நவராத்திரி பண்டிகை

மூன்று தேவியரின் சக்தியை போற்றும்விதமாக மட்டுமின்றி, பெண்களின் சக்தியையும் போற்றும்விதமாக கொண்டாடப்படும் பண்டிகை இந்த நவராத்திரி.இந்த விழாவை இந்தியாவில் விசேஷமாக கொண்டாடிவருகிறார்கள்.

நவராத்திரி பண்டிகை

நவராத்திரி
நவராத்திரி என்றால் ஒன்பது இரவுகள் என்று பொருள். நவ என்றால் ஒன்பது என்றும் ராத்திரி என்றால் இரவு என்றும் சமஸ்க்ருதத்தில் பொருள்படும். இந்த பண்டிகை ‘தசரா’ என்றும் அழைக்கப்படும். இந்த பண்டிகை ஒவ்வொரு வருடமும் புரட்டாசி அமாவாசைக்கு அடுத்த நாளாகிய  பிரதமையில் தொடங்கி தசமி திதி வரை நடைபெறும். விஜயதசமி என்பது தீமையை அழித்து வெற்றி பெற்றதற்காக கொண்டாடப்படும் நாள். விஜயதசமி நாளன்று முதன் முதலில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது,  இசைப்பயிற்சி, நடன பயிற்சி, கலைகளை கற்றுக்கொள்ள ஆரம்பிப்பது போன்றவற்றை செய்வதால் அந்த கலையில் வெற்றி காணலாம் என்பது ஐதீகம். இது  வெற்றியை குறிக்கும் நாள் என்பதால், புதிய தொழில்களையும் தொடங்குவர்.

நவராத்திரியின் 9 நாட்களில், முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும்  அடுத்த மூன்று நாட்கள்  லக்ஷ்மியையும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியும்,. பத்தாம் நாள் மூன்று தேவியரையும் போற்றி வணங்கும் ஒரு பண்டிகை. 

இந்தப் பத்து நாட்களும், இம்மூன்று தேவிகளும்  பல ரூபங்களாக காட்சி அளிக்கின்றனர்

முதல் நாள் சாமுண்டேஸ்வரியாகவும், 

இரண்டாவது நாள் வராகியாகவும்,

மூன்றாவது நாள் இந்திராணியாகவும், 

நான்காம் நாள் வைஷ்ணவிதேவியாகவும், 

ஐந்தாம் நாள் மகேஸ்வரியாகவும்,

ஆறாம் நாள் கௌமாரியம்மாவாகவும்,

ஏழாம் நாள் சாம்பவி அம்மனாகவும்,

எட்டாம் நாள் நரசிம்மியாகவும்,

ஒன்பதாம் நாள் பிரம்மியாகவும்,

பத்தாம் நாள் மூன்று தேவிகள் ஒன்றாக சேர்ந்து துர்கை  ரூபத்தில் நமக்கு அருள்புரிவார்கள்.

கொலு பூஜை:  

புரட்டாசியில் வரும் நவராத்திரி ‘சாரதா நவராத்திரி’ என்று அழைக்கப்படும். புரட்டாசியில் வரும் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை திதியில்   கொலு வைக்க வேண்டும். கொலு வைக்கும் போது 3,5,7,9 என்ற ஒற்றைப் படையில்  படிகளை வைக்க வேண்டும். பலவிதமான தெய்வங்களையும்,  சிலைகளையும் அழகாக அடுக்கி வைக்கலாம்,அதனுடன் கலசத்தை வைக்க வேண்டும். கலசத்தில் அம்பாள் வீற்றிருப்பாள் என்பது ஐதிகம்.

