மஞ்சள் மேகமாக மாற சில வழிகள்!

ஒரே ஒரு பொருள் கொண்டு பல ஆரோக்கிய பலன்களை அடைய முடியுமா  என்று நீங்கள் கேட்டால் அதற்கு ஆம் என்று சொல்ல முடியும் .அது என்ன பொருள்?

மஞ்சள் மேகமாக மாற சில வழிகள்!

தலை முதல் கால் வரை பயன்படக்கூடிய ஒரு பொருள். சமையலுக்கான ஒரு பொருள். மருந்துக்கான பொருள். அழகுக்கான ஒரு பொருள் , ஆன்மீகத்துக்கான ஒரு பொருள் , எளிதில் கிடைக்க கூடிய ஒரு பொருள். என்ன அந்த பொருள் என்று அறிந்து  கொள்ள ஆவல் எழுகிறதா? வாருங்கள் அந்த பொருளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

அந்த விலை மதிப்பில்லாத பொருள் - மஞ்சள், முடி கொட்டுவது தீர்க்கப்படுகிறது,  பொடுகு தொல்லையை போக்குகிறது, சரும பிரச்னைகளை களைகிறது , பாதத்தில் ஏற்படும் வெடிப்பை சரி செய்கிறது மற்றும் நம் அழகை அதிகரிக்கிறது. 

சருமத்திற்கு மஞ்சள்:
மஞ்சளை பயன்படுத்தி சரும அழகை மேம்படுத்த சில வழிகளை இப்போது பார்க்கலாம்.

காயங்களை போக்கி, தழும்புகளை குறைக்கிறது:
மஞ்சளுக்கு இருக்கும் வீக்கத்தை குறைக்கும் தன்மையால், சரும துளைக்குள் ஊடுருவி, சருமத்தை சீராக்குகிறது. மஞ்சளுக்கு இருக்கும் ஆன்டிசெப்டிக் குணத்தால், காயங்கள் எளிதில் ஆறுகிறது. மற்றும் தழும்புகள் மெல்ல மறைகிறது.
ஒரு சிட்டிகை மஞ்சளுடன், சிறிதளவு, கடலை மாவு சேர்த்து, சருமத்தில் தடவி, 20 நிமிடத்திற்கு பிறகு வெது வெதுப்பான நீரில் கழுவுங்கள். நல்ல மாற்றத்தை நீங்கள் உணரலாம்.

வயது முதிர்வை தடுக்கிறது:
மஞ்சளில் குறுகுமினாய்டு என்ற நிறமி உள்ளது. இது உடலில் ஆன்டிஆக்ஸிடென்ட்டை இணைத்து கொடுக்கிறது. இவை சரும செல்களை  தீங்கு விளைவிக்கும்  கூறுகளில் இருந்து பாதுகாத்து, வயது முதிர்ச்சிக்கான அறிகுறிகளை குறைக்கிறது. மற்றும் கரும் புள்ளிகள், கோடுகள், சுருக்கங்கள் முதலியவற்றை வராமல் செய்கிறது.

சரும வறட்சி மற்றும் வெடிப்புகளை சீராக்குகிறது:
தேங்காய் எண்ணெய்யுடன் சிறிது மஞ்சள் சேர்த்து, வெடிப்பு ஏற்பட்ட பாதங்களில் தடவவும். 15 நிமிடம் கழித்து கழுவவும். பாதங்கள் மென்மையாகி வெடிப்புகள் மறையும்.

ஸ்ட்ரெட்ச் மார்க்ஸை குறைக்கிறது:
குங்குமப்பூ, மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறை சேர்த்து ஒரு பேஸ்ட்டாக்கி ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் இருக்கும் இடத்தில தடவவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதனை தொடர்ந்து செய்வதால், ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் மறையும்.

சரும வெண்மைக்கு மஞ்சள்:
சருமத்தின் இயற்கையான அழகை மீட்டு தர மஞ்சள் பெரிதும் உதவுகிறது. வெயில் அதிகம் படும் இடங்கள் கருத்து காணப்படும். வெயில் படாத  இடங்கள் வெண்மையாக இருக்கும். இந்த வேறுபாட்டை நீக்கி, சருமத்தில் சரி சமமான நிறத்தை பெற மஞ்சள் உதவும். ஒரு ஸ்பூன் தேனுடன், 1 ஸ்பூன் பால் மற்றும் ¼ ஸ்பூன் மஞ்சள் சேர்த்து ஒரு பேக் தயாரிக்கவும். இதனை சருமத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து கழுவவும்.  தீர்வுகள் வரும் வரை ஒரு வாரத்திற்கு 3 அல்லது 4 தடவை இந்த முறையை பின்பற்றவும்.

முகத்திற்கு மஞ்சள்:
பருக்களை எதிர்த்து முகத்திற்கு அழகை கொடுப்பதில் மஞ்சள் சிறந்த பங்கு வகிக்கிறது. முகத்தில் இருக்கும் கிருமிகளை எதிர்த்து போராடி, பருக்களை போக்குகிறது. முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்யை எடுக்கிறது. ½ ஸ்பூன் மஞ்சளுடன், 2 ஸ்பூன் சந்தனத்தை சேர்த்து சிறிது பாலுடன் கலக்கி ஒரு பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவவும். மஞ்சள் காய்ந்தவுடன், தண்ணீரால் முகத்தை கழுவவும். தொடர்ந்து செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

இன்றைய நாட்களில் கலப்படம் அதிகரித்து இருப்பதால், நல்ல தரமான மஞ்சளை  வாங்கி நாமே அரைத்து பயன்படுத்துவது நல்லது.  இந்த மஞ்சளை கொண்டு அழகை மேம்படுத்தி மஞ்சள் மேகமாக பவனி வரலாம்.