இரவு நேரத்தில் இருமலா?

இருமலைப் போக்கி ஆழ்ந்த உறக்கம் பெறுவதற்கான தீர்வுகள்

இரவு நேரத்தில் இருமலா?

பனிக்காலம்  என்பதால் ஜலதோஷம், மூக்கடைப்பு  போன்றவை தவிர்க்க முடியாததாகும். ஜலதோஷம் என்றாலே இருமலும் சேர்ந்து இருக்கும். அதுவும் குறிப்பாக இரவில் படுக்கும்போது இருமல் அதிகமாகலாம். ஓரளவிற்கு சளி குறையும் போதும்  வறட்டு இருமல் நம்மை வாட்டி எடுக்கும். இரவு நேரத்து இருமல் நம்மையும் நமக்கு அருகில் இருப்பவர்களையும் தூங்க விடாமல்  செய்து விடும். ஆனால் சில சக்திமிக்க  தீர்வுகள்  மூலம்  இயற்கையான  வழியில்  இருமலைப்  போக்க முடியும். நீங்கள் தொடர்ந்து இரவு நேரத்தில் இருமல் தொந்தரவால் பாதிக்கப்பட்டிருந்தால் கீழ் காணும் தீர்வுகளை முயற்சித்து நிவாரணம் பெறலாம். இதனால் உங்கள் தூக்க பிரச்சனையும் தீர்ந்துவிடும்.

இரவு நேரத்து இருமலுக்கான தீர்வுகள் : 

தேநீர்  அருந்துங்கள் :

தேநீர் தொண்டைக்கு இதமளிக்கும். சிறந்த நிவாரணத்திற்கு இஞ்சி தேநீர் பருகலாம். மற்றொரு சிறந்த தேர்வு மஞ்சள் கொண்டு தயாரிக்கப்பட்ட தேநீர். இரவு உறங்கச் செல்வதற்கு முன் ஒரு கப் தேநீர் பருகலாம். இருமல் மற்றும் சளிக்கான அறிகுறிகளிலிருந்து இயற்கையான முறையில் நிவாரணம் பெற தேநீர் உங்களுக்கு உதவும். துளசி தேநீர் மற்றும் இதர மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்ட தேநீர் கூட இருமலை எதிர்த்து போராட உதவும்.

தேன் :

உடலுக்கு பல வழிகளில் நன்மை புரிவது தேன். குளிர் காலத்தில் தேனை உங்கள் உணவில் கட்டாயம் இணைத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக இரவு நேரத்தில் இருமலைத் தடுக்க தேன் சிறந்த முறையில் உதவுகிறது. வெதுவெதுப்பான பால் அல்லது ஒரு கப் தேநீருடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து பருகலாம். இன்னும் மற்ற வழிகளிலும் தேனை உங்கள் உடலில் சேர்த்துக் கொள்ள முடியும்.

இஞ்சி :

இருமலை எதிர்த்து போராடும் சக்தி மிக்க தன்மை இஞ்சியில் உண்டு. புதிய இஞ்சி துண்டுகள்  கொண்டு இஞ்சி தேநீர் தயாரித்து பருகலாம். சிறிதளவு இஞ்சியை எடுத்து சாறு பிழிந்து அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து பருகலாம். இதனை உறங்கச் செல்வதற்கு முன் பருகுவதனால் இருமல் தடுக்கப்படும். இரண்டு மூன்று நாட்களில் உங்கள் உடலில் நல்ல முன்னேற்றம் தெரியும்.

வெந்நீர் ஆவி பிடிப்பது :

சளி மற்றும் இருமல் பாதிப்பு ஏற்படும்போது பலரும் பயன்படுத்தும் ஒரு எளிய வீட்டுத் தீர்வு ஆவி பிடிப்பது . உடனடி மற்றும் விரைவான நிவாரணம் பெற இந்த முறை உங்களுக்கு கைகொடுக்கும். மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் பெறவும் இது உதவும்.

சூடான திரவங்கள் :

இருமல் மற்றும் சளியில் இருந்து வெளிவருவதற்கு முக்கிய தேவை திரவங்கள். இரவு நேரத்தில் இருமல் ஏற்படுவதைத் தவிர்க்க, நிறைய நிறைய சூடான திரவங்களை பருகலாம். வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் கலந்து பருகுவதால் நல்ல தீர்வு கிடைக்கும். இருமலை எதிர்த்து போராட சூப் பருகுவதும் ஒரு சிறந்த தீர்வாகும்.