கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய 3 பழங்கள் 

குறிப்பாக மூன்று பழங்களை கண்டிப்பாக பிரசவ காலத்தில் தவிர்க்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய 3 பழங்கள் 

கர்ப்ப காலம் என்பது பெண்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் ஒரு காலமாகும். குறிப்பாக அவர்களின் உணவு பழக்க வழக்கத்தில் இந்த காலம் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்குகிறது. பொதுவாக கர்ப்பகாலத்தில் பப்பாளி பழம் சாப்பிடக்கூடாது என்பது பலரும் அறிந்ததாகும். இந்த பதிவில், கர்ப்பகாலத்தில் உட்கொள்ள கூடாத பழங்கள் பற்றியும் மேலும் சில உணவு பற்றிய சந்தேகங்களுக்கான தீர்வும் கொடுக்கப்பட்டுள்ளது. பிறக்கப் போகும் குழந்தை மற்றும் தாய்மார்கள் பாதுகாப்புடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க இத்தகைய பழங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. 

கர்ப்ப காலத்தில் முற்றிலும் தவிர்க்க வேண்டிய பழங்கள் :

திராட்சை :
திராட்சை ஒரு இயற்கையான பழ வகையாகும். குழந்தையின் வளர்ச்சிக்கும், தாயின் உடல் ஆரோக்கியத்திற்கும் திராட்சை பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. ஆனாலும், கர்ப்ப காலத்தில் திராட்சை உட்கொள்வதில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று கொண்டே இருக்கின்றது. சில மருத்துவ வல்லுனர்கள் , கர்ப்ப காலத்தில் திராட்சை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், சிலர் அதனை எடுத்துக் கொள்வதில் எந்த ஒரு தீங்கும் இல்லை என்றும் கூறுகின்றனர். 

திராட்சை உண்பது நல்லது என்று சொல்பவர்கள் கருத்து என்ன வென்றால்,
ஆர்கானிக் அமிலம், அன்டி ஆக்சிடென்ட் , மினரல், வைட்டமின் போன்றவை திராட்சையில் அதிகம் உள்ளது. ஆகவே திராட்சையை தொடர்ந்து கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்வதால், தாயும் சேயும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
வளர்சிதை மாற்றத்திலும்,  நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பிலும், இரத்த சோகையை எதிர்த்து போராடுவதிலும், திராட்சை பெரிதும் உதவுகிறது. 

திராட்சை உட்கொள்வதில் பல வித நன்மைகள் இருந்தாலும், அதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதில் பெரிய பிரச்சனைகளும் இருக்கிறது. மேலே கூறிய நன்மைகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட அளவு உட்கொள்வதால் மட்டுமே கிடைக்கும். திராட்சையை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால் கர்ப்பகாலத்தில் பல்வேறு தீங்குகள் உடலுக்கு ஏற்படுகின்றது. திராட்சை உட்கொள்வது தவறு என்று வாதாடும் வல்லுனர்கள் கூறுவதை இப்போது பார்க்கலாம்.

திராட்சை செடியில் பூச்சிகள் அண்டாமல் இருக்க பயன்படுத்தப்படும் பூச்சி கொல்லி மருந்துகள், திராட்சை பழத்தை சாப்பிடக் கூடாத உணவாக மாற்றுகின்றது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் இதனை தவிர்ப்பது நல்லது.

கர்ப்ப காலத்தில் ஹார்மோன் சமசீரின்மை உண்டாகும். திராட்சையின் தோல் பகுதியில் ரேசெர்வடோல் என்ற இயற்கையான கூறு இருக்கும். இது ஒரு விஷத்தன்மை வாய்ந்த ஒரு கூறாகும். ஹார்மோன் சமசீர் இல்லாத கர்ப்ப காலத்தில் இந்த ரேசெர்ர்வடோல் உடலுக்கு தீய விளைவுகளை உண்டாக்கும். ரேசெர்வடோல் உட்புகுதலால் பிரசவத்தில் பல்வேறு சிக்கல்கள் உண்டாகும் வாய்ப்புகளும் உண்டு. 
திராட்சையின் தோல் பகுதி கடினமாக இருப்பதால், கர்ப்ப காலத்தில் சரியாக செரிமானம் ஆகாமல் மலச்சிக்கல் உண்டாகும் வாய்ப்பும் உண்டு. 
எது எப்படி இருந்தாலும்  திராட்சையில் ஒவ்வாமை இருப்பவர்கள் , ஏற்கனவே செரிமான தொந்தரவு உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள். உடல் பருமன் உள்ளவர்கள் திராட்சையை கர்ப்ப காலத்தில் தவிர்ப்பது நல்லது. ,

திராட்சையின் வரத்து அதிகமாக இருக்கும் காலங்களில் மட்டுமே இதனை உட்கொள்வது நல்லது. மற்ற நேரங்களில் விளைவிக்கப்படும் திராட்சைகள் கண்டிப்பாக பூச்சி கொல்லி மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு தான் விளவிக்கப்பட்டிருக்கும். ஆகவே இதனை உட்கொள்வதால், தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்படும். 

