அதிகாலையில் சீக்கிரம் கண் விழிக்க சில எளிய குறிப்புகள்

காலையில் விரைவாக எழ இங்கே சில குறிப்புகள்.

அதிகாலையில் சீக்கிரம் கண் விழிக்க சில எளிய குறிப்புகள்

காலையில் சீக்கிரம் எழுவது என்பது பல பேருக்கு மிகவும் கடினமான ஒரு விஷயம் ஆகும். அதிகாலையில் தான் தூக்கமும் அதிகமாக வருவது போல் தோன்றும். கண் விழிக்க மனசே வராது. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினால் சுகமாக இருக்கும் என்று  தோன்றும். ஆனால் அடுத்தடுத்து இருக்கும் வேலை பளு காரணமாக நாம் எழுந்தாக வேண்டிய நிலை உண்டாகிறது. சில நேரம் இந்த அதிக வேலை பளுவின் காரணமாகவும் தூக்கத்தின் தன்மை பாதித்து காலையில் சீக்கிரம் எழ முடியாத நிலை உண்டாகிறது.

இந்த பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி நாம் இந்த பதிவில் காணலாம். காலையில் விரைவாக எழ இங்கே சில குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. 

1. குறைந்த அளவு இரவு உணவு எடுத்துக் கொள்வது
2. மின்னணு கேட்ஜெட்களை நிறுத்தி வைப்பது
3. படுக்கைக்கு அருகில் அலராம் வைக்காமல் இருப்பது
4. தூங்கச் செல்வதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் பருகுவது
5. படுக்கையில் இருந்து எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் குளிப்பது

1. குறைந்த அளவு இரவு உணவு எடுத்துக் கொள்வது:
இரவு உறங்கச் செல்வதற்கு முன் அதிகமான அளவு உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது. வயிறு முட்ட உணவு உண்பதால் மறுநாள் விழிக்கும்போது மிகவும் சோம்பலாக உணரத் தோன்றும். அதிகமான அளவு உணவு உண்பதால் அஜீரண கோளாறு உண்டாகலாம். ஆகவே இரவு உறங்கச் செல்வதற்கு முன் குறைந்த அளவு உணவு உண்பதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். மிகவும் குறைந்த அளவு உணவை உட்கொள்வதால் நடு இரவில் பசி எடுக்கும் நிலை உண்டாவதால் உறக்கம் கெடுகிறது. மிதமான அளவு உணவை உட்கொள்வதால் தூக்கம் தடைபடாமல் தூங்க முடிகிறது. இதனால் மறுநாள் காலை விரைவாக எழ முடிகிறது.

2. மின்னணு கேட்ஜெட்களை நிறுத்தி வைப்பது:
உறங்கச் செல்வதற்கு முன் எதாவது படிப்பது, அல்லது இசையைக் கேட்டு ரசிப்பது அல்லது கணினி அல்லது தொலைக்காட்சியைப் பார்ப்பது, போன்றவற்றை பழக்கமாகக் கொண்டுள்ளோம். ஆனால் இந்த பழக்கங்கள்  பல நேரங்களில் நமது உறக்கத்தைக் கெடுக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை. ஆகவே நம்மை நீண்ட நேரம் விழிக்க வைக்கும் இத்தகைய மின்னணு சாதனங்களை உறங்கச் செல்லும் முன் நிறுத்தி வைப்பது நல்லது. மின்னணு சாதனங்களை உறங்கும் நேரத்தில் கையாளுவதால் தூக்கம் பாதிக்கப்பட்டு , மறுநாள் காலை சீக்கிரம் எழ முடியாமல் அந்த நாளில் வேலை பாதிக்கப்படுகிறது.

