திருவாதிரை திருநாள் வரலாறு

திருவாதிரை திருநாளன்று ஆ…ருத்ரா என்று சொல்லும் அளவிற்கு அழகு கோலத்தில் ருத்ரன் நடராஜராக அற்புதக் காட்சி தருகிறார்.

திருவாதிரை திருநாள் வரலாறு

திருவாதிரை திருநாள் வரலாறு

மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்து வரும் நாளில் திருவாதிரை திருநாள் கொண்டாடப்படுகிறது. தில்லையில் தங்க சபை என்று கூறப்படும் கனகசபையில் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடி ஆருத்ரா தரிசனத்தை அருளும் நாள் இத் திருவாதிரை திருநாளாகும். அனைத்து சிவத்தலங்களிலும் திருவாதிரை திருநாளில் விஷேச பூஜைகள் நடைபெறும். 

திருவாதிரை தினத்தில் ஆருத்ரா தரிசனம் என்று ஏன் குறிப்பிடுகிறார்கள்

  1. திருவாதிரை திருநாளன்று ஆ…ருத்ரா என்று சொல்லும் அளவிற்கு அழகு கோலத்தில் ருத்ரன் நடராஜராக அற்புதக் காட்சி தருகிறார் என்பதால் கூறுகிறார்கள். 
  2. சிவனுக்கு உகந்த நட்சத்திரம் ஆதிரை என்பதால் இந்த நட்சத்திரத்திற்கு திரு என்ற அடைமொழி சேர்த்து திருவாதிரை என்று குறிப்பிடுகிறார்கள்.
  3. திருவாதிரை நட்சத்திரத்தின் வடமொழி சொல் அர்த்ரா. அர்த்ரா திரிந்து ஆருத்ராவானது என்ற கூற்றும் உள்ளது. 

நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆட காரணமாக இருந்த நிகழ்வு 

கர்மாவே பெரிது, கடவுள் இல்லை என்று கூறிய முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து, தாருகாவனத்தில் சிவனுக்கு எதிராக வேள்வியை நடத்தினர். அவர்களுக்குப் பாடம் புகட்டுவதற்காக சிவன் பிட்சாடனர் ரூபமெடுத்து பிட்சைக் கேட்டு, முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். பிட்சாடனரைக் கண்ட முனி பத்தினிகள் அனைவரும், அவரின் பின்னால் போகத் தொடங்கினார்கள். இந்த செயலைக் கண்டு மிகுந்த கோபம் கொண்ட முனிவர்கள். அவர்கள் நடத்தி கொண்டிருக்கும் வேள்வித்தீயினில் இருந்து புலி, மத யானை, உடுக்கை, முயலகன், தீப்பிழம்பு, பாம்பு ஆகியவற்றை வரவழைத்து சிவபெருமானின் மேல் ஏவி விட்டார்கள். சிவபெருமானோ புலியை கொன்று அதன் தோலை ஆடையாக அணிந்து கொண்டும், மத யானையைக் கொன்று அதன் தோலைத் தரித்துக் கொண்டும், வலது கரத்தில் உடுக்கையையும், இடது கரத்தில் அக்னியை ஏந்தி கொண்டும், பாம்பை ஆபரணங்களாக அணிந்து கொண்டும், முயலகனின் மேல் வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கியபடி நடனம் ஆடி முனிவர்களின் அகங்காரத்தை போக்கி சிவனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்பதை உணர்த்தியதோடு, அவரின் திருவடியில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு மோட்சத்தை அருளிய சிவபெருமான். ஆனந்த தாண்டவம் ஆடி நடராஜராக விஸ்வரூப தரிசனம்( ஆருத்ரா தரிசனம்) கொடுத்த நாள் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளாகும்.

ஆருத்ரா தரிசன திருநாளன்று திருவாதிரை நட்சத்திரம், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும் தருணத்தில் தெய்வீக சக்தி (சிவனின் சக்தி) அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால்

மார்கழி திருவாதிரை நோன்பு இருக்கும் பெண்களுக்கு சிவ பார்வதியின் அருளால் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும். விரதம் இருக்கும் கன்னி பெண்களுக்கு நல்ல கணவன் கிடைப்பார், இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் நமசிவாய என்ற திருமந்திரத்தை மனதார சொன்னாலே வேண்டுதல் நிறைவேறுவதோடு, பாவங்கள் நீங்கி இறைவனின் அருளால் பேரின்பம் கிடைக்கும். இத்திருநாளன்று சிதம்பரம் நடராஜ தரிசனத்தை கண்டாலே முக்தி கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளன.