சரும அழகிற்கு பரங்கிக்காய் ...

பரங்கிக்காய் என்று அழகைப்படும் மஞ்சள் பூசணிக்காய் பல வித ஆரோக்கிய பலன்களை கொண்டது.

சரும அழகிற்கு பரங்கிக்காய் ...

பொங்கலன்று பயன்படுத்தப்படும் காய்கறிகளில் முக்கியமானது இந்த பரங்கிக்காய். மிகவும் குளிர்ச்சியான காயாகும். வைட்டமின் பி, வைட்டமின் சி போன்றவை இதில் அதிகம் உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அழகு குறிப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

பழங்காலம் முதன் பல்வேறு சரும பாதுகாப்பு முறைகளில் பரங்கிக்காய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் AHA  என்று சொல்லப்படும் ஆல்பா ஹைடிராக்சி அமிலம் உள்ளது. இந்த அமிலம் சருமத்திற்கு  புத்துணர்ச்சியளிக்கும் மற்ற வைட்டமின்களுடன் இணைந்து சருமத்தை இளமையுடன் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
பலரும் பரங்கிக்காயை தங்களது தினசரி சரும பாதுகாப்பிற்கு பயன்படுத்துகின்றனர். இதனை பற்றி இதுவரை தெரியாமல் இருந்தால், இந்த பதிவை படித்து இன்று முதல் உங்கள் சருமத்தையும் பளபளப்பாக்க இதனை பயன்படுத்துங்கள். பொதுவாக பரங்கிக்காயை, சரும பொலிவிற்கும், வயது முதிர்வை தடுக்கவும் பயன்படுத்தலாம். பின்வரும் குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் சரும அழகை மேம்படுத்தி வயது  முதிர்வை குறைக்கலாம்.

பரங்கிக்காய் மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய்:
ஒரு துண்டு பரங்கிக்காய் எடுத்து கொள்ளவும். வைட்டமின் ஈ மாத்திரையில் இருந்து அந்த எண்ணெய்யை மட்டும் எடுத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய்யுடன் பரங்கிக்காயை சேர்த்து மசித்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து கிளென்சர் அல்லது தண்ணீர் கொண்டு முகத்தை கழுவவும். இதனால் முகம் பொலிவடைகிறது.

பரங்கிக்காய் மற்றும் பட்டை தூள் :
1 ஸ்பூன் பரங்கிக்காய் விழுதுடன், 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 சிட்டிகை பட்டை தூள் சேர்க்கவும். எல்லாவற்றையும் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து தண்ணீரால் முகத்தை கழுவவும். இதனை செய்வதால் உங்கள் முகம் இளமையோடு இருக்கும். 

பரங்கிக்காய் மற்றும் தேன்:
ஒரு துண்டு  பரங்கிக்காயை  எடுத்துக் கொள்ளவும். அதனை அரைத்து விழுதாக்கி கொள்ளவும். அந்த விழுதை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.   அதே அளவு தேனை எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை எடுத்து முகத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். ஒரு வாரத்திற்கு ஒரு முறை இதனை பயன்படுத்துவதால் முகத்தில் பருக்கள் மற்றும் கொப்பளங்கள் தோன்றாமல் இருக்கும்.

பரங்கிக்காய் மற்றும் யோகர்ட்:
பரங்கிக்காயை எடுத்து அரிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். பரங்கிக்காய் சாறுடன் சிறிதளவு யோகர்ட் சேர்த்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இதனை தொடர்ந்து செய்வதால் உங்கள் வயது முதிர்ச்சி குறைய தொடங்கும். 30களின் தொடக்கத்தில் இதனை பயன்படுத்தும்போது வயது முதிர்வு தாமதமாகும்.

பரங்கிக்காய் மற்றும் பாதாம் எண்ணெய்:
பரங்கிக்காயை விழுதாக்கி ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் ½ ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்க்கவும். இரண்டையும் ஒன்றாக கலக்கவும். முகத்தில் இந்த கலவையை தடவி 10 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு தண்ணீரில் முகத்தை கழுவவும். 

பரங்கிக்காய் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர்:
பரங்கிக்காயை எடுத்து விழுதாக்கி கொள்ளவும். அதில் 1 ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் ½ ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் நன்றாக தடவவும். 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரால் முகத்தை கழுவவும். இதனை தொடர்ந்து செய்வதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளிச்சிடும்.

பரங்கிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு:
சிறிதளவு பரங்கிக்காயை  எடுத்து அரைத்து கொள்ளவும். இந்த விழுதை ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 2 ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும். இவை இரண்டும் சேர்ந்த கலவையை முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்வதால் முகம் விரைவில் பிரகாசமாக காட்சியளிக்கும்.

பரங்கிக்காய் மற்றும் ஓட்ஸ்:
1 ஸ்பூன் ஓட்ஸ் எடுத்துக் கொள்ளவும்.சிறிதளவு பரங்கிக்காயை எடுத்து சாறு எடுத்துக் கொள்ளவும். 1 ஸ்பூன் அளவு இந்த சாறை எடுத்துக் கொள்ளலாம். ஓட்ஸ்  மற்றும் பரங்கிக்காய் சாறை நன்றாக கலக்கவும். இந்த கலவையை எடுத்து முகத்தில் தடவவும். தடவிய பின் மென்மையாக ஸ்க்ரப் செய்யவும். இதை செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீக்கப்படுகின்றன, சரும துளைகளில் உள்ள அழுக்குகள் நீங்குவதால் முகம் பளிச்சிடும். 

பரங்கிக்காய் மற்றும் பப்பாளி :
பரங்கிக்காயை அரிந்து,  அரைத்து 1 ஸ்பூன் விழுது எடுத்துக் கொள்ளவும். பப்பாளியை தோல் நீக்கி மசித்து அதையும் 1 ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக கலந்து  ஒரு பேஸ்ட் போல் செய்யவும். இந்த பேஸ்டை முகத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இதனை வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம். இதனை செய்வதால் முகத்திற்கு உடனடி பொலிவு கிடைக்கிறது.

என்ன நேயர்களே , பரங்கிக்காயை சாப்பிட  பிடிக்காதவர்கள் கூட இனி இதனை வாங்கி அழகு குறிப்பிற்கு பயன்படுத்தலாமே … இதனை சரும பாதுகாப்பில் பயன்படுத்துவது மிகவும் எளிது. ஆகவே நீங்களும் இதனை முயற்சித்து முக அழகை அதிகரிக்கலாம். உங்கள் இளமையை தக்க  வைக்கலாம்.