த ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்

ஒவ்வொரு காலங்களிலும் ஒவ்வொரு திரைப்படம் நமது மனதில் நீங்கா இடம் பிடிக்கும். அப்படி மனதில் பதியும் திரைப்படம் என்பது ஒரு மலரைச் சேகரிப்பதற்கு சமம் ஆகும். அது போல் பல மலர்களை இதுவரை நான் சேகரித்து வைத்து இருக்கிறேன் என்றாலும், தற்போது நான் சேகரித்த ஒரு புது அழகிய மலர், தமது பெயரிலேயே "மலர்களைக்" கொண்ட "The Flowers of War" என்கிற திரைப்படமாகும். "கிறிஸ்டியன் பேல்" இத்திரைப்படம் 2011 ஆம் ஆண்டு சீனாவின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான, "சாங் ஈமோவால்" (Zhang Yimou) இயக்கப்பட்டது. 

த ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்

கதைக்களம்:

முதல் காட்சியில் இருந்தே பார்ப்பவர்களை பரபரப்பு தொற்றிக் கொள்கிற ஒரு திரைக்கதை. 1937 ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது சீனோ-ஜப்பானீஸ் போர் நடக்கையில் சீனர்களின் தலைநகரமான நான்கிங் மாகாணத்தை ஜப்பானிய படை மெல்ல, மெல்ல முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. எங்கு காணினும் துப்பாக்கிச் சூடு, அலறி அடித்துக் கொண்டு ஓடுகிற பொதுமக்கள். எங்கெங்கும் புழுதி பரவி கிடக்கிறது.

முதல் சில நிமிடங்களுக்கு உள்ளாகவே நம்மை அந்தப் புழுதி சூழ்ந்து கொண்ட ஒரு உணர்வு. துப்பாக்கி குண்டுகளின் சப்தம் நேரடியாக நமது காதுகளிலும், கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட்ட சீனர்களின் குருதியின் நாற்றம் நமது நாசிகளில் ஊடுருவும் உணர்வைத் தருகிறது.

அங்குள்ள தேவாலய கிருத்துவ கான்வென்டில் பயிலும் பதின் வயது சீன மாணவிகள், போரில் மரணம் அடைந்த அவர்களது பாதிரியாரின் உதவியாளன், ஏறக்குறைய அந்தப் பெண்களின் பதின் வயதை ஒத்த "ஜார்ஜ்" என்பவன் அழைத்துக் கொண்டு ஓடுகிறான்.

ஜார்ஜ், அவனின் பாதிரியார் அவனுகிட்ட ஆணையின் படி அப்பெண்களைக் காப்பாற்ற தமது தற்காலிகப் புகலிடமான தேவாலயத்தை நோக்கி அவர்களை வழி நடத்தியபடியே ஓடுகிறான். சீனப் படையின் பல வீரர்களையும், பொது மக்களையும் கருணையின்றி கொன்று குவித்து விட்டு ஜப்பானியப் படை முன்னேறி வருகிறது. இந்தப் பகுதியில் சில சீன வீரர்கள் மட்டுமே உயிரோடு இருந்தனர். இருப்பினும் அவர்கள் புறமுதுகிட்டு ஓடாமல் எஞ்சிய சீன மக்களைக் காப்பாற்ற நெஞ்சுரத்தோடு போராடுகிறார்கள். ஒரு கட்டத்தில் சீன வீரர்கள், சீன மாணவிகளை, ஜப்பானிய படையினர் மற்றும் பீரங்கி வண்டி துரத்தி வந்து அவர்களின் மீத தாக்குதல் நடத்துவதைக் கண்டு, தங்கள் மீது வெடிகுண்டுகளைக் கட்டி தற்கொலைப் படையாக மாறி ஒரு குறிப்பிட்ட ஜப்பானிய படையினர் சிலரையும், சில பீரங்கி வண்டிகளையும் தகர்த்து ஜார்ஜையும், அப்பெண்களை அங்கிருந்து தப்பிக்க உதவி புரிகிறார்கள். இதனால் அந்த சீனப் படையில் இருவர் மட்டுமே எஞ்சி இருக்கின்றனர். அதில் ஒருவன் சீனப் படையின் தளபதி. மற்றொருவன் உயிருக்கோ போராடிக் கொண்டிருக்கும் ஒரு படைவீரன்.

