உங்கள் சருமம் சொல்ல விரும்பும் செய்தி!

உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி உங்கள் சருமம் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

உங்கள் சருமம் சொல்ல விரும்பும் செய்தி!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். இந்த பழமொழி நாம் அனைவரும் அறிந்ததே. நம் உடலுக்கு உள்ளிருக்கும் செயல்பாடுகள் நமது முகத்தில் பிரதிபலிக்கும். ஆரோக்கியமான உடல் அழகான சருமத்தைக் கொண்டிருக்கும். நம் உடலின் நிலையை வெளிபடுத்தும் அறிகுறிகளாக சரும நிலை உள்ளது. ஒரு நாள் காலையில் விழித்தவுடன் கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும் போது ஒரு சிறிய பரு உங்கள் முகத்தில் உள்ளது. இதனைக் கண்டவுடன், நீங்கள் புதிதாக பயன்படுத்தும் ஒப்பனை பொருளின் மீது உங்களுக்கு சந்தேகம் உண்டாகும். ஆனால் இது சரியா?

நம் உடல் உறுப்புகளில் மிகவும் பெரியது நம்முடைய தோல். சருமத்திற்கு அடியில் எதாவது தவறு ஏற்படும்போது அது வெளியில் பிரதிபலிக்கிறது. இதே போல், நம் உடலில் எதாவது கோளாறு உண்டாகும்போது, அதன் அறிகுறிகளை நமது சருமத்தில் நாம் காணலாம். பொதுவாக நாம் இத்தகைய அறிகுறிகளை வெறும் தடிப்பு அல்லது சிறிய பிரச்சனை என்று புறக்கணிக்கிறோம். ஆனால் உங்கள் சருமம் உங்களிடம் பல விஷயங்களை சொல்ல விழைகிறது.

அரிக்கும் சருமம் :
சருமத்தில் அரிப்பு ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, எக்ஸிமா நோயின் அறிகுறியாக இருக்கலாம். அல்லது ஒவ்வாமை ஏற்படுத்தும் ஏதாவது பொருளை சாப்பிடுவதால் அல்லது தொடுவதால் உண்டாகலாம். உங்கள் உடலில் எதோ ஒரு பிரச்சனை உள்ளதை சொல்லும் ஒரு அறிகுறி தான் இந்த சரும அரிப்பு. உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாமல் இருப்பதும் சரும அரிப்பிற்கு ஒரு காரணமாக இருக்கலாம். உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும் செழிப்பாகவும் இருக்க தினமும் அதிக அளவு தண்ணீர் பருகவும். தொடர்ந்து இந்த பிரச்சனை இருந்தால் தோல் மருத்துவரை அணுகலாம். ஆஸ்துமா மற்றும் தூசியால் உண்டாகும் காய்ச்சல் காரணமாகவும் இந்த தோல் அரிப்பு ஏற்படலாம்.

கன்னத்தில் பரு:
தாடை மற்றும் கன்னங்களில் பருக்கள் பெருகிக் கொண்டே இருப்பது ஹார்மோன் சமச்சீரின்மை காரணமாக இருக்கலாம். பொதுவாக பெண்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு பெண்களுக்கு உண்டாகும் பிரச்சனைகளில் பருக்கள் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
ஹார்மோன் சமச்சீரின்மை காரணமாக பருக்கள் தோன்றினாலும் , அவை அதிகரிக்க மன அழுத்தம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. மாதவிடாய் காலங்களில் பல பெண்களுக்கு பருக்கள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. இதற்குக் காரணம், அவர்கள் அந்த நாட்களில் மிகவும் கவலையுடன் இருப்பார்கள், மற்றும் ஹார்மோன்கள் மாதவிடாய் காலத்தில் அதிக செயல்பாட்டுடன் இருக்கும்.

தேவையற்ற முடி வளர்ச்சி :
பெண்களுக்கு உதட்டின் மேல் பகுதியில் மீசை போல் வளரும் முடி , முகவாய்க்கு கீழே தாடி போல் வளரும் முடி, தொப்புளுக்கு கீழே வளரும் முடி, போன்றவை தேவையற்ற முடி வளர்ச்சியாக  பார்க்கப்படுகிறது. இவை அனைத்தும் ஹார்மோன் சமச்சீரின்மையின் அறிகுறிகள் தான். பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுவது சினைப்பை கட்டிகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். முடி வளர்ச்சிக்கும் ஹார்மோன்களுக்கு நேரடி தொடர்பு உள்ளது. உங்களுக்கு தேவையற்ற முடி வளர்ச்சி அதிகமாக இருந்தால் தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். இதனுடன் இணைந்து எடை குறைப்பு , ஒழுங்கற்ற மாதவிடாய், போன்ற பிரச்சனைகளும் இருந்தால் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.

கருவளையம் :
கண்ணுக்கு கீழே உண்டாகும் கருவளையம் மன அழுத்தத்தின் அறிகுறியாகும். அதிக அழுத்தம் ஏற்படுத்திக் கொள்வது, தூக்கத்தில் ஏற்படும் குறைபாடு போன்றவை கரு வளையத்தை உண்டாக்கும் காரணங்களாகும். வயதாகும்போது, கண்களை சுற்றியுள்ள பகுதில் உள்ள கொழுப்பு சுருங்கி, கன்னத்திற்கும் கண்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி அதிகமாகிறது.
வயது அதிகரிப்பது, நீர்ச்சத்து குறைபாடு, தூக்க குறைபாடு, அதிக மனஅழுத்தம், சரியாக சாப்பிடாமல் இருப்பது, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை கண்ணுக்கு கீழ் கருவளையம் உண்டாவதற்கான காரணங்களாகும். பல சிகிச்சைகள் மூலம் கருவளையம் மறையாமல் இருந்தால் மருத்துவ உதவியை நாடலாம்.  வாழ்வியல் முறையில் சிறு மாற்றங்களை உண்டாக்குவதாலும் இவற்றைப் போக்கலாம்.

