5 இனிமையான மற்றும் ஆரோக்கியமான இந்திய இனிப்பு வகைகள்

சைவமோ, அசைவமோ, அனைத்து தரப்பு மக்களும் விரும்பி சாப்பிடும் இனிப்பு உணவுகள் நாவிற்கு புத்துணர்ச்சியைத் தருகின்றன.

5 இனிமையான மற்றும் ஆரோக்கியமான இந்திய இனிப்பு வகைகள்

பண்டிகை காலங்களில் மட்டுமல்ல, ஆண்டு முழுவதும் இனிப்பு சாப்பிடுவதில் எந்த ஒரு தவறும் இல்லை. உணவு வகைகளில் பலரின் விருப்பமான தேர்வு இனிப்பு உணவாகத் தான் இருக்க முடியும். ஒரு நாளின் தொடக்கத்தில் இனிப்பு சாப்பிடுவதால் நாள் முழுவதும் இனிமை பரவும் என்பது பலரின் கருத்தாகும். 

உங்கள் நாவிற்கு விருந்தாக இங்கு ஐந்து வகையான இனிப்பு உணவுகள் தயாரிப்பு முறை கொடுக்கப்பட்டுள்ளது. இதனைப் படித்து அனைவரும் இந்த இனிப்புகளைத் தயாரித்து உண்டு மகிழலாம். விடுமுறைக் காலமான இந்த காலகட்டம் இனிப்பு சாப்பிடுவதற்கான சிறப்பான ஒரு காலமாகும். ஆகவே அனைவரும் தவறாமல் இதனை முயற்சித்து உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

1. ஆற்றலைத் தரும் அத்தி மற்றும் நட்ஸ் லட்டு :
சக்தி மற்றும் ஆற்றலின் ஆதாரமாக விளங்கும் இந்த இனிப்பு லட்டு, பண்டிகை காலத்திற்கு மட்டும் ஏற்ற உணவுப்பொருள் அல்ல. தினசரி உணவிலும் இந்த லட்டுவை சேர்த்துக் கொள்வதால் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். மிகக் குறைந்த மூலப்பொருட்கள் கொண்டு எளிமையான முறையில் அதிக நேரம் செலவிடாமல் இந்த லட்டுவைத் தயாரிக்க முடியும். சிறந்த ஊட்டச்சத்து பெற உதவும் உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் கொண்டு இந்த இனிப்பு தயாரிக்கப்படுகிறது. இந்த இனிப்பில் தாவர புரதம் கூடுதலாக சேர்க்கப்படுவதால் இதன் சுவை அதிகரிப்பதோடு, இந்த இனிப்பு முழுமை அடைகிறது.

20 லட்டு செய்ய தேவையான பொருட்கள் :
 . ஒரு கப் முந்திரி
 . ஒரு கப் பாதாம்(தோல் உரித்த பாதாம் கூட பயன்படுத்தலாம்)
 . ஒரு கப் தோல் நீக்கப்பட்ட வேர்க்கடலை
 . அரை கப் பிஸ்தா
 . 2 கப் கொட்டை நீக்கப்பட்ட பேரிச்சம்பழம்
 . ஒரு கப் அத்திப்பழம்
 . 2 ஸ்பூன் ஆளி விதைகள்
 . ஒரு ஸ்பூன் எள்ளு (வெள்ளை அல்லது கருப்பு எள்ளு , எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்)
 . ஒரு ஸ்பூன் ஏலக்காய் தூள்
 . ஒரு சிட்டிகை குங்குமப்பூ
 . 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
 . தேங்காய் தூள் அல்லது பாதாம் தூள் (அலங்கரிக்க)
 . அரை கப் சர்க்கரை அல்லாத இயற்கையான தாவர புரதம்
 . தண்ணீர் தேவைக்கேற்ப 
 
செய்முறை:
 
முந்திரி, பாதாம், வேர்க்கடலை, பிஸ்தா, ஆளிவிதைகள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்சியில் அரைத்து தூளாக்கிக் கொள்ளவும். சர்க்கரை அல்லாத தாவர புரத பவுடரை இந்த அரைத்த கலவையில் சேர்த்து ஒரு புறம் எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்தது, பேரிச்சை, மற்றும் அத்திப் பழத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு விழுதாக அரைத்துக் கொள்ளவும். உலர் பழக் கலவையுடன் இந்த அத்திப்பழ பேரிச்சை விழுதை சேர்த்துக் கலந்து ஒரு மாவாக திரட்டிக் கொள்ளவும். இந்த மாவில், குங்குமப்பூ, எள்ளு, ஏலக்காய் தூள் , ஆளி விதை போன்றவற்றை சேர்த்து கலக்கவும். மாவு மிகவும் அடர்த்தியாக இறுக்கமாக  இருந்தால், சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கொள்ளவும். எல்லாம் முடிந்தவுடன் இந்த மாவில் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இப்போது லட்டு செய்ய மாவு தயார். கைகளில் ஒரு உருண்டைக்கு தேவையான மாவை எடுத்து நன்றாக லட்டு போல் உருட்டிக் கொள்ளவும். லட்டு உருண்டை தயாரானவுடன், பாதாம் அல்லது தேங்காய் தூளில் ஒரு பிரட்டு பிரட்டி எடுக்கவும். பின்பு அனைத்து லட்டுக்களும் தயாரானவுடன் 2-3 மணி நேரம் இந்த லட்டுவை பிரிட்ஜில் வைக்கவும். இதனால் லட்டு இறுக்கமாக மாறும். பின்பு 3 மணி நேரம் கழித்து உலர் பழம் மற்றும் நட்ஸ் சேர்த்து தயாரிக்கப்பட்ட லட்டுவை அனைவருக்கும் பரிமாறலாம்.

