குழந்தைகளுக்கு கழுத்தில் தடிப்பு ஏற்படுவதற்கான காரணம், அறிகுறி மற்றும் அதற்கான தீர்வுகளும், தடுக்கும் முறைகளும்

கழுத்தை சுற்றியுள்ள பகுதியில் அரிப்பு ஏற்படுவது அதனால் கழுத்து பகுதி சிவந்து போவது கழுத்தில் தடிப்பு ஏற்படுவதாகும். தடிப்பு ஏற்பட்ட பகுதி, தோல் உரிந்து சற்று தடியாக வீங்கி இருக்கும்.

குழந்தைகளுக்கு கழுத்தில் தடிப்பு ஏற்படுவதற்கான காரணம், அறிகுறி மற்றும் அதற்கான தீர்வுகளும்,  தடுக்கும் முறைகளும்

குழந்தைகளுக்கு கழுத்தில் தடிப்பு ஏற்படுவதற்கான காரணம், அறிகுறி மற்றும் அதற்கான தீர்வுகள் மற்றும் தடுக்கும் முறைகள் 

குழந்தையின் சருமம் மிகவும் மென்மையானது மற்றும் மிருதுவானது. இத்தகைய மிருதுவான சருமத்தை பாதுகாக்க பெற்றோர் போதிய கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். குழந்தைகளின் சருமத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பதால், தடிப்பு போன்ற சரும பாதிப்புகள் அவர்களுக்கு எளிதில் உண்டாக நேரலாம். பொதுவாக சருமத்தில் மடிப்பு ஏற்படும் பகுதிகளான முட்டி, தொடை மற்றும் கழுத்தில் தடிப்புகள் தோன்றலாம். அதிலும் கழுத்து பகுதியில் குழந்தைகளுக்கு பெரும்பாலும் தடிப்பு உண்டாகும் வாய்ப்பு அதிகம். கொழுகொழு குழந்தைகளுக்கு கழுத்தில் அதிக மடிப்புகள் தோன்றுவது இயற்கை. மேலும் கழுத்து பகுதியில் உள்ள தோல் மிகவும்   மென்மையாக இருப்பதால் தடிப்பு ஏற்படுவது எளிதாகிறது. பெரும்பாலான தடிப்புகள் தானாக தோன்றி தானாக மறைந்து விடுகின்றன. குழந்தைக்கு தலை நிற்கும் காலகட்டத்தில் இந்த தடிப்புகள் தானாக குறைந்து விடும். 

கழுத்தில் தடிப்பு ஏற்படுவது என்றால் என்ன?
கழுத்தின் மடிப்பு பகுதிகளில் இந்த தடிப்பை அதிகம் காண முடியும். பொதுவாக நான்கு முதல் ஆறு மாத குழந்தைகள் இந்த கழுத்து தடிப்பால் பாதிக்கப்படுகிறார்கள். கழுத்தில் இந்த ராஷ் என்னும் தடிப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றுள் பூஞ்சை பாதிப்பு, சரும எரிச்சல் மற்றும் வேர்க்குரு போன்றவை சில காரணங்கள் ஆகும்.


குழந்தைகளுக்கு தடிப்புகள் உண்டாக காரணம் என்ன ?
குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த கழுத்து தடிப்புகளை எளிய வீட்டுத் தீர்வுகள் மூலம் சில நேரம் சரி செய்ய முடியும். ஆனால் அது பற்றி தெரிந்து கொள்ளும் முன்னர், இந்த தடிப்பு ஏற்படுவதற்கான முதன்மைக் காரணம் பற்றி அறிந்து கொள்வது அவசியம். குழந்தைகளுக்கு கழுத்தில் தடிப்புகள் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

1. ஸ்டோர்க் பைட் :
குழந்தையின் கழுத்து பகுதியில் சிவப்பு அல்லது பிங்க் நிறத்தில் ஒரு மச்சம் போல் காணப்படும். பிறப்புக்குறி போல் சில நேரம் இது காணப்படும். தோல் பகுதிக்கு கீழே உள்ள இரத்த குழாய்கள் விரிவடைவதால் இத்தகைய தடிப்பு தோன்றலாம். அறையின் வெப்பநிலையில் மாறுபாடு ஏற்படும்போது இந்த மாற்றத்தை நாம் உணர முடியும் அல்லது குழந்தை அழும்போது இதனைக் கவனிக்கலாம். ஆனால் இத்தகைய தடிப்புகள் தற்காலிகமானவை மற்றும் இவை தானாக மறைந்து விடும். 

2. சரும எரிச்சல்:
குழந்தையின் சருமத்தில் உள்ள மடிப்புகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதால் தடிப்புகள் உண்டாகலாம். இது மட்டும் அல்ல, குழந்தைகளுக்கு அணிவிக்கும் ஆடைகள் குழந்தையின் சருமத்தை உரசுவதால் கூட தடிப்புகள் ஏற்படலாம். தொடர் உராய்வினால் உண்டாகும் எரிச்சல் காரணமாக கழுத்து பகுதியில் தடிப்புகள் உண்டாகலாம்.

