துரியோதனன் ஏன் சொர்க்கத்திற்கு சென்றான்?

ஒரு மனிதன் இறப்பிற்கு பின் எங்கு செல்ல வேண்டும் என்று நிர்ணயிப்பவர் யமதர்மராஜன். இவர் இறப்பின் கடவுள் ஆவார். ஆகவே நல்ல வினைக்கும் தீய வினைக்கும் இடையில் தொடர்ந்து ஒரு போர் நடந்தவண்ணம் உள்ளது. இதில் வெற்றி பெறும் வினை மற்றொன்றை முந்திச் செல்கிறது.

துரியோதனன் ஏன் சொர்க்கத்திற்கு சென்றான்?

இந்து மத தத்துவங்கள் மனிதர்களின் கர்ம வினைகளை இரண்டாக பிரிக்கிறது. ஒன்று பாவம் மற்றொன்று புண்ணியம். மற்றவர்களின் நலனுக்காக எந்த ஒரு சுயநலமும் இல்லாமல் இரக்க நோக்கத்துடன் செய்யும் செயல்கள் நல்ல கர்மங்கள் அல்லது புண்ணியம் என்று அறியப்படுகிறது. இதற்கு மாற்றாக, தீய வினை அல்லது பாவம் என்று அறியப்படுவது என்னவென்றால், பிறருக்கு தீங்கு உண்டாகும் பொருட்டு செய்யும் செயல்கள், தீய எண்ணத்துடன் செய்யும் செயல்கள் ஆகியவை பாவம் ஆகும். மேலும், இந்த செயல்களை செய்ய விரும்புபவரின் நோக்கம் மிகவும் முக்கியத்துவதும் வாய்ந்ததாக கருதபப்டுகிறது. அது இரக்கமுள்ள செயலோ அல்லது தீய செயலோ, அதற்கேற்ற தீர்ப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

தீமை செய்தவர்கள் இறப்பிற்கு பின் நரகத்திற்கு செல்வதாகவும், நன்மை செய்தவர்கள் தங்களின் இறப்பிற்கு பின் சொர்க்கத்திற்கு செல்வதாகவும் நம்பப்படுகிறது. 

இப்படி நடந்த பெரிய போர்களில் ஒன்று மஹாபாரதம். மகாபாரத போரின் முடிவில், கௌரவர்கள் நரகத்திற்கு அனுப்பப்பட்டனர். ஆனால் கௌரவர்களில் ஒருவரான துரியோதனன் மட்டும் அவனின் தனிப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக சொர்கத்திற்கு அனுப்பப்பட்டான். ஆம், துரியோதனன் , அவனுடைய இறப்பிற்கு பின் சொர்கத்திற்கு சென்றதாக நம்பப்படுகிறது. மகாபாரத இதிகாசத்தில் பாண்டவர்கள் தர்மத்தை கடைபிடிப்பவர்களாகவும் , கௌரவர்கள் அதர்மத்தை கடைபிடிப்பவர்களாகவும் நாம் அறிந்திருக்கும் வேளையில், கௌரவர்களில் முதன்மையானவனான துரியோதனன் எப்படி சொர்க்கத்திற்கு சென்றிருக்க முடியும்? இது எவ்வாறு நடைபெற்றது? இதனை நாம் கண்டறிவோம் வாருங்கள்..

துரியோதனன் ஒரு தயாள குணம் மிக்க ஒரு அரசன். அன்பு நிறைந்த அரசன். நீதி வழியில் தன் ராஜ்ஜியத்தை வழி நடத்தி வந்தவன். துரியோதனன் பற்றிய பல தகவல்கள் அவனுக்கு சாதகமாக இருக்கும் அதே நேரத்தில் ஒரு வெற்றிகரமான அரசனாக அவனுடைய திறமை மற்றும் சாதனையை வெளிபடுத்தும் ஒரு நிகழ்வு உள்ளது. புராணத்தின்படி, போர்க்களத்தில் துரியோதனன் இறக்கும் தருவாயில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவனுக்கு அருகில் அமர்ந்திருந்தார். அப்போது துரியோதனன் பகவான் கிருஷ்ணரிடம், "நான் எப்போதும் ஒரு நல்ல அரசனாக இருந்திருக்கிறேன், நான் இறந்தாலும், எனக்கு சொர்க்கத்தில் நிச்சயம் இடம் கிடைக்கும், ஆனால், கிருஷ்ணா , நீ தான் துயரத்தில் எப்போதும் இருப்பாய்." என்று கூறினான். இதனை துரியோதனன் கூறியவுடன், வானுலகத்தில் இருந்தவர்கள் துரியோதனன் மீது பூமாரி பொழிந்தனர்.  இந்த நிகழ்வு துரியோதனன் கூறியது முற்றிலும் உண்மை என்பதைக் குறித்தது. 