2. சாக்லேட் தேங்காய் லட்டு:
வெறும் 5 பொருட்கள் கொண்டு இந்த இனிப்பை உருவாக்க முடியும். மிகவும் எளிய முறையில் குறைந்த நேரத்தில் இந்த இனிப்பை தயாரித்து அனைவரிடமும் நல்ல பெயர் எடுக்கலாம். இந்த இனிப்பிற்கு மேலும் சுவை சேர்க்கும் வகையில் கொக்கோ பவுடர் அலல்து சாக்லேட் ப்ளேவர் தாவர புரத பவுடர் சேர்க்கலாம்.


12 லட்டு செய்ய தேவையான பொருட்கள்:
 . 2 கப் உலர் தேங்காய் துருவல்
 . 4-5 ஏலக்காய் விதைகள்
 . 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
 . அரை கப் முழு கொழுப்பு தேங்காய் பால்
 . 2/3 கப் வெல்லம்
 . 2 ஸ்பூன் தேங்காய் மாவு
 . அரை கப் சாக்லேட் தாவர புரத பவுடர்
 . ஒரு சிட்டிகை உப்பு

செய்முறை:
 
ஒரு மிக்சியில், உலர்ந்த தேங்காய் துருவலை கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும். இந்த தேங்காய் தூளில், ஏலக்காயை நுணுக்கி சேர்த்துக் கொள்ளவும். தேங்காய் பாலை சூடாக்கி, அதில் தேங்காய் எண்ணெய், வெல்லம் மற்றும் உப்பு சேர்க்கவும். இந்த கலவை கொதிக்கத் தொடங்கியவுடன், நெருப்பைக் குறைத்து, அரை கம்பி பதத்திற்கு வேக வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து, அதில் தேங்காய் மாவு, தாவர புரத பவுடர், தேங்காய் , ஏலக்காய் போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாகக் கலந்து லட்டு செய்ய ஏற்ற பதத்திற்கு கொண்டு வரவும்.  நன்றாக இந்த கலவை ஆறியவுடன் லட்டுவாக உருட்டவும். தேவைபட்டால், ஒவ்வொரு லட்டுவையும் தேங்காய் துருவலில் உருட்டி எடுக்கலாம். இதனை உடனடியாக பரிமாறலாம். காற்று புகாத ஜாரில் வைத்து அடுத்த சில நாட்கள் சாப்பிடலாம்.

3. பேரிச்சை கீர் :
பொதுவாக பண்டிகைக் காலங்களில் நாம் விரும்பி அருந்தும் ஒரு இனிப்பு , கீர். பாதாம் கீர் நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அது என்ன பேரிச்சை கீர்? ஆம், இதுவும் சுவை மிகுந்த ஒரு இனிப்பு தான். இது ஒரு பாரம்பரிய இனிப்பு வகை. வாருங்கள் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.
 
4 பேர் பருகுவதற்கு தேவையான பொருட்கள்:
 . 4 கப் பாதாம் பால்
 . அரை கப் பாசுமதி அரிசி, (கழுவி, அரை மணி நேரம் ஊற வைக்கப்பட்டது.)
 . ஏலக்காய் தூள் (தேவைப்பட்டால்)
 . உங்கள் விருப்பதிற்கேற்ப தென்னை சர்க்கரை , சீனித்துளசி  போன்றவற்றை சுவையூட்டிகளாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். 
 . 5-6 பேரிச்சை
 
செய்முறை:

பாதாம் பாலைக் கொதிக்க விடவும். பிறகு அதில் ஏலக்காய் தூள் சேர்க்கவும் , தென்னை சர்க்கரை சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். கொதிக்கும்போது, அடுப்பை குறைத்து வைக்கவும். பின்பு அதில் அரிசியைப் போட்டு வேக விடவும். அடிபிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறி விடவும். பால் சுண்டி, அரிசி வெந்தவுடன் சர்க்கரை சுவை பார்க்கவும். பின்பு அதில் நறுக்கி வைத்த பேரிச்சம் பழத்தை சேர்க்கவும். தென்னை சர்க்கரை  அல்லது சீனித்துளசிக்கு மாற்றாகவும் பேரீச்சம்பழம் பயன்படுத்தலாம். ஆறியபின், இந்த கீரை பரிமாறலாம். தேவைப்பட்டால் பிரிட்ஜில் வைத்து குளிர்ந்தபின் பரிமாறலாம்.
 
