தலை முடி வளர்ச்சிக்கு மூலிகை எண்ணெய் 

தலை முடிக்கு தினமும் எண்ணெய் தேய்ப்பதனால், முடியின் வேர்க்கால்கள் குளிர்ச்சியடைந்து பலமாகின்றன. இந்த எண்ணெயை வீட்டிலேயே தயாரிக்க ஒரு வழி உண்டு. அதனை பற்றி கூறுவது  தான் இந்த தொகுப்பு. 

தலை முடி வளர்ச்சிக்கு மூலிகை எண்ணெய் 

தலை முடி வளர்ச்சியை அதிகரிக்க நாம் பல வழிகளை பின்பற்றுகிறோம். இரசாயன கலவையில் தயாரிக்கப்படும் ஷாம்புகள் மற்றும் எண்ணெய்களால் தலை முடி வலுவிழந்து பல பிரச்னை ஏற்படுகிறது. அதற்கான தீர்வுகளை தேடி தேடி அலைகிறோம். முடிகளின் பலத்திற்கு எண்ணெய் மிகவும் அவசியம். 
வீட்டிலேயே இந்த மூலிகை எண்ணெய்யை தயார் செய்து தலை முடிக்கு தடவி வந்தால் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை நிச்சயம் பெறலாம்.முடி கொட்டுவது, பொடுகு தொல்லை, அடர்த்தி குறைவது, இள நரை போன்றவை தடுக்க படும். நமக்கு எளிதாக கிடைக்கும் பொருட்களை கொண்டு தயாரிப்பதால் செலவும் குறையும்.

 மூலிகை எண்ணெய் செய்ய தேவையான பொருட்கள்:
* சுத்தமான தேங்காய் எண்ணெய் - ஒன்றரை கப் 
* செம்பருத்தி இலை - 12-15 nos 
* செம்பருத்தி பூ - 6nos 
* கறிவேப்பிலை - 1 கப் 
* கரிசலாங்கண்ணி/பிரிங்கராஜா - ½ கப் 
* கீழாநெல்லி - ½ கப் 

பொருட்களின் விபரம்:
* சுத்தமான தேங்காய் எண்ணெய் - லேசானது, இயற்கையானது மற்றும் தலை  முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
* செம்பருத்தி இலை மற்றும் பூக்கள் - தலை முடியை மென்மையாக்குகிறது, பராமரிக்கிறது , முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது . சிவப்பு நிற பூக்களை காம்புகளை அகற்றிவிட்டு  பயன்படுத்தலாம். 
* கறிவேப்பிலை - முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இள நரையை தடுக்கிறது. 
* கரிசலாங்கண்ணி - முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. பொடுகை போக்குகிறது. இந்த பூக்களில் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்கள் உண்டு. எந்த நிறத்தையும் பயன்படுத்தலாம்.
* கீழாநெல்லி இலைகள் - பொடுகை போக்கி இள  நரையை தடுக்கிறது.

செய்முறை:
* எண்ணெய்யை தவிர மற்ற எல்லா பொருட்களையும்  நன்றாக கழுவி, வீட்டிற்குள் ஒரு துணியை விரித்து காய வைக்க வேண்டும். 
* எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு பேஸ்ட் போல் ஆகும் வரை அரைக்கவும்.
* தேங்காய் எண்ணெயை சூடாக்கவும். இந்த சூடான எண்ணெய்யில் அரைத்த விழுதை போடவும். போட்டவுடன் எண்ணெயில் அந்த விழுது கொதிக்க ஆரம்பிக்கும். அடுப்பை மெதுவான தீயில் வைத்து, தண்ணீர் வற்றும் வரை கிளறவும். சிறிது நேரத்தில் கொதி அடங்கி விடும். நன்றாக ஆற வைக்கவும். பிறகு அந்த பாத்திரத்தை மூடி வைத்து 5-6 மணிநேரம் அப்படியே விட்டு விடவும்.
* 6 மணி நேரத்திற்கு பிறகு , இந்த எண்ணெயை ஒரு மஸ்லின் அல்லது காட்டன் துணியை எடுத்து வடிகட்டவும். எண்ணெய்யை முழுவதுமாக பிழிந்து எடுக்கவும்.
* இந்த வாசனை மிகுந்த எண்ணெய்யை ஒரு கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி வைக்கலாம். குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது 6 மாதங்கள் வரை கெட்டு போகாமல் இருக்கும். 

பயன்படுத்தும் முறை :
இந்த எண்ணெய்யை தலையில் ஊற்றி, கை  விரல்கள் கொண்டு உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். 5 நிமிடங்கள் சூழல் வடிவத்தில் மசாஜ் செய்யவும். இதனால் தலையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மசாஜ் செய்தவுடன் 20 நிமிடங்கள் கழித்து, வீட்டில் தயாரிக்கப்பட்ட ஷாம்பூவால் தலையை அலசவும்.
எப்படி பயன்படுத்தலாம்:
* தினசரி பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய்க்கு மாற்றாக இதனை பயன்படுத்தலாம்.
* இரவில் தலையில் தேய்த்துவிட்டு, மறுநாள் காலை ஷாம்பூவால் தலையை அலசலாம்.
* வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் குளியலுக்கு இதனை பயன்படுத்தலாம்.
* இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால், பொடுகு ஏற்படுவது குறைகிறது. வறண்ட தலை முடி வலுப்பெறுகிறது, முடிகள் உடைவது தடுக்கப்படுகிறது, மற்றும் தலை முடி தொடர்பான பல பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறது.

இந்த எண்ணெய்யில் பயன்படுத்தப்படும் பொருட்களை வீட்டிலேயே வளர்க்கலாம். தலை முடியை பராமரிக்க அதிகமாக செலவு செய்ய வேண்டிய  அவசியம் இல்லை.