இந்தச் சூழ்நிலையில் ஜான் மில்லர் என்கிற ஒரு அமெரிக்க வெட்டியான் அங்கு அந்தப் பாதிரியாரை நல்லடக்கம் செய்ய பணியமர்த்தப்படுகிறான். ஆனால் அவனும் ஜப்பானியப் படையின் தாக்குதலில் இருந்து தப்பித்து அந்தத் தேவாலயத்தை நோக்கி ஓடுகிறான்.

ஒரு வழியாக அனைவரும் அந்தத் தேவாலயத்தில் தஞ்சம் அடைகிறார்கள். அந்த மாணவிகளில் "ஷூ ஜோன்" என்கிற மாணவியின் தந்தை ஜப்பானியர்களுக்கு உதவி புரிவதால், அவள் அவரை வெறுக்கிறார். ஆயினும் மற்றவர்கள் அவளின் எண்ணம் புரியாமல் அவளின் தந்தையின் செயலுக்கு அவளை வெறுக்கிறார்கள்.

இந்த வேளையில் அந்த நகரத்தில் தாசி தொழிலில் ஈடுபட்டு வந்த சில பெண்களும் தேவாலயத்தில் தஞ்சம் அடைய முயற்சிக்கையில், அவர்களை அந்த மாணவிகள் உள்ளே வர அனுமதிக்கவில்லை. எனினும் தமது உயிர்களை காத்துக் கொள்ள அந்தத் தாசிகள் பலவந்தமாக அந்த தேவலயதிற்கு உள்ளே நுழைகிறார்கள். ஜான் மில்லர் அந்தத் தாசிகளில் ஒருத்தியான "யு மோ" வின் அழகில் ஈர்க்கப் படுகிறான். ஆயினும் அவனது விளையாட்டுத்தனத்தை கண்டு அவனின் உண்மையான நற்பண்புகளைப் புரியாமல், அவள் அவனை வெறுக்கிறாள்.

இந்த வேளையில் சீன படையின் தளபதி, குற்றுயிரும், கொலை உயிருமாக இருக்கும் படைவீரனை அங்குத் தாசிகள் இருக்கும் இடத்தில் இளைப்பாற விட்டு விட்டு தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வெளியே செல்கிறான்.

ஜான் மில்லர் விளையாட்டாக இறந்து போன பாதிரியாரின் உடையை உடுத்திக் கொள்கிறான். 
மறுபக்கம் மாணவிகள் அந்தத் தாசிகளை வெறுக்கிறார்கள், அவர்களுடன் சண்டையிடுகிறார்கள். அத்தருணத்தில் ஜப்பானியப் படை தேவாலயத்தில் நுழைந்து அந்தப் பெண்களை சீரழித்துக் கொல்ல முயல்கிறது.

துப்பாக்கிச் சத்தம் கேட்டு அதிலிருந்து தப்பிக்க "ஜான் மில்லர்", ஒரு மறைவான இடம் தேடுகிறான்.

அவர்களிடம் இருந்து தப்பிக்க பாதாள அறைக்குச் சென்று அந்தத் தாசிகள் மறைந்து கொள்கின்றனர். மேலும் அவர்கள் அந்த மாணவிகளையும் அங்கே வரச் சொல்கிறார்கள். ஆயினும் தாசிகளை வெறுக்கும் மாணவிகள், அவர்களின் உதவியை மறுத்து தேவாலயத்தில் உள்ள ஒரு நூலகத்தில் தஞ்சம் அடைகிறார்கள்.