4. சுவை அதிகரித்த காஜர் அல்வா :
அல்வா ன்றாலே அனைவருக்கும் நாவுறும். அதுவும் முந்திரி அல்வா, அதுவும் க்ளுடன் அல்லாத சோயா அல்லாத ஒரு அல்வா தயாரிப்பது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம் 

4 பேருக்கான அளவு, தயாரிக்கத் தேவையான பொருட்கள்:
 . 2 ஸ்பூன் பாதாம் வெண்ணெய்
 . 3 ஸ்பூன் நறுக்கிய முந்திரி
 . 2 ஸ்பூன் உலர் திராட்சை
 . 2 ஸ்பூன் பிஸ்தா
 . 2 1/2 கப் துருவிய கேரட்
 . அரை கப் பாதாம் மீல் 
 . 11/4 கப் பாதாம் பால்
 . சீனித்துளசி சுவைக்கேற்ப
 . குங்குமப்பூ சிறிதளவு
 . அரை ஸ்பூன் ஏலக்காய் தூள்
 . 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் 

செய்முறை:
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை ஆகியவற்றை லேசாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். இந்தக் கலவையில் துருவிய கேரட் போட்டு, ஐந்து நிமிடம் வேக விடவும். அடுத்தது, இந்தக் கலவையில் பாதாம் மீல் மற்றும் பாதாம் பால் சேர்க்கவும். நன்றாகக் கலந்து, மிதமான தீயில் வைத்து 15  நிமிடங்கள் வேக விடவும். பாதாம் வெண்ணெய், குங்குமப்பூ, ஏலக்காய், போன்றவற்றை சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். நீர் உறிஞ்சப்படும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். சீனித்துளசி சேர்த்து சுவையைச் சரி பார்க்கவும். முழுவதும் வெந்தவுடன், சூடாக அல்வாவைப் பரிமாறவும்.

5. ஏர் பிரையர் மூலம் பொரித்த குலாப் ஜாமுன் :
மிகவும் பிடித்தமான இனிப்பு வகைகளில், குலாப் ஜாமுன் பலரின் தேர்வாக இருக்கும் . பிரட், முந்திரி க்ரீம் போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜாமுன் மிக எளிதாக தயாரிக்கக் கூடிய ஒரு இனிப்பாகும். வாருங்கள் அதன் செய்முறையை இப்போது காணலாம்.

14 குலாப் ஜாமுன் செய்யத் தேவையான பொருட்கள்:
 . 21/2 கப் வெள்ளை பிரட் துகள்கள் (பிரட்டின் ஓரத்தில் உள்ள பழுப்பு நிறப் பகுதியை வெட்டி எடுத்து , வெறும் வெள்ளை நிறத்தை மட்டும் தூளாக்கிக் கொள்ளவும்)
 . 1/2 கப் முந்திரி
 . 1/2 கப் தண்ணீர்
 . 2 ஸ்பூன் நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தா (அலங்கரிக்க)
 
இனிப்பு பாகு தயாரிக்க 
 . 11/2 கப் தண்ணீர்
 . 1 கப் சீனித்துளசி
 . 3-4 ஏலக்காய் 
 
பாகு தயாரிக்க செய்முறை:
தண்ணீரை நன்றாகக் கொதிக்க விடவும். கொதிக்கும்போது அடுப்பைக் குறைத்து வைத்து, அதில் சீனித்துளசி மற்றும் ஏலக்காய் சேர்க்கவும். 

ஜாமுன் தயாரிக்கும் செய்முறை:

முந்திரி மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து முந்திரி க்ரீம் தயார் செய்துக் கொள்ளவும். சிறிதளவு பிரட் துகள் சேர்த்து மாவு பதத்திற்கு கொண்டு வரவும். மாவை நன்றாகப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக அல்லது நீங்கள் விரும்பும் வடிவத்தில் உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளில் வெடிப்புகள் இல்லாதபடி கவனமாக உருட்டிக் கொள்ளவும்.  ஏர் பிரையர் பயன்படுத்தி ஜாமுன் உருண்டைகளை பொரித்து பொன்னிறமாகும் வரை வைத்திருந்து ஒரு பக்கம்  எடுத்து வைத்துக் கொள்ளவும். டூத் பிக் பயன்படுத்தி உருண்டைகளில் சில இடங்களில் ஓட்டைப் போட்டுக் கொள்ளவும். பின்பு இந்த உருண்டைகளை பாகில் ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் இந்த ஜாமுன் பாகில் ஊறலாம். நறுக்கி வைத்த பாதாம் மற்றும் பிஸ்தா பருப்புகளை ஜாமுனில் போட்டு அலங்கரிக்கவும். பால் இல்லாத குலாப் ஜாமுன் தயார்.