உடல் வெளியிடும் அறிகுறிகள்

இயந்திரமாக சுழலும் மனிதனின் உடல் கூட ஒரு வகையில் இயந்திரம் தான் .

உடல் வெளியிடும்  அறிகுறிகள்

உலகமே இயந்திரத்தனமாக சுழன்று கொண்டிருக்கிறது. மனிதனுக்கும் வாழ்க்கை இயந்திர தன்மையுடன் தான் இருக்கிறது. இயந்திரங்கள் அவைகளுக்கு எதாவது குறைபாடுகள் ஏற்படும்போது அதன் வேலையை செய்யாமலே நின்று விடும். ஆனால் மனித உடல் ? அதன் குறைபாடுகளை சில சமிச்ஞைகள் மூலம் உணர்த்தும் தன்மை ஆச்சர்யப்பட வைக்கும் ஒரு உண்மை ஆகும். 

உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் குறைகளை பற்றிய தகவல்களை சில வகையான சிக்னல் மூலம் நமது புரிதலுக்கு அனுப்புகிறது. அந்த அறிகுறிகளை உணர்ந்து தக்க நேரத்தில் அதனை சரி செய்வதே சிறந்த தாகும். சில நேரம் இவை உடனடி  மருத்துவ ஆலோசனை பெற வேண்டிய அறிகுறிகளாகவும் இருக்கலாம். அந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல்  இருக்க வேண்டும். 

தவிர்க்கப்படக்கூ டாத சில உடல் அறிகுறிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை அறிந்து கொள்வோம்.

கண்ணுக்கு கீழ் கருவளையம் :
சரியான அளவிற்கு தூக்கம் இல்லாதவர்களுக்கு கண்ணுக்கு கீழ் கருவளையம் தோன்றும் . ஒரு நாளைக்கு கண்டிப்பாக 7-8 மணி நேரம் நல்ல தூக்கம் அவசியம். இரத்த சோகை இருந்தாலும் இந்த கருவளையம் தோன்றும். உடல் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய முடியாமல் போகும் போது கண்ணுக்கு  கீழே உள்ள சருமம் கருமையாக மாறும்.

விரல்களில் நிற மாற்றம் :
கை மற்றும் கால் விரல்கள் அடிக்கடி நிற மாற்றத்துடன் காணப்படுவது தவிக்க பட வேண்டிய ஒன்றாகும். இது ரேய்னட்ஸ் சிண்ட்ரோம்(Raynaud's syndrome) என்ற நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.  குறைந்த வெப்ப நிலையில் இரத்த நாளங்களில் ஏற்படும் சுருக்கத்தின்  காரணமாக இந்த நிற மாற்றம் ஏற்படும். இந்த அறிகுறியை தவிர்க்க கூடாது.

மங்கிய பார்வை:
கண்கள் மிகவும் சோர்வாக காணப்படும்போது மற்றும் நமக்கு முன்னால்  இருக்கும் நபரை அல்லது பொருளை காண்பதில் சிரமம் இருக்கும் போது அது கண் பார்வையை சரி பார்க்கும் தருணம் என்பதை உணர வேண்டும். பார்வை மங்கும் போது உடனடியாக கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும்.

கண்ணுக்கு முன் குமிழ் :
அதிகமான வெளிச்சத்தை கண்கள் பார்க்கும் போது ஒரு வித புள்ளிகள், அல்லது கோடுகள் அல்லது குமிழ்கள் போல் தோன்றி மறையும். இதன் பாதிப்பு இரவு நேரத்தில் அதிகமாக இருக்கும். இது கேட்ராக்ட் அல்லது  வேறு  கண் உபாதைக்கான ஆரம்ப கட்ட அறிகுறியாகும். 

வயிற்றுக்குள் ஓசை :
மிகவும் பசியெடுக்கும் நேரத்தில் அல்லது உணவு உண்ட சில மணி நேரங்களுக்கு பிறகு  வயிற்றில் இருந்து ஒரு ஓசை வருவதை நாம் உணர்ந்திருப்போம். பொதுவாக இது குடல் இயக்கத்தில் இருந்து உருவாகும் ஒரு ஒலியாகும். இந்த வகை ஒலி எப்போதாவது கேட்டால் அதில் தவறு  ஒன்றும் இல்லை. ஆனால் இந்த ஒலி அடிக்கடி கேட்பதுடன், வலியும் சேர்ந்து ஏற்படும்போது மருத்துவரை காண்பது அவசியமாகும்.   

தோல் உரிதல் :
உடலில் சில இடங்களில் தோல் உரிவது வைட்டமின் குறைவிற்கான அறிகுறியாகும். இதனை  உணர்ந்து சரி விகித உணவை எடுத்து கொண்டால் இந்த தோல் உரிதல் சரியாகும். அதுவே தோல் உரிவத்துடன் அரிப்பும் சேர்ந்து ஏற்படும் போது அலட்சியம் செய்யாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

நுகர்தலில் பிரச்னை:
நுகரும் சக்தியில் குறைபாடு ஏற்படுவது நரம்பு சேதமாகிறது என்பதன் அறிகுறியாகும். பொதுவாக வயது முதிர்ந்தவர்களுக்கு இந்த தொந்தரவு ஏற்படும். அதிகமான சளி அல்லத கிருமி தொற்று ஏற்படும்போது இந்த வகை பாதிப்பு ஏற்படலாம். இளம் வயதில் நுகர்தலில் பாதிப்பு ஏற்படும் போது மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்பது நல்லது. 

இமை துடிப்பு :
கண் இமைகள்,ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் துடிக்கும். நீண்ட நேரம் இமைகள் துடிக்கும் போது கண்கள் அதிகமான வேலையால்  பாதிக்கப்பட்டுள்ளது என்பது பொருள். இதனை சரி செய்ய காட்டன்  பஞ்சை குளிந்த நீரில் நனைத்து கண்களை துடைக்க வேண்டும். கண்களை கழுவிய பின்னும் இமைகள் துடிப்பது நிற்க வில்லை என்றால் மருத்துவரை காண்பது நல்லது. நரம்பு சம்மந்தமான தொந்தரவுகள் இருந்தாலும் இந்த வகையான இமைகள் துடிப்பு ஏற்படும்.

மேலே சொன்ன சிக்னல்களை இதுவரை அலட்சியம் செய்திருந்தாலும், இனிமேல் உடனடியாக தீர்வை கண்டுபிடிப்பது அவசியம்.