அல்சர் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய 6 முக்கிய உணவுகள்

வயிற்றுப் புண்ணைப் போக்க சில உணவுகள் நம்மிடையே உள்ளன. 

அல்சர் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய 6 முக்கிய உணவுகள்

அமில சாறுகள் அதிக உற்பத்தியாகும் சளி சவ்வுகளில் வளர்ச்சியடையும் புண்கள் தான் அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் ஆகும். எச். பைலோரி பாக்டீரியாவின் வளர்ச்சி காரணமாக இந்த வயிற்றுப் புண் பொதுவாக உண்டாகிறது. சில மாத்திரை மருந்துகளை அதிகமாக பயன்படுத்துவதும் வயிற்றுப் புண் ஏற்படுவதற்கு மற்றொரு காரணமாக இருக்கலாம்.

அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயிற்றுப் புண்களைப் போக்க சிறந்த முறையில் உதவுகின்றன. வயிற்றுப் புண் தொடர்பான பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகிறது.

அடிவயிறு வலி மற்றும் எரிச்சல் வயிற்றுப் புண்ணின் முக்கிய அறிகுறிகளாகும். இதனுடன் எதுக்கலித்தல், வயிறு கனமாக இருப்பது போன்ற உணர்வு, உணவு ஒவ்வாமை போன்ற அறிகுறிகளும் இணைந்து ஏற்படலாம்.

பொதுவாக இந்த வயிறு புண் பாதிப்பு என்பது பெரிய பிரச்சனை இல்லை. இதனை உணவில் ஏற்படுத்தும் மாற்றத்தால் சரி செய்ய முடியும். சிலநேரங்களில் இதில் சிறு சிக்கல் உண்டாகலாம். வாந்தி, இரத்தப்போக்கு போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.

வயிற்றின் pH அளவை பராமரிப்பதன் மூலம் இந்த வயிற்றுப் புண் பாதிப்பை குறைக்கலாம். இதற்கு பல்வேறு உணவுகள் உதவுகின்றன. நீங்கள் வயிற்றுப் புண் என்னும் அல்சர் நோயால் பாதிக்கபட்டால், உடனடியாக இந்த பதிவில் கூறப்பட்டுள்ள 6 உணவுகளை எடுத்துக் கொளவதால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

அல்சரைப் போக்க உதவும் உணவுகள் :
நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் அல்சரைப் போக்குவதில் முக்கிய இடம் பிடிக்கின்றன. சில உணவுகள் இந்த பாதிப்பை மேலும் மோசமடையச் செய்யும். அதே வேளையில் சில உணவுகள் பல ஊட்டச்த்துகளுடன் சேதமடைந்த திசுக்களை சரி செய்யும் பண்புகளைக் கொண்டு இந்த பாதிப்பில் இருந்து நமக்கு விரைந்த நிவாரணத்தை வழங்கும்.

மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சையுடன் இணைந்து இந்த உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளுக்கு மாற்றாக இவற்றை மட்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

1. கேரட் :
வயிற்று புண் உள்ள நோயாளிகளுக்கு அதிகமாக பரிந்துரைக்கப்படும் ஒரு காய்கறி கேரட் ஆகும். அதிக அமிலத்தால் உண்டாகும் பாதிப்பை சரி செய்ய கேரட்டில் இருக்கும் குணப்படுத்தும் பண்பு மற்றும் அமிலத்தை சமன் செய்யும் பண்பு உதவுகிறது. கேரட்டை ஜூஸ், சாலட் என்று எந்த விதத்தில் எடுத்துக் கொள்வதாலும் , வயிற்று எரிச்சல் மற்றும் எதுக்கலித்தல் போன்றவை குறைந்து சௌகரியமான உணர்வு உண்டாகும்.

2. ஆப்பிள் :
ஆப்பிளில் அதிக அளவு அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இருப்பதால் இது ஒரு பிரபல மருத்துவ பழமாக பார்க்கப்படுகிறது. செரிமான மண்டலத்தை கட்டுப்படுத்த உதவும் நார்ச்சத்து மற்றும் ஆர்கானிக் அமிலம் ஆப்பிளில் இருப்பதால் வயிற்றுப் புண்ணைப் போக்க இது ஒரு சிறந்த பழமாக கருதப்படுகிறது. அல்சர் மட்டுமில்லாமல் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், இரைப்பை அழற்சி போன்ற பாதிப்புகளுக்கு ஆப்பிள் சிறந்த தீர்வாகிறது.

3. கற்றாழை :
கற்றாழையில் கிருமி எதிர்ப்பு மற்றும் குணப்படுத்தும் பண்புகள் உள்ளன. வயிற்றுப் புண் பாதிப்பு உள்ளவர்கள் கற்றாழையை பயன்படுத்துவதால் அதிகரித்த அமில சாறு உற்பத்தியை கட்டுப்படுத்த முடியும். மேலும் இரைப்பை சளியினால் உண்டாகும் எரிச்சலையும் கற்றாழை போக்குகிறது.

