தலை முடியின் ஈரப்பதத்தை அதிகரிக்க சில வழிகள்!

நீளமான, பளபளப்பான, கூந்தலை பிடிக்காதவரும் யாராவது உண்டா?

தலை முடியின் ஈரப்பதத்தை அதிகரிக்க சில வழிகள்!

எல்லா பெண்களுக்கும் இந்த விருப்பம் உன்டு. பாரம்பரிய முறையில் அல்லது பிறந்தது முதல் சிலருக்கு இந்த பாக்கியம் சிறு வயதிலேயே கிடைத்து விடுகிறது. அதனால் என்ன? முயன்றால் முடியாது என்று எதுவும் இல்லை. ஆகவே கூந்தலை அழகாக மாற்ற சில எளிய வழிமுறைகள் உள்ளன. பணத்தை அதிகம் விரயம் செய்யாமல் அவற்றை முயற்சித்து அனைவரும் அழகான மற்றும் பளபளப்பான கூந்தலை பெறலாம்.

அழகான கூந்தலுக்கு அடிப்படை, ஈரப்பதம். இந்த ஈரப்பதம் தலை முடியில் இருக்கும்போது வறட்சி ஏற்படாது. இதனால் முடி உடைதல், நுனி வெடிப்பு போன்றவை தடுக்கப்படுகிறது. ஆகவே இயற்கையான முறையில் கூந்தலுக்கு ஈரப்பதத்தை கொடுப்பதற்கான வழிகளை இப்போது பார்க்கப் போகிறோம். 

I .ஊட்டச்சத்து:
உடல் ஊட்டச்சத்தோடு இருக்கும்போது ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது தலை முடியும்  ஆரோக்கியமாக இருக்கும். 

1. தண்ணீர்:
அதிகமாக தண்ணீர் குடியுங்கள். உடலை நீர்ச்சத்தோடு வைத்திருக்க தண்ணீர் மிகவும் உதவியாக உள்ளது. நமது கூந்தலும் 25%  தண்ணீரால் ஆனது. தண்ணீர், முடியின் அணுக்களுக்கு ஆற்றலை தந்து வளர்ச்சியை அதிகரிக்கிறது. தலை முடியில் நீர்சத்து அதிகமாக இருப்பதால் நச்சுக்கள்  வெளியேற உதவியாய் இருக்கிறது. இதனால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். நீர்வறட்சி, முடி உதிர்தல் மற்றும் உடைவதற்கு வழி வகுக்கும். ஆகவே ஒரு நாளைக்கு 8 க்ளாஸ் தண்ணீர்  குடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

2. . ஆரோக்கிய உணவு:
வைட்டமின் பி மற்றும் புரதம் அதிகம் உள்ள உணவுகள் நீளமான மற்றும் மென்மையான கூந்தலை  பெற உதவுகிறது. கடல் உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்ளும்போது ஆரோக்கியமான கூந்தல் வாய்க்கிறது. கடலோர பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு நீளமான கூந்தல் இருப்பதை நாம் கண்டிருக்கிறோம் இல்லையா? கேரளா, கன்னியாகுமாரி போன்ற இடங்களில் உள்ள பெண்களின் கூந்தல் அழகு, உலக புகழ் பெற்றதை நாம் அறிவோம். ஆகவே கடல் உணவு மற்றும் புரத உணவை  அதிகம் எடுத்துக் கொள்வோம். 

II .ஹேர் மாஸ்க்:
ஹேர் மாஸ்க் பயன்படுத்துவதால் கூந்தல் அதிக பளபளப்பாகவும் மென்மையாகவும் மாறுகிறது.
கூந்தல் பராமரிப்பில் தேனை சேர்த்துக் கொள்ளுங்கள். அவகேடோ மற்றும் தேன் சேர்த்து செய்யப்பட்ட மாஸ்க் கூந்தல் இழந்த ஈரப்பதத்தை மீட்டு தர உதவுகிறது.
ஹேர் மாஸ்க் மற்றும் கண்டிஷனிங் செய்ய மற்றொரு சிறந்த பொருள் முட்டை.

1. ஒரு முட்டையுடன் 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலக்கி முடியில் தடவவும். ஒரு ஷவர் காப் அணிந்து 10 நிமிடங்கள் இருக்கவும். பின்பு தலையை அலசவும். முட்டையில் உள்ள புரதம் மற்றும் அமினோ அமிலம் கூந்தலை வலிமையாக்கி பளபளப்பை தருகிறது. ஆலிவ் எண்ணெய் கூந்தலை மென்மையாக்கி வறட்சியை போக்குகிறது.