சிவப்பு திட்டுக்கள் :
சிவப்பு திட்டுக்கள் எல்லாமே பருக்கள் அல்ல. சருமம் சிவந்து போவது, மற்றும் வறண்ட சருமம் போன்றவை ரோசசியா என்னும் சரும கோளாறின் அறிகுறியாக இருக்கலாம். இந்த நிலை, மரபு ரீதியாகவும் வரலாம் அல்லது சுற்றுப்புற சூழலும் ஒரு காரணியாக இருக்கலாம். காரமான உணவுகள் மற்றும் தொற்றுகள் மூலம்  இந்த பாதிப்பு அதிகரிக்கலாம்.

வறண்ட உதடு:
பருவநிலை மாற்றம், உதடுகளை சப்பிக் கொண்டே இருப்பது அல்லது நீர்ச்சத்து குறைபாடு போன்றவற்றின் காரணமாக வறண்ட உதடுகள் உண்டாகலாம். வைட்டமின் குறைபாடு  அல்லது தொற்றின் காரணமாக உதடுகளில் சிறிய பிளவுகள் உண்டாகலாம். அடிக்கடி உங்கள் உதடுகள் வறண்டு போனால், மருத்துவரை அணுகலாம். இவை நாட்பட்ட நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். முன்னெச்சரிக்கையுடன் இருப்பது எப்போதுமே நல்லது.

வெளிர் மஞ்சள் நிறத்திலான சருமம்:
இந்த வகை சருமம் ஆரோக்கியமற்றதாக இருக்கும். பருவ நிலைகளில் மாற்றம் ஏற்படுவதால் இந்த சரும நிறம் உண்டாகலாம். மிக அதிக வெப்பம் அல்லது மிக அதிக குளிர்ச்சி சருமத்திற்கு ஏற்றுக் கொள்ளாமல் இந்த நிலை ஏற்படலாம். சருமத்தின் இயற்கை நிறம் மாறி, இத்தகைய வெளி மஞ்சள் நிற உண்டாவதை தடுக்க, அதிக அளவு தண்ணீர் பருகலாம், SPF க்ரீம் பயன்படுத்தலாம், உங்கள் சருமத்தை பாதுகாப்போடு பராமரிக்கலாம்.

நரம்புகள் வீங்கி வெளியில் தெரிவது:
கை, காலின் கீழ் பகுதிகளில் நரம்பு தெரிவது அல்லது வீக்கம் ஏற்படுவது , வெரிகோஸ் நரம்பு கோளாறின் காரணமாக இருக்கலாம். நரம்புகள் உங்கள் ஆரோக்கியத்தின் முக்கிய குறிகளாக இருக்கின்றன. இரத்த ஓட்டத்தில் பிரச்சனை இருந்தாலும் நரம்பு வீக்க நோய் உண்டாகலாம். ஊட்டச்சத்து குறைபாடு அல்லது மன அழுத்தத்தின் அறிகுறியாகவும் இந்த நரம்பு வீக்கம் இருக்கலாம்.  

நகங்களில் மாற்றம் :
உங்கள் நகத்தில் வெள்ளை திட்டுக்கள், அல்லது கோடுகள் உண்டாவது, நக வடிவத்தில் மாற்றம் ஏற்படுவது, கருந்திட்டுக்கள் தோன்றுவது போன்ற பிரச்சனைகள் உங்கள் நகத்தில் உண்டாகலாம். நகங்கள் என்பது உங்கள் ஆரோக்கியத்தின் நுழைவு வாயில் ஆகும். இத்தகைய நகங்களில் மாற்றம் ஏற்படும்போது இவை சில வகை நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். வைட்டமின் குறைபாடு, உள்ளுறுப்பு கோளாறுகள், கல்லீரல் நோய், தோல் அழி நோய் போன்றவற்றின் அறிகுறியாகவும் இருக்கலாம். ஆகவே நகங்களில் மாற்றங்கள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை காணலாம்.

சிராய்ப்புண்:
அடிக்கடி உங்கள் உடலில் சிராய்ப்பு ஏற்பட்டு இரத்தம் வழிகிறதா, இது உள்ளுறுப்பு இரத்தபோக்கின் அறிகுறியாக இருக்கலாம். வயது முதிர்வின் காரணமாக சருமத்திற்கு நெருக்கமாக இருக்கும் இரத்த தந்துகிகள் மெலிந்து  விடுவதால்  இந்த சிராய்ப்பு உண்டாகலாம். அடிக்கடி உடலில் சிராய்ப்பு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனைப் பெறலாம். 

உங்கள் சருமம் என்பது உடலின் பிரதிபலிப்பாகும். எந்த ஒரு உடல் கோளாறுகளும் சருமத்தை பாதிக்கலாம். ஆகவே எதாவது ஒரு சரும பிரச்சனையால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறலாம்.