பப்பாளி :
பப்பாளி காய் அல்லது முழுவதும் பழுக்காத பப்பாளியை கர்ப்ப காலத்தில் உட்கொள்வது முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டியது. 

அப்படியென்றால் பப்பாளி பழத்தை கர்ப்ப காலத்தில் சாப்பிடலாமா என்ற ஒரு கேள்வி எழுகிறது. மிதமான அளவு எடுத்துக் கொள்ளும்போது பப்பாளி பழம் தாய் மார்களுக்கும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் எந்த ஒரு கெடுதலையும் செய்வதில்லை. பழுக்காமல் காயாக இருக்கும் பப்பாளி அல்லது முழுதும் கனியாத பப்பாளியில் லடெக்ஸ் என்னும் கூறு உள்ளது. கர்ப்ப காலத்தில் இவற்றை அதிகம் உட்கொள்வதால் இந்த லடெக்ஸ் , கருப்பையில் சுருக்கத்தை உண்டாக்குகிறது. கர்ப்ப கால தொடக்கத்தில் இது,  கரு சிதைவு ஏற்பட காரணமாக உள்ளது. மேலும், கர்ப்ப காலத்தின்  கடைசி பருவத்தில், முன் கூட்டியே பிரசவம் உண்டாகும் வழியை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் பிரசவ வலியை தூண்டவும், பப்பாளியை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். தொலை தூர கிராமங்களில் இன்றும் பலர், கருவை கலைக்க பப்பாளி காயை உட்கொள்கின்றனர். பப்பாளி கையில் இருக்கும் என்சைம்கள், கருவை சிதைக்க மட்டுமில்லாமல், கருவின் உடல் வளர்ச்சியிலும் பாதிப்பை உண்டாக்குகிறது. கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் சவ்வு பலவீனமடைகிறது. 

பழுக்காத அல்லது பாதி பழுத்த பப்பாளியில் இருக்கும் பபைன் என்னும் புரத சிதைவு என்சைம் , உடலில் உள்ள அணுக்களை விலக செய்கிறது. இதனால் அணுக்களின் வளர்ச்சி பலவீனமடைகிறது .  குழந்தையின் திசுக்கள் பலமிழந்து குழந்தைன் வளர்ச்சி தடைபடுகிறது.

பப்பாளி இரத்த சர்க்கரை அளவை பாதிக்கிறது. அதுவும் கர்ப்பகால நீரிழிவு நோய் உள்ளவர்கள் பப்பாளியை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. பப்பாளி மலச்சிக்கலை நீக்குகிறது. மேலும் , குடல் தொடர்பான அழற்சியை போக்குகிறது. இதன் நன்மைகள் பல இருந்தாலும், இந்த பழம் கர்ப்பிணிகளுக்கு சில தொந்தரவுகளை கொடுக்கிறது. அதிகமான குடல் இயக்கம் கர்ப்பப்பைக்கு ஒரு வித அழுத்தத்தைக் கொடுத்து கருசிதைவை உண்டாக்குகிறது.

பப்பாளி காய், இரத்த குழாய்களுக்கு அதிகமான அழுத்தத்தை கொடுத்து நஞ்சுகொடியில் இரத்த போக்கை ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் பாதிப்பு உண்டாகி, குழந்தை வளர்ச்சி தடைபடுகிறது.


அன்னாசி பழம் :

அன்னாசி பழம், வைட்டமின், புரதம், மினரல், போன்றவை அதிகம் உள்ள ஒரு பழம். ஆனால் கர்ப்பகாலத்தில் ஆரம்ப கட்டத்தில் இந்த பழத்தை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. 
இந்த பழத்தை அதிகம் உட்கொள்வதால் கர்ப்பப்பை வாய் தளர்ந்து விடும் வாய்ப்புகள் உண்டு. அன்னாசி பழத்தில் இருக்கும் ப்ரோமிளின் என்னும் என்சைம் , கர்பப்பை வாயை பலவீனமாக்கி, கருசிதைவு அல்லது பிரசவ நேரத்திற்கு முன் கூட்டியே குழந்தை பிறப்பு போன்றவை ஏற்படுகிறது. 
அன்னாசி பழத்தில் அதிக அளவு சர்க்கரை உண்டு. ஆகவே கர்ப்பகால நீரிழவு உள்ளவர்கள் இதனை உண்ணுதல் கூடாது.  
அன்னாசி பழம் உடல் சூட்டை அதிகரிக்கும். இதனால் கருசிதவு அல்லது முன் கூட்டியே குழந்தை பிறப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. 

