மழைக்காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரியுங்கள்!

மழைக்காலம் வந்துவிட்டது!  மழையின் வாசம் நமது நாசிகளில் வந்து துளைக்கிறது. மனதில் ஒரு  புது உற்சாகம் வருவதை தடுப்பதற்கில்லை. எதற்காக  இந்த உற்சாகம்?

மழைக்காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரியுங்கள்!

வெயில் காலத்தை காட்டிலும் நாம் மழைக்காலத்தையே அதிகம் விரும்புகிறோம். இந்த வருடமாவது நல்ல மழைபெய்து ஆறுகளும் அணைகளும் நிரம்பட்டும். மனிதனின் துயர் துடைத்து வளம் பெருகட்டும்!

மழையை பற்றி பேசினால் பேசிகொன்டே இருக்கலாம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். 

மழைக்காலங்கள் இனிமையான அனுபவத்தை தருவது உண்மை தான் . ஆனால் மழைக்காலத்தில் சருமத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டு நம் அழகை பாதிக்கின்றன. முடி உதிர்தல் , சருமத்தில் எண்ணெய் பசை அதிகமாகுதல், ஒவ்வாமை மற்றும் சில கிருமி தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு மழைக்காலத்தில் அதிகம் . இவை எல்லாவற்றிற்கும்  சில தீர்வுகளை கண்டு  இந்த பிரச்சனைகளை நாம் சரி செய்கிறோம்.

மழைக்காலங்களில் அதிகம் பாதிப்புக்குள்ளாவது நமது பாதங்கள். சேறு மற்றும்  அழுக்குகளில் நடப்பதால் பாதங்களில் பலவித நோய் தோற்று ஏற்படுகிறது.  ஆனால் நாம் பாதங்களின் வலிகளையும்  பாதிப்புகளையும் புறக்கணிக்கிறோம். மேலும் இவை அதிகமாகி  பாத வெடிப்பு, உடையும் நகங்கள் மற்றும் நடக்க முடியாத அளவுக்கு பாதங்களில் சோர்வு ஆகியவை  ஏற்படுகின்றன.

இவற்றை தடுப்பதற்கு, வீட்டிலிருக்கும் பொருட்களை கொன்டே நம் பாதங்களை  பராமரிக்கலாம் .  

தோல் உரிதலுக்கு எலுமிச்சை :
எலுமிச்சை ஒரு இயற்கை ஸ்க்ரப் ஆகும். இது பாதங்களின் தோல்  உரிவதையும் தோல் வறண்டு    இருப்பதையும் கட்டுப்படுத்துகிறது. எலுமிச்சை சாறுடன் தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து 
தளர்ந்த பாதங்களில் தேய்க்கும் போது அதன் ஈரப்பதம் அதிகரிக்கிறது. 

சாலையில் மழை நீரில் நடப்பதனால்  பாதங்களில் ஒரு வித துர்நாற்றம் வீசலாம். ஒரு பெரிய டப்பில் வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் சிறிது எலுமிச்சை சாறை சேர்த்து கொள்ளவும். இந்த நீரில் துர்நாற்றம் வீசும் பாதங்களை 10-15 நிமிடங்கள் ஊற வைக்கலாம். 

வறட்சியை நீக்க:
பாதங்களில் வறட்சியை போக்குவதற்கு  ஒரு சிறந்த குறிப்பு.
3 கப் வெதுவெதுப்பான பாலுடன் 3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை கலக்க  வேண்டும். இந்த கலவையை ஒரு டப்பில் ஊற்றி அதில் கால்களை நனைய விடவும். 10நிமிடங்கள் நன்றாக ஊறிய பின் பாதங்களை அதிலிருந்து எடுக்கவும்.பின்பு வெந்நீரில் பாதங்களை சுத்தம் செய்யவும்.இதன் மூலம் வறட்சி நீங்கி பாதங்கள் பொலிவு  பெறும்.
 
வெடிப்புகளைப் போக்க :
பாதங்களில் ஏற்படும் வெடிப்பினால் வலி உண்டாகிறது. அந்த வலியை குறைக்க  தேங்காய் எண்ணையை வெடிப்பில்  தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்தவுடன்  கால்களில் சாக்ஸ் அணிவதால் சருமம் எண்ணையை   முழுதுமாக உறிஞ்சி கொள்கிறது.

முல்தானி மிட்டி மாஸ்க்:
முல்தானி மிட்டி, வேப்பிலை, மஞ்சள் மற்றும் லாவெண்டர் எண்ணையை சிறிது தண்ணீரில் கலந்து கொள்ளவும். இது ஒரு  பேஸ்ட் போல்  இருக்க வேண்டும். இதனை பாதங்களில் தடவி 1/2மணி நேரம்  விட்டு விடவும். பிறகு மெதுவாக உங்கள் பாதங்களை மசாஜ் செய்யவும். அதன் பிறகு ஆலிவ் எண்ணெய் கொண்டு பாதங்களை சுத்தம் செய்யவும். இதன் மூலம் பாதத்திற்கு ஒரு  சிறந்த ஓய்வு கிடைக்கிறது.  

ஆரஞ்சு மாஸ்க்:
ஆரஞ்சு பழத் தோல் பவுடர், பால் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை பாதங்களில் தேய்த்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு வெந்நீரில் பாதங்களை கழுவவும் . இதன் மூலம் பாதங்கள் அழகாக காட்சியளிக்கும். 

உங்கள் பாதங்களைப் பாதுகாக்க, மழை நாட்களில் செய்ய கூடாதவை:
1. முழுவதும் மூடிய கான்வாஸ் மற்றும் தோல் ஷூக்களை அணிய கூடாது.
2.ஈரமான ஷூக்கள் மற்றும் சாக்ஸ்களை அணிய கூடாது.
3.உயரமான ஹீல்ஸ் கொண்ட செருப்புகளை அணிவதால் கீழே வழுக்கி  விழும் அபாயம் உண்டு.
4. வெறும் காலில் மழை நீரில் நடக்க வேண்டாம்.
5. பாதங்களில் உதிர்ந்து வரும் தோலை பிய்த்து எறிய  வேண்டாம்.

மழை நாட்களில் செய்ய வேண்டியவை:
1. மழையில் இருந்து வீடு வந்தவுடன் கால்களை நன்றாக கழுவ வேண்டும்.
2. திறந்த ரப்பர் செருப்புகள் அணிவது நல்லது.
3. கால்களுக்கு அடிக்கடி  பெடிக்யூர் செய்வது நல்லது.
4. நகங்களை சீராக வெட்டுவது நல்லது.
5. வெந்நீரில் கால்களை 10நிமிடங்கள் ஊற வைத்துக்கழுவி விட்டு தூங்க செல்வது நல்லது.

மேற்கூறிய முறைகளைப் பின்பற்றி  அழகான பாதங்களை அதன் அழகு கெடாமல் பாதுகாத்து மழை நாட்களை மகிழ்ச்சியாக அனுபவிப்போம்!