கலசம் வைக்கும் முறை:

தாம்பாளத்தில் மஞ்சள் அரிசி வைத்து அதன்மீது பித்தளை அல்லது வெங்கல கலசத்தில் சிறிது பன்னீர், நான்கில் மூன்று பங்கு  தண்ணீர் ,மஞ்சள், ஜாதிபத்திரி, ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம்,  தங்கம், வெள்ளி அல்லது சாதாரண  காசு முதலானவற்றை  போட வேண்டும். அதன் பிறகு ஐந்து மாயிலை அல்லது வெற்றிலையை கலசத்தில் வைத்து,தேங்காயில் முழுமையாக மஞ்சள் பூசி, குங்குமத்தில் ஓம் அல்லது ஸ்வஸ்திக் வடிவத்தை   எழுதிய பிறகு கலசத்தின் மீது  தேங்காயை வைக்க வேண்டும். அதன் மேல் ஒரு சிவப்பு அல்லது பச்சை நிற துணியை போர்த்தலாம், பல வகையான வாசனை பூக்களையும் அதன் மீது போட வேண்டும். பிறகு அன்றன்றைக்கு உகந்த பிரசாதத்தை படைத்து பூஜை செய்ய  வேண்டும்.

நவகிரக நாயகிக்கு இந்த ஒன்பது நாட்களில் என்னென்ன பிரசாதம் செய்யலாம்: 

  • ஞாயிற்றுக்கிழமை:  கோதுமையில் அப்பம் அல்லது அல்வா மற்றும் கேசரி. 
  •  திங்கட்கிழமை: வெறும்  அரிசியில் சக்கரை பொங்கல்   மற்றும் பச்சைப்பயிறு சுண்டல். 
  • செவ்வாய் கிழமை:  துவரம் பருப்பு  பொங்கல் மற்றும் காராமணி சுண்டல். 
  • புதன்கிழமை:  பச்சைப்பயிறு சுண்டல் மற்றும் பதினா சாதம். 
  • வியாழக்கிழமை:  எலுமிச்சை சாதம் கொண்டைக்கடலை சுண்டல். 
  • வெள்ளிக்கிழமை:  தேங்காய் சாதம் அல்லது தயிர் சாதம் மற்றும் மொச்சை சுண்டல். 
  • சனி கிழமை:  எள்ளு சாதம், உளுந்து வடை மற்றும் நவதானிய சுண்டல். 
  •  பத்தாம் நாள்: சர்க்கரை பொங்கலும், சுண்டலும் செய்து அம்பாளுக்கு பிரசாதமாக படைக்கலாம் .

பத்தாம் நாள், பூஜையின் கடைசி நாள் என்பதால் பூஜை செய்துவிட்டு கலசத்தை வடக்கு   பார்த்து  சிறிது நகர்த்த வேண்டும், மறுநாள் கலசத்தை எடுத்து அந்த தண்ணீரை வீடு முழுக்க தெளிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி ஆரம்பிக்கும் நாளை கணக்கில் கொண்டு பிரசாதத்தை அந்தந்த நாளுக்கு ஏற்ப படைத்தால்  சகல  ஐஸ்வர்யத்தையும்   கொடுத்து,  நவகிரகங்களையும்   சாந்தப்படுத்தி நமக்கு நன்மையை  அளிப்பவள்  நவகிரக நாயகியாகிய  அம்பாள்.

மூன்று தேவியரின் சக்தியை போற்றும்விதமாக மட்டுமின்றி, பெண்களின் சக்தியையும் போற்றும்விதமாக கொண்டாடப்படும் பண்டிகை இந்த நவராத்திரி.இந்தப் பத்து நாட்களும் நாம் திருமணமான பெண்களையும், கன்னிப் பெண்களையும் வீட்டுக்கு அழைத்து தாம்பூலம்[வெற்றிலை, பாக்கு,  பூ, பழம்,ரவிக்கை அல்லது புடவை] கொடுத்து அதோடு சுண்டல், இனிப்பு வகைகள், கொலு பிரசாதங்கள் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அம்பிகையே அந்தப் பெண்கள் ரூபத்தில் வந்து நமக்கு   அருள்பாளிப்பார் என்பது ஐதீகம்.இந்த நாட்களில் உணவு இல்லாதவர்க்கு, உங்களால் இயன்றளவுக்கு உணவு அளித்து வந்தால், பல தலைமுறைக்கு சகல ஐஸ்வர்யத்தையும் தந்து காத்தருள்வாள் துர்கை.