3. பூஞ்சை தொற்று :
பச்சிளங் குழந்தைகளுக்கு பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்படுவதால் கழுத்தில் தடிப்பு உண்டாகலாம். கான்டிடா போன்ற பூஞ்சைகள் வளர்வதற்கு ஏற்ற இடமாக, ஈரப்பதம் மிக்க  மற்றும் வெதுவெதுப்பான பகுதிகள் இருக்கின்றன. குழந்தையின் கழுத்து பகுதியில் உள்ள மடிப்புகள் பூஞ்சை வளர்வதற்கு சிறந்த இடமாக இருப்பதால் இவை இந்த இடத்தில்  வளர்ந்து தடிப்பை உண்டாக்குகின்றன. மேலும் இந்த பகுதியில் வியர்வை மற்றும் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. 

4. வேர்க்குரு :
வேர்க்குரு பொதுவாக வெயில் காலங்களில் அனைவரையும் பாதிக்கும். குறிப்பாக குழந்தைகள் இதன் தாக்கத்திற்கு அதிகம் உள்ளாவார்கள். வெப்ப நிலை அதிகரிக்கும்போது, சருமத்தில் வியர்வை அதிகரித்து , வியர்வை குழாய் அடைக்கப்படுகிறது. இதனால் கழுத்து பகுதிகளில் சிவப்பு நிற தடிப்புகள் தோன்றி அதிக எரிச்சலைத் தருகின்றன. இவை வெப்ப தடிப்பு அல்லது வியர்வை தடிப்பு என்றும் கூறப்படலாம்.

5. பால் வழிவது  :
தாய்ப் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு கழுத்து பகுதியை சுற்றி சிறு சிறு தடிப்புகள் வருவது பொதுவானது. பால் குடிக்கும்போது தாய்பால் சில இடங்களில் சிந்துவதால் அல்லது குழந்தை வாயிலிருந்து வழிவதால் இது ஏற்படுகிறது.  பால் குடித்த பின் இந்த இடங்களை சரியாக சுத்தம் செய்யாமல் விடும்போது, ஈரப்பதம் அதிகரித்து கழுத்து பகுதியில் தடிப்பு உண்டாக நேரலாம்.

குழந்தைகளுக்கு கழுத்தில் தடிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன, அவை,
  1. சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றுவது
  2. பாதிக்கப்பட்ட இடத்தில் வலி மற்றும் எரிச்சல் உண்டாவது
  3. சில நேரங்களில் காய்ச்சல் 
  4. சில நேரங்களில் பசியின்மை
  5. வலி மற்றும் எரிச்சலால் அசௌகரியத்தை உணரும் குழந்தை 

 
கழுத்தில் உண்டான தடிப்பை போக்குவதற்கான பொதுவான சிகிச்சை:

கழுத்தில் உண்டான தடிப்பைப் போக்க சில பொதுவான சிகிச்சை உள்ளன. அவற்றை இப்போது பார்க்கலாம்.

1. சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது :

குழந்தைகளுக்கு மிகவும் மென்மையான சோப் மற்றும் பாடி வாஷ் பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் குழந்தைகளின் சருமம் இதமாக உணர்கிறது. குழந்தைகளின் உடலில் சோப் பயன்படுத்தும் போது மிகவும் மென்மையாக சோப்பு கட்டியை கையாள வேண்டும். அழுத்தி தேய்க்கவோ , தடவவோ கூடாது. குளித்த பின், குழந்தையின் உடலை மென்மையான டவல் மூலம் மிருதுவாக தொட்டு துடைக்க வேண்டும். சருமத்தில் உள்ள மடிப்புகளில் ஈரத்தை முழுவதும் துடைத்து, ஈரப்பதம் இன்றி வைத்துக் கொள்ள வேண்டும். 

2. கழுத்து தடிப்பைப் போக்க சிகிச்சை :

தடிப்புடன் எரிச்சலும் சேர்ந்து இருந்தால், கழுத்து பகுதியை குளிர்ந்த நீரால் கழுவி துடைக்கலாம். சருமத்தின் தடிப்புகளுக்கு பொதுவாக எந்த ஒரு மருந்தும் தேவைப்படுவதில்லை. பூஞ்சை தொற்று பாதிப்பால் உண்டான தடிப்புகளுக்கு மருத்துவர், ஈஸ்ட் க்ரீம் அல்லது பூஞ்சை  க்ரீம் பரிந்துரைப்பார். ஹைட்ரோ கார்டிசொன் க்ரீம் ஒரு சதவிகிதம் பயன்படுத்துவதால் நல்ல மாற்றத்தை உணர முடியும். 

