35 வயத்திற்கு மேல் மேற்கொள்ள வேண்டிய இரத்த பரிசோதனைகள்

நமக்கு வயது ஏறிக்கொன்டே போகிறது என்பதை உணர்த்தும் உடல் குறியீடுகள் 30களின் மத்தியில் ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணுக்கும் தோன்றும். அது சாதாரணமானதுதான். உடலியல் மாற்றங்கள், தலை முடியில் சில நரை முடி, நீண்ட நேர பயணத்தில் உடல் வலி , தூக்கமின்மை போன்றவை இதன் சில அறிகுறிகள். இவை சொல்ல உணர்த்தும் ஒரு செய்தி என்னவென்றால், நமது உடலை பாதுகாக்கும் சரியான நேரம் இது என்பது தான். ஆகவே நாம் குடும்ப மருத்துவரை அணுகி செக்கப் மற்றும் இரத்த பரிசோதனைகளை எடுத்து கொள்வது நல்லது. இரத்த பரிசோதனை என்பது எல்லா நோய்க்கும் மருந்தாகாது. ஆனால் நமது உடலின் தற்போதைய தன்மையை நாம் உணர ஒரு வாய்ப்பு என்று எடுத்துக் கொள்ளலாம். உடலுக்கு தேவையான மாற்றங்களை மருத்துவரின் ஆலோசனைப்படி ஏற்படுத்தி கொள்ளலாம்.

35 வயத்திற்கு மேல் மேற்கொள்ள வேண்டிய இரத்த பரிசோதனைகள்

நீரிழிவு பரிசோதனை:
உடல் எடை அதிகமாக இருந்தால், உயர் இரத்த அழுத்தம் இருந்தால், உங்கள் முன்னோர்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், நிச்சயம் நீங்களும் நீரிழிவு பரிசோதனையை  மேற்கொள்ள வேண்டும். 35-70 வயது வரை உள்ளவர்களுக்கு மற்றும் அதிக எடை உள்ளவர்களுக்கு  நீரிழிவு பரிசோதனை  அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தொடர்ந்து இரத்தத்தில் க்ளுகோஸ் அளவு சீராக இருக்கும் பட்சத்தில் வருடத்திற்கு ஒரு முறை இந்த பரிசோதனையை மேற்கொள்வது போதுமானது.

கொலஸ்ட்ரால் பரிசோதனை:
உடலில் உள்ள கொழுப்புகளின் தன்மையை அறிந்து கொள்ள இந்த  லிபிட் பேனல் என்ற இரத்த பரிசோதனை உதவுகிறது. 35 வயதுக்கு மேல் ஆண்களுக்கும், 45 வயதுக்கு மேல் பெண்களுக்கும் இதய நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை வைத்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை கணிக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பரிசோதனையில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பதை அறிந்து கொண்டால் அதற்கான சிகிச்சைகளை ஆரம்பிக்க வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை சிகிச்சையின் பலன்களை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. ஒருமுறை பரிசோதித்ததில் கொலஸ்ட்ரால் அளவு சரியாக இருக்கும் பட்சத்தில் அடுத்த ஒரு வருடத்திற்கு இந்த பரிசோதனையை மீண்டும் செய்ய தேவையில்லை. கொலஸ்ட்ரால் அளவு பார்டரில் இருக்கும் போது அதனுடன் நீரிழிவு போன்ற தொந்தரவுகள் இருக்குமானால் தொடர்ந்து சிகிச்சையை மேற்கொள்வது இதய நலனை பாதுகாக்கும். 

பால்வினை நோய்களுக்கான பரிசோதனை:
பலர், பால்வினை நோய்கள் தொடர்பான சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்கவும் அதை பற்றி பேச தயக்கம் காட்டுவதும் உண்டு. ஆனால் இந்த போக்கு மாற வேண்டும். இந்த வயதில் பால் வினை நோய்கள் வரும் வாய்ப்புகள் உண்டு. ஆகையால் மருத்துவரிடம் இந்த விஷயத்தை பற்றி பேச எந்த தயக்கமும் கொள்ள தேவை இல்லை. மருத்துவரின் ஆலோசனைப்படி தேவை ஏற்பட்டால் பால் வினை நோய்க்கான பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

TSH பரிசோதனை :
தைராய்டு சுரப்பு குறை இன்று பெரியவர்கள் மத்தியில் அதிகமாக தோன்றும் ஒரு நோயாக  இருக்கிறது. இதனை அறிந்து கொள்வதற்கான அறிகுறிகளும் கடினமானதாக இருக்கிறது. சோர்வு மற்றும் ஆற்றல் குறைவு போன்றவற்றால் பலரும் பாதிக்க படுவர். இதனை ஒரு அறிகுறியாக எடுத்து கொள்ள முடியாது. ஆகையால் TSH பரிசோதனையால் மட்டுமே இந்த நோய் உள்ளது தெரிய வரும். அவ்வப்போது இந்த பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. TSH அதிகமாக இருப்பதாக பரிசோதனை முடிவில் தெரிய வந்தால், உங்களுக்கு தைரொய்ட் நோய் இருக்கிறது என்று பொருள். இதற்கு தகுந்த சிகிச்சையை மேற்கொள்வது அவசியம்.
35 வயதிற்கு மேல் தான் நம்மை சார்ந்து ஒரு குடும்பம் செயல் பட துவங்கும். ஆகையால் அந்த நேரத்தில் நமது உடலை ஆரோக்கியத்தோடு வைத்து கொள்வது ஆண் பெண் இருவருக்கும் கடமையாகும். பரிசோதனையின் முடிவுகள் எப்படி இருந்தாலும், தகுந்த சிகிச்சையால் நமது உடலை பாதுகாத்துக் கொள்வது அவசியம்.