புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல் புற்று நோய் உண்டாவதற்கான 5 காரணங்கள்

நுரையீரல் புற்று நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் புகை பிடிப்பது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் நுரையீரல் புற்று நோய் ஏற்படுவதற்கு புகை பழக்கம் மட்டுமே காரணம் அல்ல.

புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல் புற்று நோய் உண்டாவதற்கான 5 காரணங்கள்

ஒவ்வொரு வருடமும் 170,000 பேர்களுக்கு அமெரிக்காவில் நுரையீரல் புற்று நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த எண்ணிக்கையில் பத்து சதவிகிதம் அதாவது 17000 பேர்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் கிடையாது. புகை பிடிக்கும் பழக்கம் இல்லாமல் , நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் நுரையீரல் புற்று நோய் வளர்ச்சி அடைவதற்கான குறிப்பிட்ட காரணிகள் இல்லாமல் இருப்பினும், பல்வேறு சூழ்நிலைகள் மற்றும் நிலைமைகள் புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவருக்கு புற்று நோயை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை உண்டாக்குவதாக அறியப்படுகிறது. அவற்றுள் சிலவற்றை நாம் இந்த பதிவில் காணலாம். 

புகை பிடிக்கும் பழக்கம் தவிர நுரையீரல் புற்று நோய் உண்டாவதற்கான இதர காரணங்களில் சிலவற்றை நாம் இப்போது பார்க்கலாம்.

பேசிவ் ஸ்மோகிங் :  
புகை பிடிக்கும் ஒரு நபர், இருக்கும் இடத்தில்  இருப்பது, அவருடன் சேர்த்து வசிப்பது அல்லது வேலை செய்வது, புகையிலையின் புகையை நுகர்வது போன்றவை நுரையீரல் புற்று நோய்க்கான முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுடன் சேர்ந்து வசிக்கும் புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவருக்கு ,நுரையீரல் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 24% வரை அதிகரித்து காணப்படுகிறது. விரும்பி புகைபிடிக்காமல் இருந்தாலும் , இதுவும் ஒரு வகையில் புகை நுகர்வாகவே பார்க்கப்படுகிறது. இதனை பேசிவ் ஸ்மோகிங் என்று கூறுகின்றனர். இந்த பேசிவ் ஸ்மோகிங் வாயிலாக ஏற்படும் நுரையீரல் புற்று நோயால் ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் 3000 பேர் உயிரிழக்கின்றனர் என்று வரையறுக்கப்படுகிறது.

ரேடான் வாயு:
யுரேனியம் கழிவில் இருந்து வெளிப்படும் ஒரு வாயு ராடன் வாயுவாகும். நுரையீரல் புற்று நோயின் மற்றொரு காரணியாக இது விளங்குகிறது. புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்று ஒட்டு மொத்த நுரையீரல் புற்று நோய் பாதிப்பால் இறப்பவர்களில் 12% அதாவது ஒவ்வொரு ஆண்டும், 15000-22000 பேர் அமெரிக்காவில் இறப்பது இந்த வாயுவின் தாக்கத்தினால் தான் என்பது புலனாகிறது. புகை பிடிக்கும் பழக்கம் இருந்து, இந்த வாயுவுடன் தொடர்பு உள்ளவர்களுக்கு , புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விட புற்று நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் அறியப்படுகிறது. ரேடான் வாயு மண்ணின் வழியாகப் பயணம் செய்து, அஸ்திவாரங்களில், குழாய்கள், வடிகால்கள் அல்லது பிற திறப்புகளில் இடைவெளிகளில் வீடுகளில் நுழைய முடியும். U.S. சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை, அமெரிக்காவில் ஒவ்வொரு 15 வீடுகளில் ஒரு வீட்டில் ராடன் வாயு உள்ளது என்று மதிப்பிடுகிறது. இந்த வாயுவிற்கு எந்த ஒரு வாசனையும் இருக்காது. இதனைக் காணவும் இயலாது. ஆனால் சிறிய சோதனை உபகரணத்தின் மூலம் இதன் இருப்பை அறிந்து கொள்ள இயலும்.

அஸ்பெஸ்டாஸ்:
அஸ்பெஸ்டாஸ் என்னும் ஒரு கூறு கடந்த காலங்களில் வெப்ப மற்றும் ஒலிபுலன் சார்ந்த பொருட்களில் ஒரு காப்புப் பொருளாக பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தது. அஸ்பெஸ்டாஸின் நுண்ணிய நார்கள், காப்புப் பொருட்களில் இருந்து தளர்ந்து உடைந்து, காற்றில் வெளியேறி, நுரையீரலுக்குள் காற்று வழியாக நுகரப்படுகின்றன. நுகரப்பட்ட அஸ்பெஸ்டோஸ் நார்கள்  நுரையீரல் திசுக்களில் வாழ்நாள் முழுவதும் அஸ்பெஸ்டாஸ் வெளிப்பாட்டை தொடர்ந்து வெளிபடுத்திக் கொண்டே இருக்கும். நுரையீரல் புற்று நோய் மற்றும் இடைத்தோற்புற்று என்னும் மெசோதிலியோமா போன்ற புற்று நோய், அஸ்பெஸ்டாஸ் வெளிபாட்டால் ஏற்படக் கூடியவையாகும். 

அஸ்பெஸ்டாஸ் தொடர்புடைய பணிகளை செய்யும் தொழிலாளர்கள் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பின் அத்தகையவர்களுக்கு நுரையீரல் புற்று நோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. புகை பழக்கம் இல்லாத அஸ்பெஸ்டாஸ் தொடர்புடைய பணி செய்யும் தொழிலாளர்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இல்லாத மற்றவர்களை விட புற்று நோய் ஏற்படும் சாத்தியம் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவும், அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இன்றைய நாட்களில் அஸ்பெஸ்டாஸ் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.

பாரம்பரியம் :
புகை பிடிக்கும் அனைவருக்கும் நுரையீரல் புற்று  நோய் பாதிப்பு ஏற்படுவதில்லை. மரபணு பாதிப்பு போன்ற இதர காரணிகளும் இந்த பாதிப்பிற்கு முக்கிய காரணிகளாக அமைகிறது. பொது ஜன மக்கள் தொகையில், நுரையீரல் புற்று நோய் பாதிப்பு கொண்டவர்களின் உறவினர் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர் அல்லது புகை பிடிக்கும் பழக்கம் அற்றவர் யாராக இருந்தாலும் அவருக்கு நுரையீரல் புற்று நோய் அபாயம் இருக்கவே செய்கிறது என்று பல்வேறு ஆய்வுகள் விளக்குகின்றன.

காற்று மாசு :
வாகனங்கள், தொழிற்சாலை, அணுமின் உலைகள், போன்றவற்றில் இருந்து வெளிப்படும் காற்று மாசு, நுரையீரல் புற்று நோயை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 2000 க்கும் மேற்பட்ட நுரையீரல் புற்று நோய் இறப்புகளுக்கு காற்று மாசு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. வருங்காலத்தில் இந்த மாசு அதிகரிப்பதால் பேசிவ் ஸ்மோகிங் காரணமாக ஏற்படும் உயிரிழப்பை விட இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.