லாம் வலியை அவனால் தாங்க முடியவில்லை... இரவு முழுவதும் அவனால் உறங்க முடியவில்லை... அன்றோடு தன் பள்ளியை விட்டு அவன் விலகுகிறான்... தன் மிக நெருங்கிய நண்பர்கள், தன்னை பாராட்டி வளர்த்த ஆசிரியர்கள், அடிக்கடி அவனுடன் விளையாடும் அணில் குட்டிகள், தன் பள்ளிக்கூட மைதானத்தில் இருக்கும் மிகப்பெரிய அத்தி மரம், அதன் கீழ் சிதரிகிடக்கும் அத்திப் பழங்கள், இன்னும் பல, அவன் இழக்க போவது.

மறுநாள் அவன் தந்தை அவனை கூடிக்கொண்டு வெளி நாடு செல்லும் ஆயத்த பணிகளை தொடர்வார். ஏன் இப்படி? மற்றவர் செய்யும் தவறுக்கு, நாம் அனைத்தையும் இழக்க வேண்டுமா? அவன் சிந்திக்க ஆரம்பிக்கிறான். இந்த ஒழுங்கீனத்தை மாற்ற நாம் ஏதாவது செய்ய வேண்டும். அந்த வயதில் அவனால் அப்படி சிந்திக்கத் தான் முடிகிறது, எதுவும் செய்ய முடியவில்லை.

இரவு விடை பெற விடியலை நோக்கி அவனுடைய பூமி பகுதி வேகமாக சுழன்று கொண்டிருந்தது. அதே வேகத்தில் வெளிநாட்டில் அவன் வாழ்கையின் நாட்களும் தான்.

வெளிநாட்டு மடியில் அவன் 26 வருடங்கள்... அங்கு நன்றாக படித்து ஒரு நல்ல பணியில் அந்த நாட்டின் குடிமகனாய் அவன். வருடங்கள் கடந்தாலும் தன் தாய் நாட்டின் மீதுள்ள நாட்டம் அவனுக்கு குறையவே இல்லை.

தன் தந்தை மரணமடைய தனி மனிதன் ஆகிறான், தன் சொந்தங்களையும் நண்பர்களையும் காண ஏங்குகிறான். தன் நாட்டிற்க்கு மீண்டும் ஒருமுறையேனும் சென்று வர ஆயத்தப்பட்டான். தன் மேலாளரிடம் பத்து நாட்கள் விடுப்பு எடுத்து தன் நாட்டிற்கு பயணமானான்.

விமானத்தில் பறந்து கொண்டிருந்தான். விமானம் இரவின் மேகங்களை கிழித்துக் கொண்டு செல்கிறது.

இரவெல்லாம் மகிழ்ச்சியை அவனால் தாங்க முடியவில்லை... இரவு முழுவதும் அவனால் உறங்க முடியவில்லை... பள்ளியை காணப் போகிறான்... தன் மிக நெருங்கிய நண்பர்கள், தன்னை பாராட்டி வளர்த்த ஆசிரியர்கள், அடிக்கடி அவனுடன் விளையாடும் அணில் குட்டிகள், தன் பள்ளிக்கூட மைதானத்தில் இருக்கும் மிகப்பெரிய அத்தி மரம், அதன் கீழ் சிதரிகிடக்கும் அத்திப் பழங்கள், இன்னும் பல, அவன் மீண்டும் பார்க்கப் போவது.

மறுநாள் தன் நாட்டின் வானவூர்தி நிலையத்தின் பக்கங்களை தன் சக்கரங்களால் எதோ எழுதியபடி வானவூர்தி தரை இறங்கியது.

விமானத்தில் இருந்து வெளியே வந்தான், தன் தாய் நாட்டின் காற்று அவன் முகத்தை கழுவி விட்டது. சிலிர்த்தான். தன் தாய் மண்ணின் சுவாசத்தை நுகந்து மகிழ்ந்தான் .

