சரும நிறத்தை அதிகரிக்க இயற்கை முறைகள் 

அழகான மற்றும் பளிச்சென்ற சருமம் பெற இன்று பல விதமான பொருட்கள் சந்தையில் விற்கப்படுகின்றன.

சரும நிறத்தை அதிகரிக்க இயற்கை முறைகள் 

அவற்றின் பெரும்பகுதி மூலப்பொருட்கள் ரசாயனத்தால் செய்யப்பட்டது. அதனை வாங்கி பயன்படுத்தி உடனடியாக முக வசீகரத்தை மேம்படுத்தலாம். ஆனால் அவை நீடித்த அழகை தருமா என்பது கேள்விக்குறிதான். அவைகளால் சருமத்திற்கு பக்க  விளைவுகளும் ஏற்படலாம். நீடித்த அழகை பெற வீட்டு வைத்தியங்கள் சரியான தீர்வாகும். இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளும் தீர்வுகளால் பக்க விளைவுகள் இருக்காது. உடனடியான தீர்வுகள் கிடைக்காவிட்டாலும், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நல்ல பலனை காணலாம். அழகும் நீடித்து நிற்கும்.

கருமையான அல்லது அடர்ந்த நிற சருமத்தை உடையவர்கள் வெண்மையான தோற்றம் பெற விரும்புவர். சூரிய ஒளியின் தாக்கத்தால் மெலனின் படிவதால் சருமத்தின் மேல் புறம் கருமையாக தோன்றும்.மெலனின் உற்பத்தி அதிகமாக இருக்கும்போது சருமம் கருமையாக இருக்கும். அத்தகைய சருமத்தின்  கருமையை  போக்கி வெண்மையாக மாற்ற சில டிப்ஸ்கள் உண்டு. அவற்றை இப்போது காணலாம்.

சருமத்தை வெண்மையாக்க மாஸ்க் :
சருமம் வெண்மையாக்க பின்வரும் குறிப்புகளை பின்பற்றலாம்.

தேன் மற்றும் பாதாம் மாஸ்க் : 
* சரும வெண்மைக்கு ஏற்ற பொருட்கள் தேன் மற்றும் பாதாம் ஆகும். இவை இரண்டையும் கலந்து செய்யும் ஒரு மாஸ்க்  சரும  வெண்மைக்கு சிறந்த ஒரு தீர்வாக அமையும். ஒரு ஸ்பூன்  பால் பவுடர் , 1 ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, மற்றும் ½ ஸ்பூன் பாதாம் எண்ணெய்  ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு பேஸ்ட் போல செய்து  முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். 

தக்காளி மற்றும் ஓட்ஸ்: 
* முகத்தில் இருக்கும் கருமையை போக்க இந்த மாஸ்க் உதவும்.  சூரிய ஒளியால் ஏற்பட்ட எரிச்சலை இந்த மாஸ்க் போக்குகிறது. இந்த பேக் செய்ய தேவையான பொருட்கள், நன்கு பழுத்த தக்காளி ஒன்று, 2 ஸ்பூன் ஓட்ஸ். தக்காளியை ஜூஸாக்கி, அதில் ஓட்ஸை சேர்த்து கலக்கவும். பின்பு இந்த கலவையை முகத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும்.

ஆரஞ்சு மாஸ்க் :
* சருமத்திற்கு வைட்டமின் சி ஊட்டச்சத்து மிகவும் அவசியம். ஆரஞ்சு பழத்தில் இந்த ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. புளிப்பு சுவையுடைய பழங்களில் சருமத்தை வெண்மையாக்கும் தன்மை உண்டு. இந்த பேஸ்டை இரவில் பயன்படுத்தவும். ஆரஞ்சு சாறுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட்டாக்கவும். கழுத்து மற்றும் முகத்தில் இந்த பேஸ்டை தடவவும். இரவு முழுவதும்  அப்படியே விட்டுவிட்டு மறுநாள் காலையில் முகத்தை கழுவவும். 

கற்றாழை ஜெல் :
* உங்கள் சரும அழகை மீட்டெடுக்க கற்றாழை மிக சிறந்த அளவில் உதவுகிறது.  சருமத்தில் சேதமடைந்த செல்களை மாற்றியமைக்க இவை உதவுகின்றன. இதனால் சரும நிலை மேம்படுகிறது. கற்றாழை இலையில் இருந்து ஜெல்லை எடுத்து  உடலில் தேய்த்து கொள்ளுங்கள். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள். இதனை தொடர்ந்து செய்வதால் உடல் இயற்கையான முறையில் பொலிவடைகிறது.

சரும பொலிவிற்கு ப்ளீச் :
. சருமங்களை வெண்மையாக்க பயன்படுத்தும் மாஸ்குகளை போல சில ப்ளீச்களையும் இயற்கையான முறையில் தயாரித்து முகத்திற்கு பயன்படுத்தலாம். இவை முக பொலிவிற்கு ஒரு நீண்ட கால தீர்வாக இருக்கும். கண்களை சுற்றி இருக்கும் இடங்களில் இந்த ப்ளீச்களை பயன்படுத்தக்கூடாது . 

வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு:
* இரண்டு ஸ்பூன் வெள்ளரிக்காய் பேஸ்டை எடுத்து சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். அந்த பேஸ்டை முகத்தில் தடவவும். இதனை செய்வதால் முகத்தில் உள்ள சிறு சிறு முடிகள் சிவந்த நிறத்தில் மாறுவதை பார்க்கலாம். இது தான் ப்ளீச்சின்  தன்மையாகும்.

பைனாப்பிள் மற்றும் பால்:
* பைனாப்பிள் துண்டுகளை மிக்ஸியில் அரைத்து பேஸ்ட்டாக்கவும். இதனுடன் 1 ஸ்பூன் சுத்தமான பால்  சேர்க்கவும். சிறிதளவு தேங்காய் பால் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாக கலந்து முகத்தில் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். முகம் பளிச்சென்று இருப்பதை உடனடியாக உணர முடியும். தொடர்ந்து இதனை செய்வதால் உங்கள் சருமத்திற்கு நீடித்த பொலிவு கிடைக்கும்.

இரசாயன தீர்வுகள் மூலம் உடனடியாக முகத்தில் மாற்றங்களை உணர முடியும். ஆனால் இவை நீடித்து இருக்காது. செலவும் அதிகம். பக்க விளைவுகளும் அதிகம். தேடித்  தேடி சென்று அந்த பொருட்களை வாங்க வேண்டி இருக்கும். ஆனால் இயற்கை முறையில் முக அழகை  பராமரிக்கும் போது, செலவும் குறையும், பக்க விளைவுகளும் இருக்காது. எல்லா பொருட்களும் எளிதில் கிடைக்கக்கூடியதாக இருக்கும். உடனடியாக பலன் கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். அழகும் நீடித்து இருக்கும்.