வேறு எந்த உணவு பொருட்களை கர்ப்பகாலத்தில் தவிர்ப்பது என்ற கேள்விக்கான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

கர்ப்பகாலத்தில் சில உணவு முறை மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், உங்கள் விருப்பமான உணவுகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டிய தேவை இல்லை. சில உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது அல்லது மிதமான அளவில் உட்கொள்வது, உங்கள் குழந்தை மற்றும் உங்கள் தனிப்பட்ட உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். 
உணவை பற்றிய சந்தேகத்திற்கு நீங்கள் உங்கள் மருத்துவரிடம் ஆலாசனை கேட்டு அதன்படி நடக்கலாம். கீழே உள்ள உணவு பட்டியலை கருவுற்றிருக்கும் போது   முற்றிலும் தவிர்க்கலாம் அல்லது மருத்துவ ஆலோசனையின்படி மிதமான அளவ எடுத்துக் கொள்ளலாம்.

மெர்குரி அதிகம் உள்ள மீன் மற்றும் கடல் உணவுகள் :
மீன் மற்றும் எல்லா கடல் உணவுகளிலும், சிறிய அளவு மெர்குரி இருக்கும். அவற்றுள் சில வகை, மூளை வளர்ச்சியை சேதப்படுத்தும். கானான்கெளுத்தி , ஸ்வார்ட் மீன், சுறா போன்ற மீன்கள் இந்த பிரிவில் அடங்கும்.

பச்சை முட்டை அல்லது பாதிவேக வைத்த கோழி இறைச்சி அல்லது முட்டை :
வேக வைக்காத பச்சை முட்டை அல்லது பாதி வேக வைத்த முட்டை போன்றவற்றால் தயார் செய்யப்பட்ட சாக்லேட் மௌஸ் , மயோனிஸ் அல்லது முட்டை  ஹாப் பாயில் , போன்றவற்றை கர்ப்ப களத்தில் தவிர்க்க வேண்டும். பச்சை முட்டை அல்லது பாதி வேகவைத்த முட்டையில் சல்மோனெல்லா என்ற கிருமி உற்பத்தியாகும். இது வாந்தி, வயிற்று போக்கு போன்றவற்றை ஏற்படுத்தும்.

தெருவோர உணவு :
கடைத்தெருவில் இருக்கும் சாட் உணவுகள் நாக்கில் எச்சில் ஊற வைக்கும். கர்ப்ப காலத்தில் அந்த உணவில் விருப்பம் அதிகரித்தால், நல்ல தரமான கடையில் அவற்றை வாங்கி சுவைக்கலாம். இதனால் உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்த குறைப்பாடும் நேராது என்பதை உறுதி செய்த பின்னர் அவற்றை வாங்கி உண்ணலாம்.

செயற்கை இனிப்புகள் :
செயற்கை இனிப்புகள் இன்று நம் வீட்டு சமயலறையில் ஒரு இடத்தை நிரந்தர இடத்தை பிடித்து விட்டது. சர்க்கரை உடல் ஆரோக்கியத்தை குறைப்பதால் இந்த செயற்கை இனிப்பிற்கு நாம் அனைவரும் மாற தயாராகி விட்டோம். இது முற்றிலும்  பாதுகாப்பானது என்று நாம் தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம். செயற்கை சுவையூட்டிகள் , குறிப்பாக சாக்கரின் , கர்ப்பிணிகளுக்கு மிகவும் ஆபத்தானது. இவற்றிற்கு மாற்றாக நாம் பொதுவாக பயன்படுத்தும் வெள்ளை சர்க்கரையை குறைந்த அளவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகள்: 
ஐஸ் க்ரீம், இனிப்பு இறைச்சி, மிட்டாய், கொழுப்பு உணவுகள் நிறைந்த விருந்து போன்றவை நமது உண்ணும் ஆர்வத்தை துண்டுபவையாக இருந்தாலும், கர்ப்ப காலத்தில் இவற்றை புறக்கணிப்பது நல்லது. இதனை தவிர்க்க வேண்டிய முதல் காரணம், கர்ப்ப காலத்தில் அதிகரிக்கும் உங்கள் எடையை  மீண்டும் குறைப்பது என்பது மிகவும் கடினம், மற்றொரு காரணம், கொழுப்பு உணவுகளால் உண்டாகும் உடல் பருமன் உடலின் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். 