3. வெப்ப தடிப்பைப் போக்க சிகிச்சை :
வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு மிகவும் லேசான ஆடைகளை உடுத்த வேண்டும். இதனால் சருமம் எளிதாக சுவாசிக்க முடியும். வேர்க்குரு அதிக அளவில் பாதிக்காமல் இருக்க குழந்தைகளை குளிர்ச்சியான அறையில் வைத்துக் கொள்ளலாம். வேர்க்குருவைப் போக்க லாக்டோ கலமைன் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

கழுத்தில் உள்ள தடிப்பைப் போக்க சில எளிய வீட்டுத் தீர்வுகள்:
கழுத்தில் உள்ள தடிப்புகளைப் போக்க சில எளிய வீட்டுத் தீர்வுகளை இப்போது நாம் காணலாம்.

1. சோளமாவு :
கழுத்தில் தடிப்பு இருந்தால், குழந்தை குளித்து முடித்தவுடன், பாதிக்கப்பட்ட இடத்தில் சோளமாவைத் தடவவும். இதனால் அந்த இடத்தில் ஈரப்பதம் இன்றி காணப்படும். 

2. லேசான பருத்தி ஆடைகள் :
குழந்தைகளுக்கு எப்போது லேசான பருத்தி ஆடைகளை அணிவிப்பது நல்லது. சின்தடிக் ஆடைகள் எரிச்சலை மேலும் அதிகப்படுத்தலாம். குழந்தைகளுக்கு அதிகமாக உடை உடுத்த வேண்டாம்.

3. குளிர் ஒத்தடம்:
கழுத்து பகுதியில் குளிர் ஒத்தடம் தருவதால் எரிச்சல் குறையலாம். ஒரு நாளில் சில முறை இதனைத் தொடர்ந்து செய்து வரலாம். ஆனால் ஒத்தடம் கொடுத்து முடித்தவுடன் அந்த இடத்தை சுத்தமாக ஈரமின்றி உலர வைக்கவும். 

4. தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெயின் நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மை காரணமாக, தடிப்பில் உள்ள எரிச்சல் குறையலாம். மேலும் தடிப்புகள் விரைவாக குறையலாம். 

5. பேக்கிங் சோடா:
குழந்தையை குளிக்க வைக்கும் நீரில் இரண்டு ஸ்பூன் அளவு பேக்கிங் சோடா சேர்த்து குளிக்க வைக்கவும். இதனால் குழந்தைகளின் தடிப்பு குறையலாம். 

6. வெதுவெதுப்பான நீர் பயன்பாடு:

குழந்தைகளை சாதாரண நீரில் குளிக்க வைப்பதை விட, வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைக்கலாம். 

7. டால்கம் பவுடர் பயன்பாடு:
குழந்தைகளின் சருமத்தில் மடிப்புகள் இருக்கும் இடத்தில டால்கம் பவுடரை தூவி விடலாம். இதனால் அந்த இடங்கள் ஈரப்பதமின்றி இருக்கும். 

8. ஓட்ஸ் பயன்பாடு:
குழந்தைகள் குளிக்கும் நீரில் இரண்டு முதல் நான்கு ஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து குளிக்க வைப்பதால் தடிப்புகள் குறைகிறது. 


தடுப்பு முறை:
கழுத்து தடிப்பை தடுக்க கீழே கூறியுள்ள சில முயற்சிகளை பின்பற்றலாம்.

1. குழந்தைகளுக்கு அதிகமாக உடை உடுத்துவதை தவிர்க்கவும்:
குழந்தைக்கு எப்போதும் குளிரும் என்ற எண்ணத்தில், பெரிய போர்வை போர்த்துவதை தவிர்க்கவும். இதனால் குழந்தைக்கு வியர்க்க நேரலாம். 

2. பல முறை குளிக்க வைப்பதை தவிர்க்கவும்:
பல முறை ஒரு நாளில் குளிக்க வைப்பதால் குழந்தையின் சருமம் வறண்டு விடலாம். குளிக்க வைப்பதற்கு மாற்றாக ஒரு ஈரத் துணி கொண்டு துடைத்து விடலாம். 

3. குழந்தையின் கழுத்து பகுதி சுத்தமாகவும், உலர்ந்தும் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்:
வெளியில் அதிக வெப்ப நிலை இருக்கும்போது , குழந்தையை காற்றோட்டமான அறையில் வைத்துக் கொள்ள வேண்டும். ஈரப்பதம் அதிகரிப்பதால் தடிப்புகள் அதிகமாக நேரலாம். 

4. பால் சிந்துவதை துடைத்து விடுங்கள்:
குழந்தை தாய்ப்பால் குடித்து முடித்தவுடன் வாய் முதல் கழுத்து வரை நன்றாக துடைத்து விடுங்கள். இதனால் குழந்தைகளின் மடிப்புகள் ஈரம் சேராமல் இருக்கும்.