ஒரு விடுதியில் அறை எடுத்தான் சிறிது ஓய்விற்குப் பின். மாலை அங்கு குளித்து விட்டு அங்குள்ள உணவகத்தில் உணவுண்டு, தன் பள்ளியை நோக்கி பயணமானான்.

அவன் ஊரே வித்தியாசப் பட்டிருந்தது, 26 வருடங்கள் ஆயிற்றே... ஒரு வழியாக அவன் பள்ளி இருக்குமிடத்திற்கு சென்றான்.

அங்கு.... அங்கு.... அவன் பள்ளி போன்று ஒரு கட்டடம், எரிந்து இடிந்த நிலையில், அதனுல் ஒரு அத்திமரம் , முக்கால்வாசி எரிந்து, பட்டு போன நிலையில்.

அந்தோ!! அது அவன் பள்ளியே தான்...

அவன் பள்ளி மீது தாங்குதல் நடந்துள்ளது. அருகில் இருக்கும் மருத்துவமனைக்கும் அதே கதி தான். அவன் நண்பர்களையும், சொந்தங்களையும் அவ்வூரில் காணவில்லை. சில்லரையாய் அவர்கள் வெவ்வேறு ஊர்களில்(சொர்கபுரியையும் சேர்த்து) சிதறி கிடப்பார்கள் என்பதை உணர்ந்தான். அவன் ஊரே நாசமாகி இருந்தது.

அதிர்ச்சியில் தன் மன முதிர்ச்சியையும் முந்திக்கொண்டு தரையில் விழுந்து புரண்டான். கத்தினான், கதறினான் தன் சட்டையை கிழித்தான்.

எரியும் விளக்காய் அவன் நாடு, அதில் கருகிய திரிகளாய் அவன் இன மக்களின் உடல்கள், விளக்கு நேய்யாய் அவர் தம் குருதி. வேறு இனம் என்னும் ஒரே காரணத்தால் தன் நாடே அவர்களை அழிக்கிறது.

தீயில் இடப்பட்ட அவன் சொந்தங்கள், அவன் மனதை தீயிட்டு எரித்தனர். இவ்வளவு காலம் என் இனத்திற்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை, அவனது அந்த குற்ற உணர்வு, அவன் மீது படும் குளிர் மாலைக் காற்றையும் கனலக்கிப் பார்க்கிறது. அவனது கண்ணீர் மண்மீது பட்டு குருதி நிறமாய் தெரிகிறது.

மண் மீது துடிக்கும் பிண்டம் போல் அவன். கண்களில் சீவனதியாய் அவனது கண்ணீர். மணிக்கணக்கில் அழுது புரண்டான்.

நேரம் கடந்து வானம் இருட்டியது. தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டான். இப்போது என்ன செய்ய வேண்டும்... தனக்குள் கேட்டுக் கொண்டான்... எஞ்சி இருக்கும் தன் மக்களையாவது காப்பாற்ற வேண்டும்.

இரவெல்லாம் வலியை அவனால் தாங்க முடியவில்லை... இரவு முழுவதும் அவனால் உறங்க முடியவில்லை... எனினும் பள்ளியை மீண்டும் காணப் போகிறான்... தன் மிக நெருங்கிய நண்பர்கள், தன்னை பாராட்டி வளர்த்த ஆசிரியர்கள், அடிக்கடி அவனுடன் விளையாடும் அணில் குட்டிகள், தன் பள்ளிக்கூட மைதானத்தில் இருக்கும் மிகப்பெரிய அத்தி மரம், அதன் கீழ் சிதரிகிடக்கும் அத்திப் பழங்கள், இன்னும் பல, அவனுக்கு மீண்டும் கிடைக்கப்போவது.

புழுதி தட்டி எழுந்து நின்றான், தன் மக்களுக்காக போராட அவன்...

விடியல் வந்தது...

எண்ணமும், எழுத்தும்: கிருபா சரவணன்.