காவடி எடுக்கும் பழக்கம் அசுரர்களின் குருவால் ஏற்பட்டதா

முதன்முதலில் காவடியை சுமந்து முருகனின் அருள் பெற்றவரான இடும்பன் முருகனிடம் தன்னைப் போல் காவடி சுமந்து வரும் பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

காவடி எடுக்கும் பழக்கம் அசுரர்களின் குருவால் ஏற்பட்டதா
crtedit to wikipedia

காவடி எடுக்கும் பழக்கம் அசுரர்களின் குருவால் ஏற்பட்டதா?

இடும்பாசுரன் என்பவன் ஒரு அசுரன். இவன் வில் வித்தையில் கை தேர்ந்தவன். அசுரர்களான சூரபத்மன், பானுகோபன், கஜமுகாசுரன், சிங்கமுகன் ஆகியோருக்கு குருவாக இருந்தவன் இடும்பாசுரன். காவடி எடுக்கும் பழக்கத்தை இடும்பன் ஆரம்பித்து வைத்தான் என்பதை ஒரு சிறு கதையின் மூலமாக காணலாம் வாருங்கள். 

காவடி எடுக்கும் பழக்கம்  இடும்பனால் ஆரம்பிக்கப்பட்டது 

அசுரர்கள் அழிக்கப்பட்டதால், அசுரர்களின் குருவான இடும்பன் இடும்பவனத்துக்கு தன் மனைவி இடும்பியுடன் சென்று சிவபூஜை மேற்கொண்டான். அவ்வனம் வழியாக சென்ற அகத்தியரிடம் தன்னை அவருடைய சீடனாக ஏற்கும்படி பணிந்தான். இடும்பன் அசுரனாக இருந்த போதிலும் அவனது உயர்ந்த எண்ணத்தைப் புரிந்து கொண்ட அகத்தியர், அவனை தன்னுடைய சீடனாக ஏற்றுக்கொண்டார்.

ஒரு சமயம் சிவன் அகத்தியரிடம் சிவன்மலையையும், சக்திமலையையும் தென்னிந்தியாவில் வைக்கும்படி கூறினார். சிவன் கூறியபடியே அந்த இரு மலைகளையும் தன்னுடைய சீடரான இடும்பனிடம் தென்னிந்தியாவில் கொண்டு சேர்க்குமாறு ஆணையிட்டார் அகத்தியர். அதை ஏற்ற இடும்பன் சிவனை நினைத்து பூர்சவனத்தில் உள்ள சிவமலை, சக்திமலையை சிவனின் அருளால் கிடைத்த பிரம்மதண்டத்தையும்,நாகங்களையும் வைத்து கட்டி காவடிப் போல் சுமந்து சென்றுகொண்டிருந்த போது திருவாவினன்குடி (பழனி அடிவாரம்) என்ற இடத்தில் இளைப்பாற மலைகளை இறக்கி வைத்தான்.

சிறிது நேரம் இளைப்பாறிய பின்னர் இவ்விரு மலைகளையும் தூக்க முற்பட்டான். ஆனால் அந்த மலைகளின் பாரம் அதிகமாக இருந்ததால் அவனால்    தூக்க முடியவில்லை. அதனால் அந்த மலையின் மீது விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை பார்த்து தனக்கு இவ்விரு மலைகளையும் தூக்க உதவும்படி கேட்டான். ஆனால் அந்த சிறுவனோ அவனுக்கு உதவி புரியாமல் இது தன்னுடையது என்று கூறினான். இதை கேட்ட இடும்பன் கோபத்துடன் அச்சிறுவனுடன் சண்டையிட்டான். இடும்பன்  சண்டையிடும் போது அச்சிறுவன் சாதாரண சிறுவன் அல்ல அவனே முருகப் பெருமான் என்றும் அவனால் தான் இந்த மலைகளின் எடை அதிகமாகி உள்ளது என்பதையும்  உணர்ந்தான். சண்டையின் முடிவில் முருகர் இடும்பனை கொன்றார். இதை அறிந்த இடும்பி தன் கணவருக்கு உயிர் அளிக்குமாறு முருகனிடம் வேண்டியதால், அவள் வேண்டுகோளுக்கிணங்கி இடும்பனை உயிர் பெற செய்தார். 

முதன்முதலில் காவடியை சுமந்து முருகனின் அருள் பெற்றவரான இடும்பன் முருகனிடம் தன்னைப் போல் காவடி சுமந்து வரும் பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அதனால் அன்றிலிருந்து காவடியை யார் சுமந்து வருகிறார்களோ, அவர்களுக்கு முருகனின் அருள் பரிபூரணமாக கிடைப்பதோடு, அவர்கள் வேண்டும் அனைத்தும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. காவடியை தூக்கி சென்று  இறைவன் திருவடியில் வைப்பது என்பது நம் பாவங்களை சுமந்து இறைவன் திருவடியில் வைப்பதற்கு சமம். இதனால் நமக்கு  முக்தி கிடைக்கும்.