ஜப்பானியப் படை வீரர்கள் அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து அவர்களைத் துப்பாக்கி முனையில் அடைய முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்க மாணவிகள் சிதறி ஓடுகின்றனர். ஜான் மில்லருக்கு திடீரென்று ஒரு யோசனை வருகிறது. அவன் பாதிரியாரின் உடை அணிந்திருப்பதால் வெளியே வந்து அந்த ஜப்பானிய படை வீர்கள் முன் தோன்றி தன்னை அந்தத் தேவாலயத்தின் பாதிரியார் போல் சித்தரித்து அவர்களிடம் அந்த மாணவிகளை ஒன்றும் செய்ய வேண்டாம் எனக் கூறுகிறான். அதைப் பொருட்படுத்தாத ஜப்பானியப் படை வீர்கள் ஒவ்வொரு மாணவியையும் சீரழித்து கொல்ல முனைகிறார்கள். இரண்டு மாணவிகளைச் சீரழித்து கொலையும் செய்கிறார்கள். மேலும் மற்றவர்களைச் சீரழிக்க முயல்கையில் வெளியில் இருந்து சீனப் படைத்தளபதி இரண்டு ஜப்பானிய வீரர்களை சுட்டுக் கொன்று விடுகிறார். இதைக் கண்ட மற்ற ஜப்பானிய படை வீரர்கள் வெளியே சென்று அவனைக் கொல்ல முற்படுகையில் அவன் பரவலாக வைத்த வெடிகளில் சிக்கி சிலர் மாய்ந்து போகிறார்கள். மேலும் அவன், தன்னையே தற்கொலைப் படை ஆயுதமாக்கி எஞ்சியவர்களையும் கொன்று தானும் மாய்ந்து போகிறான்.

தன்னையே பாதிரியாராய் சித்தரித்து மாணவிகளைக் காக்க முயன்ற ஜான் மில்லர் மீது "யு மோ" விற்கு இருந்த வெறுப்பு மெல்ல மறைகிறது.

இந்தச் சம்பவத்திற்கு பிறகு அங்கு வந்த ஜப்பானியப் படைத்தளபதி ஜான் மில்லரிடம் மன்னிப்பு கோரி மாணவிகளை ஒரு பாடல் பாடக் கோரிக்கை விடுகிறான். அவர்களும் ஜான் மில்லரின் ஆலோசனைப் படி ஜப்பானியப் படையிடம் தங்களின் உயிரை கத்துக் கொள்ள பாடுகின்றனர். அதில் மகிழ்ந்த ஜப்பானியப் படைத்தளபதி, மறுநாள் நடைபெறும் அவர்கள் போரின் வெற்றி விழாவிற்கு அனைவரையும் பாட அழைக்கிறான். இதற்குச் சம்மதிக்க மறுத்த ஜான் மில்லரிடம் இது தமது கட்டளை எனக் கூறி மறுநாள் அவர்களது விழாவில் பாட 13 மாணவிகளையும் அனுப்பச் சொல்லி உத்தரவு இடுகிறான்.

ஜப்பானியப் படை முன் பாட சென்றால் பாடல் முடிந்தவுடன், தாம் அனைவரையும் சீரழித்து கொன்று விடுவார்கள் என்று உணர்ந்த மாணவிகள் தற்கொலைக்கு முயல்கிறார்கள். அப்போது பாதாள அறையில் இருந்து வெளியே வந்த தாசிகள் தாங்கள் அவர்களுக்காகப் பாட செல்வதாகக் கூறுகிறார்கள், அதைக் கண்டு நெகிழ்ந்த மாணவிகள் அவர்களுக்கு தமது உடைகளை அளிக்கின்றனர்.

இந்த நிலையில் ஷூ ஜோனின் தந்தை ஜான் மில்லருக்கு அந்தத் தேவாலயத்தில் உள்ள ஒரு பழைய வாகனத்தைச் சரி செய்ய உதவுகிறார். மேலும் அவனிடம், தனது மகளைக் காப்பாற்ற வேண்டி ஒரு வழியையும் அவனுக்கு வழங்குகிறார்.

இரவு யு மோ விடம் தனது காதலைச் சொல்லி மறுநாள் தன்னை விட்டு நிரந்தரமாகப் பிரியப்போகும் அவளுடன் தனக்குள்ள உன்னதக் காதலில் இரண்டறக் கலக்கிறான். பிறகு, அனைத்து தாசிப் பெண்களையும் ஜான் மில்லர் சிகை அலங்காரமெல்லாம் செய்து முழுவதுமாய் அவர்களை பதின் பருவ மாணவிகளைப் போல் மாற்றுகிறான். அப்போது தான் தெரிந்தது மறுநாள் பாட வேண்டும் என்று 13 பேர் என்ற எண்ணிக்கையில் ஒருவர் குறைந்து 12 பேர் தான் உள்ளனர் என்று. என்ன செய்வதென்று அனைவரும் அறியாமல் விழிக்க, ஜார்ஜ் தன்னையே பெண்ணாக மாற்றி அவர்களுடன் பாட அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறான். அனைவரும் முதலில் மறுத்தாலும் பிறகு அந்த மாணவிகளைக் காக்கும் பொருட்டு அவனை ஒரு பெண் போல் மாற்றுகிறார்கள்.