மூலிகை டீ :
கர்ப்ப காலத்தில் க்ரீன் டீ , லெமன் டீ , செவந்தி பூ டீ போன்ற எந்த வகை மூலிகை டீயும் குடிக்கலாமா கூடாதா என்பது ஒரு பெரிய விவாதமாகவே உள்ளது. ஆகவே மூலிகை டீயை  குடிப்பதை பற்றி நீங்கள் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது. சென்னா என்னும் நிலவாகை இலை, பல்மேட்டோ என்னும் விசிறி பனை, வோர்ம் வூட் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட மூலிகை டீயை பருகாமல் இருப்பது நல்லது. இவை கர்ப்பகாலத்தில் பாதுகாப்பானதா என்பதை யாராலும் விளக்க முடியவில்லை.

பதப்படுத்தபடாத உணவுகள் :
பதப்படுத்தப்படாத சீஸ், பழச்சாறு, பால் பொருட்கள் போன்றவற்றில் கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும். இதனால் புட் பாய்சன் ஏற்படலாம். ஆகவே இவற்றை கர்ப்பகாலத்தில் தவிர்ப்பது நல்லது.

கழுவாத பழங்கள் மற்றும் காய்கறிகள் : 
காய்கறிகளை  வேக வைக்கமால் பச்சையாக சாப்பிடும் பழக்கம்  உள்ளவர்கள் அவற்றை நன்றாக கழவி சுத்தம் செய்து சாப்பிடலாம். காய்கறிகளின் தோல் பகுதியில் பூச்சி கொல்லி மருந்துகள் அப்படியே தங்குவதால் அவற்றை உட்கொள்ளும்போது, குழந்தையின் வளர்ச்சியை  அவை பாதிக்கும். 

கர்ப்பகாலத்தில் பழச்சாறு அருந்தலாமா?
பழச்சாறு அருந்துவதில் எந்த ஒரு தவறும் இல்லை. பழச்சாறு அருந்துவது முற்றிலும் ஆரோக்கியமானது. இதனால் கர்ப்பகாலத்தில் உடலின் ஊட்டச்சத்துகள் அதிகரிக்கிறது. கர்ப்பகாலத்தில் பழங்கள் உட்கொள்வது உடலுக்கு நல்லது என்றாலும், பழங்களில் இருக்கும் சல்மோனெல்லா , ஈ கோலி போன்ற கிருமிகள் இவற்றை தரமானதாக இருக்க வைப்பதில்லை. இத்தகைய பழச்சாறுகளை பருகுவதால், கருவில் இருக்கும் குழந்தை பாதிக்கப்படுகிறது.

இதனை போக்க ஒரு சிறந்த வழி, பதப்படுத்தப்பட்டு குளிர்விக்கப்பட்ட பழச்சாறுகளை வாங்கி உட்கொள்ளலாம். அல்லது வீட்டில் பழச்சாறு தயார் செய்யவதற்கு முன் பழங்களை நன்றாக கழுவி பிறகு பயன்படுத்தலாம். டின்களில் அடைக்கப்பட்ட பழங்களை வாங்கி அப்படியே சாப்பிடுவதையும் பழச்சாறு தயாரிப்பதையும்  தவிர்க்கலாம். பதப்படுத்தப்படாத பழச்சாறுகளை வாங்கி பருகுவதால் தாய் மற்றும் சேயின் நோயெதிர்ப்பு மண்டலம் பாதிப்பு ஏற்படுகிறது. ஆகவே வீட்டில் தயாரிக்கப்பட்ட பிரெஷ் பழச்சாறு அல்லது வெளியில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட பழச்சாறு போன்றவற்றை மட்டும் பருகவும்

பழங்களை நேரடியாக சாப்பிடும்போது, வெட்டியவுடன் அதனை உண்டு முடித்து விடுங்கள். அழுகிய பழங்களை உண்ணாமல் இருப்பது நல்லது. கர்ப்பகாலத்தில் பாதி அழுகிய பழங்களைக் கூட தவிர்ப்பது நல்லது. கர்ப்பகாலத்தில் தாயின் நோயெதிர்ப்பு மண்டலம் மிகவும் பலவீனமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே கர்ப்பிணி பெண்களுக்கு சரியான  கவனம் தேவை. பிரெஷ் உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகளை தவிர்த்து மற்ற ஆரோக்கிய உணவுகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வதால் தாய் மற்றும் குழந்தையின்  உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். பிறக்கும் குழந்தை ஆரோக்கியமானதாக இருக்கும். சரியான நேரத்தில் மருத்துவரின் ஆலோசனையை பெறுவதும் நல்லது.