அன்பான, புரிந்து கொள்ளக்கூடிய, நேர்மையான குணம் கொண்ட கர்ணன், துரியோதனின் நம்பிக்கைக்குரிய நண்பன் ஆவான். அதனால், துரியோதனனின் மனைவிக்கும் கர்ணன் சிறந்த தோழனாக விளங்கினான். ஒரு முறை துரியோதனன் இல்லாதபோது, கர்ணனும் துரியோதனின் மனைவியும், தாயம் விளையாடிக் கொண்டிருந்தனர். வாசற்கதவை நோக்கி துரியோதனன் மனைவி அமர்ந்திருந்தாள். கர்ணனின் பின்புறம் வாசற்கதவை நோக்கி இருந்தபடி அமர்ந்திருந்தான். கர்ணன் விளையாட்டில் துரியோதனன் மனைவியை ஜெயிக்கும் தருவாயில் இருந்தான். அந்த நேரம், துரியோதனன் உள்ளே நுழைந்தான். அந்த காலத்தில், பெரியவர்களைக் கண்டவுடன், பெண்கள் எழுந்து நிற்பது வழக்கம். அதுவும் துரியோதனன் ஒரு அரசனாக இருந்தபடியால், அரசியாகிய அவன் மனைவி , உடனே எழுந்து நின்றாள். ஆனால் அவள் தோல்வியடையும் தருவாயில் உள்ளதால், எழுந்து போகிறாள் என்று தவறாக எண்ணிய கர்ணன், அவளின் சேலையை பிடித்து இழுக்கும் நேரம், அவளுடைய சேலையில் உள்ள நூல்கள் அறுந்து மணிகள் சிதறின. அந்த நேரம்  துரியோதனன் உள்ளே நுழைந்தான். ஒரு அரசனின் கோபத்தைத் தூண்டும் வகையில் நடந்த நிகழ்வை துரியோதனன் கையாண்ட விதம் சிறப்புக்குரியது. அங்கு நடந்தது என்ன என்பது முற்றிகும் தெரியாத அந்த நேரத்தில் கூட துரியோதனன் கேட்ட வார்த்தை, அறுந்து விழுந்த மணிகளை எடுக்கவோ, கோர்க்கவோ? என்பது. இந்த நிகழ்வில் இருந்து துரியோதனன் தனது மனைவியிடமும்  நண்பனிடமும் கொண்ட நம்பிக்கை வெளிப்படுகிறது. மேலும் அவனின் தாழ்மையான குணம் வெளிப்படுகிறது. 

நீதி மற்றும் நடுநிலை தவறாமை :
கர்ணன் குந்தி தேவியின் மகன் என்பது யாருக்கும் தெரியாது. துரியோதனன் உட்பட அனைவரும் அறிந்தது அவன் சூத்திர குலத்தை சேர்ந்தவன் என்பது மட்டுமே. ஆகவே ஜாதி பிரச்சனையால் கர்ணன் பெருந்துயர்களை அனுபவிக்க வேண்டி இருந்தது. சுயம்வரத்தில் கலந்து கொள்ள கர்ணன் நினைக்கும்போது, திரௌபதி கூட இதனைக் குறித்து கேள்வி எழுப்பினாள். அந்த சூழ்நிலையில் துரியோதனன் மட்டுமே, ஒரு மாவீரன், முனிவர் மற்றும் ஒரு தத்துவ ஞானி போன்றவர்களுக்கு எந்த ஒரு ஜாதியும் மூலமும் இல்லை, அவர்கள் பிறப்பால் பெரியவர்கள் இல்லை என்றாலும் அவர்கள் வளர்ப்பால் பெரியவர்களே  என்று கர்ணனுக்கு சாதகமாக பேசினான். இந்த சம்பவத்தால், துரியோதனனுக்கு ஜாதி வேறுபாட்டின் மீது நம்பிக்கை இல்லை என்பதும் அனைவரும் சமம் என்ற கருத்து இருந்ததும் நிரூபிக்கப்படுகிறது.  இதே போல் துரியோதனன் ஒரு நல்ல அரசன், நண்பன், கணவன் மற்றும் மனிதன் என்பதை விளக்கும் நிகழ்வுகள் பல உள்ளன. உண்மையில் சகுனியின் தீய நோக்கத்திற்கு பலியானவன் துரியோதனன் . தாய் மாமன் சகுனியின் தவறான வழிநடத்துதல் காரணமாக துரியோதனன் தவறான செயல்கள் புரிந்தான். பழிவாங்கும் எண்ணம் மனதில் கொழுந்து விட்டு எரிந்த காரணத்தால், திருதராஷ்டிரன் வம்சத்தையே முழுவதும் அழிக்கும் எண்ணத்துடன் அவன் மகனையே பகடையாக வைத்து கௌரவர்களை அழிக்க எண்ணினான் சகுனி. சகுனியின் மீது வைத்த நம்பிக்கையால் துரியோதனன் அனைத்து தீங்கையும் இழைத்தான். சொர்க்கத்தில் துரியோதனனைகே கண்ட பாண்டவர்கள் யமதர்மனிடம் காரணம் கேட்கும்போது யமதர்மன் இந்த விளக்கத்தை அளித்தார். மேலும், துரியோதனன் செய்த பாவத்திற்கான தண்டனையை நரகத்தில் கழித்த பின் அவனுடைய நற்செயல்களுக்காக சொர்கத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.