3. படுக்கைக்கு அருகில் அலராம் வைக்காமல் இருப்பது:
படுக்கையில் அல்லது படுக்கைக்கு அருகில் அலாரத்தை வைத்துக் கொள்வதால், அலாரம் அடிக்கும்போது, உடனடியாக அதனை நிறுத்தி விட்டு மறுபடி தூக்கத்தைத் தொடருவது நமது வாடிக்கையாக உள்ளது. ஆகவே அலாரத்தை படுக்கையை விட்டு தொலைவாக வைத்துக் கொள்வதால், அலராம் அடித்துக் கொண்டே இருக்கும். அதனை நிறுத்த எழுந்து வர வேண்டியிருக்கும். இதனால் தூக்கம் தடைபடும். விரைவாக விழித்து விடுவதால் நாம் திட்டமிடும் வேலையும் பாதிக்காது. 

4. தூங்கச் செல்வதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் பருகுவது:
இரவில் உறங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் பருக வேண்டும். இதனால் சிறுநீர்ப்பை செயல்பாடு சிறந்த முறையில் ஏற்பட்டு, மறுநாள் காலையில் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும். இதனால் தூக்கம் தொலைந்து விழிப்பு உண்டாகும். அதே நேரம், மிக அதிக அளவு தண்ணீர் பருகுவதால், சிறுநீர்ப்பை நிரம்பி, நடு இரவில் சிறுநீர் கழிக்கும் எண்ணம் தோன்றி, தூக்கம் தடை படலாம். சிறுநீரகம் தொண்டர்பான தொந்தரவுகள் மற்றும் நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்கள், இதனைத் தவிர்ப்பது நல்லது.

5. படுக்கையில் இருந்து எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் குளிப்பது;
தூக்கத்தில் இருந்து விழிப்பு வந்தவுடன் படுக்கையில் இருந்து எழுந்து கொள்வது நல்லது. படுக்கையிலேயே மீண்டும் புரண்டுக் கொண்டிருந்தால்  மறுபடி தூக்கம் தழுவக் கூடும். ஆகவே தூக்கம் தெளிந்தவுடன் படுக்கையில் இருந்து எழுந்து, உங்கள் தினசரி கடமைகளை ஆற்றத் தொடங்குங்கள் . பல் துலக்குவது, காலைக் கடன்களைச் செய்வது போன்றவற்றைத் தொடங்குங்கள். இதனைச் செய்வதால், தூக்கம் தொலைந்து சுறுசுறுப்பாக மாறுவீர்கள். தூக்கம் முழுவதும் தொலைய, குளிர்ந்த நீரில் குளிக்கலாம். 

மேலே கூறிய குறிப்புகளை முயற்சி செய்வதால் நீங்கள் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து விழிக்க முடியும். இந்த பயிற்சியைத் தொடங்கும் முதல் நாளிலேயே மிகவும் சீக்கிரமாக எழுவதற்கு முயற்சிக்க வேண்டாம். உங்கள் உடல் அதற்கு ஒத்துழைக்காது. இதனால் உங்கள் உடல் விரைவில் சோர்வடைய நேரும். காலையில் விரைந்து விழிக்க கொஞ்சம் கொஞ்சமாக பழகுங்கள். ஒழுக்கமாகவும், நீங்கள் திட்டமிட்ட நேரத்தில் விழிக்கவும் முயற்சியுங்கள். இதனால் உங்கள் உடல் செயல்பாடுகள் சீராக இருக்கும்.

காலையில் சீக்கிரம் விழிக்கும் பழக்கம் வந்தவுடன், அந்த நாளை, தியானம் அல்லதி சில நிமிட யோகாசனம் மூலம் தொடங்குங்கள். இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் அதிகரிக்கும். ஆகவே, இந்த குறிப்புகளைப் பின்பற்றி அதிகாலையில் எழுத்து, நேர்மறை எண்ணத்துடன் உங்கள் குறிக்கோளை அடைய முயற்சி செய்யுங்கள். உங்கள் முயற்சிகள் வெற்றி பெற எங்கள் வாழ்த்துகள் ..