விடிகிறது, ஜப்பானியப் படையினர் பாடப் போகும் பெண்கள் அனைவரையும் ஒரு வாகனத்தில் ஏற்றிப் போகிறார்கள்.

ஜான் மில்லர் கனத்த இதயத்துடன் அவர்களை வழியனுப்பிவிட்டு மற்ற மாணவிகளை அந்த நகரை விட்டு வெளியே கொண்டு போய் காப்பாற்றி விடுகிறான்.

திரைப்பட டிரெய்லர்:

திரைப்படக் குழு:

ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட, "கெலிங் யான்" (Geling Yan) எழுதிய "13 ஃப்லாவர்ஸ் ஆஃப் நான்ஜிங்" என்கிற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு "லியு ஹெங்" (Liu Heng) வடித்திருக்கும் அருமையான திரைக்கதையை மிகச் சிறப்பாக செதுக்கி இருக்கிறார் இயக்குநர் "சாங் ஈமோ".

வாழும் மனிதர்களாக நடித்த நடிகர்களை விட, மரணித்த அல்லது கொடுமைப்படுத்திக் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணங்களாக நடிக்கும் நடிகர்களை அதிகமாகக் கொண்ட ஒரு திரைப்படத்தில் கருணை, தியாகம் என்கிற நெகிழ்ச்சியான  அனுபவத்தைத் தருவதென்பது ஒரு நம்பமுடியாதக் விடயம். இது இயக்குநர் "சாங் ஈமோ" அவர்களின் மிகப் பெரிய சாதனை.

திரைப்படத்தில் நடித்த அத்தணை நடிகர்களும் தங்களது பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்திருக்கின்றனர். குய்கங் சென் (Qigang Chen) சிறப்புற இசை அமைத்துள்ள இத்திரைப்படத்தை பெய்காங் மெங் (Peicong Meng) மிகவும் விறுவிறுப்பாகப் படத்தொகுப்பு செய்துள்ளார்.

மிகக் குறிப்பிடும்படியான பங்களிப்பை கொடுத்திருக்கும் இன்னொரு கலைஞர், இந்தத் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர், சஹோ க்சியோடிங் (Zhao Xiaoding). போர்க்களப் புழுதியாகட்டும், தேவாலய பிரம்மாண்டம் ஆகட்டும், அவர் கையாண்ட ஒளி அமைப்பு, திரைப்படத்தில் கையாண்டிருக்கும் காட்சிகளில் ஒளி நிலை (mood), காட்சிகளின் கோர்வை மற்றும் எந்தவிதத்திலும் ஒரு திரைப்படத்திற்கான செயற்கை தன்மை வந்துவிடாமல் பார்ப்பவரை படத்தோடு ஒன்றச் செய்கிற வலிமை என்று அவரின் பணியை பாராட்டிக் கொண்டே இருக்கலாம். குறிப்பாக அதிக நிறங்கள் இல்லா ஏறக்குறையக் கருப்பு வெள்ளை போன்ற போர் காட்சிகள் மற்றும் கருப்பு உடை அணிந்த பள்ளி மாணவிகளின் காட்சிகளோடு, அந்தக் காட்சிகளுக்கு முற்றிலும் முரணான வண்ணங்கள் மிகுந்த ஆடைகள் மற்றும் அலங்காரங்களோடு வலம் வரும் தாசிகளுடைய காட்சிகளாகட்டும். தேவாலயத்தின் வண்ணமிகு அலங்காரக் கண்ணாடிகளில் இருந்து வரும் ஒளி ஆகட்டும். துப்பாக்கி குண்டுகளால் சேதமடைந்த கண்ணாடிகளில் இருந்து துளையிடப்பட்ட வழியில் காட்சிப்படுத்தப்பட்ட காட்சிகளாகட்டும் ஒளிப்பதிவில் ஒரு தனி முத்திரையே பதித்து விட்டார்.

முடிவுரை:

பரபரப்பும், பதற்றத்தோடும் தொடங்கியக் கதைக்களம். தியாகம், வீரம், காதல், காமம், வெறுப்பு, அன்பு, கருணை என்கிற அனைத்து உணர்வுகளையும் பார்வையாளர்களையும் உணரச் செய்கிறது என்றால் அது மிகையல்ல.