அல்சர் உண்டாக முக்கிய காரணமான எச்.பைலோரி பாக்டீரியா வளர்ச்சியை தடுப்பதற்காண குணத்தைக் கொண்டது கற்றாழை. கூடுதலாக, சேதமடைந்த திசுக்களை சரி செய்யும் கூறுகளான அலியோமொடின் மற்றும் அளியோலின் போன்றவற்றையும் இது வழங்குகிறது.

4. வாழைப்பழம்:
வாழைபழத்தில் ஸ்டார்ச் மற்றும் அல்கலின் கூறுகள் அதிகம் இருப்பதால், இதனை உடல் உறிஞ்சியவுடன், வயிற்றின் pH அளவு சரியாக முறையில் பராமரிக்கப்படுகிறது. வாழைப்பழம் உண்பதால், இரைப்பையில் உள்ள சளி சீர்குலைவது தடுக்கப்படுகிறது, மேலும் புண்கள் குறைகிறது. வயிற்றுக்கு ஒரு இதமான உணர்வைத் தந்து, சேதமடைந்த திசுக்கள் குணமடைய தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கி உதவுகிறது. எதுக்கலித்தல் மற்றும் இரைப்பை அழற்சியை மெதுவாக குறைத்து அசௌகரியத்தைக் குறைக்கிறது.

5. உருளைக்கிழங்கு :
சிறந்த அமில எதிர்ப்பு உணவாகக் கருதப்படும் உருளைக்கிழங்கு, வயிற்றுப் புண் என்னும் அல்சரைப் போக்க பெரிதும் உதவுகிறது. உருளைக் கிழங்கில் இருக்கும் நார்ச்சத்து, ஸ்டார்ச் மற்றும் அன்டி ஆக்சிடென்ட் ஆகியவை இதன் நன்மைகளுக்கு காரணமாக இருப்பவையாகும். இவை அனைத்தும் சீரான செரிமானத்திற்கு உதவுகின்றன.

அழற்சியைக் குறைக்க இதில் இருக்கும் உப்பு உதவுகிறது. மேலும் அமிலத்தால் பாதிக்கப்பட்ட திசுக்களை குணப்படுத்த இவை உதவுகின்றன. கூடுதலாக, வயிற்று எரிச்சலைப் போக்கி, வயிறு வீங்குவது மற்றும் எதுக்கலித்தலைப் போக்குகின்றன.

6. ஆளி விதைகள் :
நீரில் ஊற வைத்த ஆளி விதைகள், வெளியாக்கும் வழவழப்பான வஸ்து, அல்சரைப் போக்குவதில் சிறந்த பலன் தருகிறது. அழற்சியைக் குறைத்து எரிச்சலைத் தடுத்து புண்களைப் போக்க உதவுகிறது.

ஆளி விதைகளில் , மற்ற உணவுப் பொருட்களை விட ஒமேகா 3 கொழுப்பு அமிலம் , நார்ச்சத்து  மற்றும் இதர ஊட்டச்சத்துகள் அதிகம் இருப்பதால், வயிற்றில் உள்ள திசுக்களை சரி செய்து, புண்ணை விரைந்து ஆற வைக்க உதவுகின்றன .

அல்சர் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் :
வயிற்று புண் என்னும் அல்சர் பாதிப்பு உள்ள நோயாளிகள் சில அமில உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. மேலும் நீங்கள் சிகிச்சையின் போது இந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய சில முக்கிய உணவுகள் இதோ உங்களுக்காக ,

1. காபி மற்றும் காபின் சேர்க்கப்பட்ட மற்ற பானங்கள்

2. சுத்தீகரிக்கப்பட்ட சர்க்கரையால் தயாரிக்கப்பட்ட இனிப்புகள்

3. கார்பன் ஏற்றப்பட்ட பானங்கள்

4. காரமான உணவுகள்

5. மதுபானங்கள்

6. பொரித்த உணவுகள் மற்றும் துரித உணவுகள்

7. பிரட் மற்றும் சந்தையில் கிடைக்கும் கேக் வகைகள் 

அல்சரின்  முதல் அறிகுறிகள் தென்படும்போதே மருத்தவ உதவி பெறுவது மிகவும் நல்லது. அல்சர் என்பது பயம் கொள்ள வேண்டிய நோய் இல்லை என்றாலும், அதன் நிலையைப் பற்றி மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. மேலே கூறிய உணவுகளை தினசரி எடுத்துக் கொள்வதன் மூலம், அல்சரை குறிப்பிட்ட அளவு வரை குணப்படுத்த முடியும்.