2. ஒரு முட்டையுடன் சிறிதளவு தேன் மற்றும் தயிர்  சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். இந்த கலவையை உங்கள் கூந்தலில் தடவி 20 நிமிடம் கழித்து தலையை அலசவும். இது உங்கள் கூந்தலை நொடியில் பளபளப்புடன் மாற்றும். 

III .எண்ணெய் மசாஜ்:
தலை முடியின் ஈரப்பத்திற்கு ஒரு அருமையான தீர்வு எண்ணெய் மசாஜ். தலைக்கு மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் முடியின் ஆரோக்கியம் அதிகரித்து வளர்ச்சி அதிகமாகிறது.
எதாவது ஒரு வெதுவெதுப்பான எண்ணெய் கொண்டு தலையை மசாஜ் செய்யுங்கள். இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து பளபளப்பான முடி வளர்ச்சி ஏற்படுகிறது.

மசாஜ் செய்தபிறகு வெதுவெதுப்பான நீரில் நனைக்கப்பட்ட துண்டு ஒன்றை எடுத்து பிழிந்து தலையில் சுற்றி கொள்ளவும். எண்ணெய்யின் சூடு மற்றும் துண்டின் சூடு சேர்ந்து வேர்கால்களுக்கு ஒரு இதமான உணர்வை தந்து புத்துணர்ச்சி அடைய செய்யும் . இதனால் முடி வளர்ச்சி ஏற்படும்.

சந்தையில் கிடைக்கும் முடி வளர்ச்சிக்கான மூலிகைகளை வாங்கி எண்ணெய்யில் போட்டு ஊற வைத்து அந்த எண்ணெயை பயன்படுத்தலாம். 
வீட்டில் இருக்கும் செம்பருத்தி இலை, ரோஜா இதழ்கள், மருதாணி இலைகள் போன்றவற்றை காய வைத்து தினமும் பயன்படுத்தும் எண்ணெய்யில் போட்டு பயன்படுத்தலாம்.

IV .ஷாம்பு:
எல்லோரும் இன்றைய நாட்களில் ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசுகிறோம். மிகவும் மென்மையான ஷாம்பூவால் அழுக்கை போக்க முடியாது. கடினமான ஷாம்பூவால் முடிகளுக்கு சேதம் ஏற்படும். ஈரப்பதமும் வெளியேறும். இதனால் முடி வறண்டு உடையும் அபாயம் ஏற்படும். அதனால் அந்த ஷாம்பூவுடன் 1 ஸ்பூனை விட குறைவாக பேக்கிங் சோடாவை சேர்க்கவும். இதனை பயன்படுத்தும்போது தலையில் உள்ள பிசுபிசுப்பு நீங்கி தலை முடி பளபளப்பாகவும் அழகாவும் அழுக்கில்லாமல் தோன்றும்.

மற்றொரு வழி, 
ஷாம்பூவுக்கு மாற்றாக பேக்கிங் சோடாவை மட்டும் பயன்படுத்தி தலையை அலசலாம். எண்ணெய் பிசுபிசுப்பை உறிஞ்சி, இறந்த அணுக்களை வெளியாக்குகிறது.  அழுக்கை நீக்கி முடிக்கு நல்ல பளபளப்பு கொடுக்கிறது. பொடுகு தொல்லையும் குறையும்.

V . தலையை அலசுவது:
ஷாம்பு பயன்படுத்தி தலையை நீரால் அலசியவுடன் இறுதியாக,
வினிகர் பயன்படுத்தி தலையை அலசலாம். 
உருளை கிழங்கின் தோலை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை பயன்படுத்தலாம். 
செவ்வந்தி பூ டீ அல்லது ப்ளாக் டீ கொண்டு இறுதியாக ஒரு முறை தலையை அலசலாம்.

முடி வளர்ச்சி என்பது எளிதான விஷயம் இல்லை. உணவு, பழக்கவழக்கம் , பராமரிப்பு போன்றவற்றால் மெல்ல மெல்ல முடி வளர்ச்சியை அதிகரிக்க முடியும் . முயற்சித்து பாருங்கள்.