கூந்தல் மற்றும் உச்சந்தலையில் உண்டாகும் துர்நாற்றம் விலக எளிய வீட்டுத் தீர்வுகள்

ஒரு சிலரின் உச்சந்தலை மற்றும் கூந்தலில் ஒருவித துர்நாற்றம் வீசுவதை நாம் அறிந்திருக்கலாம். அவர்கள் அருகில் சென்றாலே முகம் சுளிக்க வைக்கும் இந்த துர்நாற்றம் பல்வேறு காரணங்களால் தோன்றுகிறது.

கூந்தல் மற்றும் உச்சந்தலையில் உண்டாகும் துர்நாற்றம் விலக எளிய வீட்டுத் தீர்வுகள்

எண்ணெய் பிசுபிசுப்பு, பூஞ்சை தொற்று, அதிக வியர்வை, ஹார்மோன் சமச்சீரின்மை, போன்ற காரணங்களால் இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பும் உண்டு. மோசமான சுகாதாரம் பேணுதல் இந்த பாதிப்பிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இத்தகைய துர்நாற்றத்தை உங்கள் கூந்தலில் இருந்து விரட்டி, நறுமணத்தைக் கொண்டு வர மிக எளிய தீர்வுகள் சிலவற்றை நாம் பின்பற்றலாம். அவற்றைப் பற்றி அறிந்து கொள்வதற்கு இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

1. எலுமிச்சை சாறு:
உச்சந்தலையில் வீசும் துர்நாற்றத்திற்கு கிருமிகள் காரணமாக இருக்கலாம். ஆகவே, எலுமிச்சை பயன்படுத்தி இந்த துர்நாற்றத்தைப் போக்க முயற்சிக்கலாம். எலுமிச்சையில் கிருமி எதிர்ப்பு பண்பு இருப்பதால், கிருமிகளை அழிக்கும் பொறுப்பை ஏற்று கூந்தலை நறுமணம் வீசச் செய்கிறது. மேலும், எலுமிச்சை பொடுகைப் போக்கவும் உதவுகிறது. இரண்டு கப் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். இந்த கலவையை நன்றாகக் கலந்து தலைக்கு ஷாம்பூ தேய்த்த பின் இந்த நீரைக் கொண்டு தலையை அலசவும். சில நிமிடங்கள் இந்த கலவை உங்கள் தலையில் ஊறியவுடன் , வழக்கமான நீரில் உங்கள் தலையை அலசவும்.

2. பூண்டு:
கூந்தலில் துர்நாற்றம் வீசச் செய்யும் கிருமிகளை அழிக்க, கிருமி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் கொண்ட பூண்டை பயன்படுத்தலாம். 4-5 பூண்டு பற்களை எடுத்து நன்றாக மசித்துக் கொள்ளவும். இந்த பூண்டை, தேங்காய் எண்ணெயில் சேர்த்து, இந்த கலவையை மிதமாக சூடாக்கவும். பின்பு அந்த எண்ணெய்யை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய்யை உங்கள் உச்சந்தலையில் தடவி அரை மணி நேரம் ஊற விடவும். பின்பு, குளிர்ந்த நீரால் தலையை அலசவும். ஒரு வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இதனைப் பின்பற்றுவதால் விரைவில் நல்ல தீர்வைப் பெறலாம்.

3. ஆப்பிள் சிடர் வினிகர்:
ஆப்பிள் சிடர் வினிகரில் உள்ள பக்டீரியா எதிர்ப்பு பண்பின் காரணமாக, இதனைப் பயன்படுத்தி, கூந்தலில் உள்ள கிருமி பாதிப்பை சரி செய்யலாம். இரண்டு கப் தண்ணீரில் அரை கப் ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து கலக்கவும். வழக்கமான ஷாம்பூ கொண்டு தலையை அலசியவுடன், இந்த ஆப்பிள் சிடர் வினிகர் சேர்க்கப்பட்ட நீரைக் கொண்டு தலையை அலசவும். சில நிமிடம் கழித்து சாதாரண நீரில் தலையை அலசவும். ஒரு வாரத்தில் இரண்டு முறை இதனை செய்வதால் நல்ல தீர்வு கிடைக்கும்.

4. வெங்காய சாறு:
வெங்காயம், உச்சந்தலையில் உள்ள கிருமிகளை எதிர்க்கிறது, எண்ணெயப் பசையைப் போக்குகிறது, மேலும் பூஞ்சைத் தொற்றைப் போக்குகிறது. முடி உதிர்வால் வழுக்கை பிரச்சனை உள்ளவர்களுக்கும் வெங்காயம் சிறந்த ஒரு தீர்வைத் தருகிறது. ஒரு முழு வெங்காயத்தை எடுத்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். இந்த சாற்றில் பஞ்சை நனைத்து, உச்சந்தலையில் தடவவும். 10 நிமிடம் ஊறியபின், தலையை அலசவும். வாரத்திற்கு ஒரு முறை இதனைப் பின்பற்றலாம்.

5. கற்றாழை ஜெல்:
கற்றாழை தலையில் உள்ள துர்நாற்றத்தைப் போக்குவதோடு மட்டுமில்லாமல், எண்ணெய் பிசுபிசுப்பைப் போக்கி, பொடுகையும் விரட்டுகிறது. உங்கள் கூந்தலை இயற்கையான முறையில் கண்டிஷன் செய்ய உதவுகிறது. ஒரு கற்றாழை இலையை எடுத்து அதன் ஜெல்லை எடுத்துக் கொள்ளவும். அதனை உங்கள் கூந்தலில் தடவி, சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்பு அடுத்த 5 நிமிடங்கள் ஊற விடவும். சிறப்பான விளைவுகளுக்கு இந்த தீர்வை வாரத்திற்கு இரண்டு முறை பின்பற்றவும். 

6. தக்காளி சாறு:
துர்நாற்றம் விளைவிக்கும் கிருமிகளை அழிக்க, தக்காளி விழுதில் உள்ள கிருமி எதிர்ப்பு பண்புகள் மிகவும் உதவுகிறது. தக்காளியில் இருந்து விழுதை எடுத்து, நேரடியாக உங்கள் உச்சந்தலையில் தடவவும். அரை மணி நேரம் ஊற விடவும். பின்பு குளிர்ந்த நீரில் தலையை அலசவும். வாரத்திற்கு இரண்டு முறை இதனை பின்பற்றவும். சிறந்த தீர்வுகள் கிடைக்கும்.

7. பேக்கிங் சோடா:
பொதுவாக அனைவரும் அறிந்த ஒரு எளிய தீர்வு உச்சந்தலைக்கு பேக்கிங் சோடா பயன்பாடு. பேக்கிங் சோடா, கிருமி எதிர்ப்பு பண்புகள் கொண்டது. மேலும் கூந்தலில் எண்ணெய் பசையைப் போக்கி, கூந்தலின் துர்நாற்றத்தைப் போக்க உதவுகிறது. ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்து 3 ஸ்பூன் நீரில் சேர்த்து கலக்கவும். இந்த பேஸ்ட் ஒரு மிதமான கலவையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். உங்கள் தலையில் இந்த பேஸ்டை தடவி, 10 நிமிடம் ஊற விடவும். பின்பு சாதாரண நீரால் தலையை அலசவும். சிறந்த தீர்வுக்கு இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்யவும்.