ஹைபர் டென்ஷன் அல்லது உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க ஆரோக்கிய பானங்கள்

இந்தியாவின் கார்டியோலாஜிகல் சொசைட்டி (சி.எஸ்.ஐ.) யின் 2017 அறிக்கையின் படி, ஒவ்வொரு மூன்று இந்தியர்களில் ஒருவர் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்படுவதால் , இருதய நோய்கள் இந்தியாவில் பெருவாரியான விகிதாச்சாரத்தைப் பெரும் ஒரு நோயாக உள்ளது

ஹைபர் டென்ஷன் அல்லது உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க ஆரோக்கிய பானங்கள்

இரத்த அழுத்த பாதிப்பைக் குறைக்க மருந்துகள் உதவினாலும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை நிர்வகிப்பது முக்கியமாக கருதப்படுகிறது. உயர் இரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் உப்பு, கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது ஒரு முக்கிய அறிவுரையாக வழங்கப்படுகிறது. மேலும் காய்கறிகள், பழங்கள், மெலிந்த புரதம் ஆகியவற்றை உணவில் இணைத்துக் கொள்வது நல்லது. காபின் சேர்க்கப்பட்ட பானங்கள் மற்றும் மது போன்றவற்றை முற்றிலும் தவிர்ப்பதால் இரத்த அழுத்தம் குறைவதாக சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இவை இரண்டையும் அதிக அளவில் எடுத்துக் கொள்வது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஹைபர் டென்ஷனை நிர்வகிக்க சில குறிப்பிட்ட உணவுகள் இருந்தாலும், சில வகை பானங்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் பாதிப்புகளைக் குறைக்க உதவுகின்றன.

உங்கள் இரத்த அழுத்தத்தை நன்றாக நிர்வகிக்க மேக்ரோபியாடிக் ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் சுகாதார பயிற்சியாளர் ஷில்பா அரோரா பரிந்துரை செய்த சில முக்கியமான பானங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

1. ஆப்பிள் சிடர் வினிகர் 
இயற்கையான முறையில் ஆரோக்கியத்தை கொடுக்கும் மிகவும் பிரபலமான ஒரு பொருள் ஆப்பிள் சிடர் வினிகர். இந்த இயற்கை வினிகரில் மிகவும் அதிகமான ஆரோக்கிய நன்மைகள் பொதிந்துள்ளன. ஆப்பிள் சிடர் வினிகரில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், உடலில் உள்ள அதிக அளவு சோடியம் மற்றும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இதில் ரெனின் என்னும் என்சைம் இருப்பதால் இரத்த அழுத்தம் குறைய உதவுகிறது. ஆப்பிள் சிடர் வினிகரை தேனுடன் சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து காலையில் பருகுவதால் நல்ல பலன் கிடைக்கும்.

2. எலுமிச்சை நீர்:
காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் நீரில் எலுமிச்சை கலந்து பருகுவதால் உங்கள் ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்று உலகம் முழுவதும் உள்ள சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எலுமிச்சை கலந்த நீர் உங்கள் உடலின் அணுக்களை சுத்தம் செய்ய உதவுகிறது. மேலும், இவை இரத்தக் குழாய்கள்  மென்மையாகவும் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்க உதவுகிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைகிறது. எலுமிச்சை நீரில் வைடமின் சி இருப்பதால் ஒரு சிறந்த அன்டி ஆக்சிடென்ட்டாக செயல்பட்டு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகளை அழிக்க உதவுகிறது. ஆகவே தினமும் காலையில் ஒரு கிளாஸ் எலுமிச்சை நீர் பருகுவதால் உங்கள் உடலின் இரத்த அழுத்த அளவை நிர்வகிக்க முடியும்.

3. வெந்தய நீர் :
வெந்தய நீரில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் கலந்த நீரை உட்கொள்வதால் இரத்த அழுத்த அளவு கட்டுப்படுகிறது. 

4. சியா விதைகள் ஊறவைத்த நீர் 
சியா விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது. இது இரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்க உதவுவதால் இரத்த அழுத்தம் குறைகிறது. சியா விதைகளை நீரில் அரைமணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அந்த நீரை பருகவும். ஒரு மாதம் தொடர்ந்து இந்த நீரை பருகுவதால் நல்ல பலன் கிடைக்கும்.

5. கொழுப்பு அற்ற அல்லது கொழுப்பு குறைந்த பால் :
கொழுப்பு குறைவான அல்லது கொழுப்பு இல்லாத பால் உடலுக்கு பொட்டாசியம் மற்றும் கால்சியத்தை வழங்குகிறது. ஆரோக்கியமாக இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் உதவுகிறது. அதிக கொழுப்பு நிறைந்த பால் பொருட்கலில் பல்மிடிக் அமிலம் இருப்பதால் அதனை தவிர்ப்பது ஒவ்வொருவருக்கும் நல்லது. இரத்த குழாய்களை நெகிழ வைக்கும் சிக்னல்களை இவை தடுப்பதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

இரத்த அழுத்தத்தைக் குறைக்க ஒரு அருமையான ரெசிபியை ஊட்டச்சத்து நிபுணர் ஷில்பா இங்கே குறிப்பிட்டுள்ளார். 
அதற்கு தேவையான பொருட்கள்:
புதினா இலைகள் (ஒரு கிண்ணம்)
கொத்துமல்லி இலைகள் (ஒரு கிண்ணம்)
நெல்லிக்காய்(கொட்டை எடுத்தது 4-5)
தண்ணீர்(ஒரு கப்)

செய்முறை:
மேலே கூறிய எல்லா பொருட்களையும் ஒன்றாக அரைத்து அந்த நீரைப் பருகவும்.

இரத்த அழுத்தத்தைக் குறைக்க ஏற்கனவே மருந்துகள் எடுக்கும்போது இந்த பானங்களையும் பருகுவதால் இரத்த அழுத்தம் மீண்டும் குறைய வாய்ப்புள்ளது. ஆகவே இந்த பானங்களைப் பருகுவதற்கு முன் மருத்துவ ஆலோசனைப் பெறுவது நல்லது.