பளிச் கண்களை பெற சில குறிப்புகள்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். முகத்தின் அழகு அழகான கண்களில் தெரியும். நம்மை அழகாக காட்ட எவ்வளவுதான் மேக் அப் போட்டாலும், கண்கள் பளிச்சென்று இல்லாவிட்டால் முகமே பொலிவிழந்து தான் காணப்படும். நாம் அழும்போது கண்கள் அழும்; நாம் சிரிக்கும்போது கண்களும் சிரிக்கும். நம் உணர்வை, உள்ளத்து இயல்பை வெளி காட்ட உதவும் ஒரு கருவி தான் கண்

பளிச் கண்களை பெற சில குறிப்புகள்

      "கண்ணோடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் 
         என்ன பயனும் இல "

கண்களோடு கண்கள் இணைந்து பார்வை ஓத்திருக்குமென்றால், அங்கே வாய் மொழிக்கு எந்த ஒரு இடமும் இல்லை என்று வள்ளுவர் கூறுகிறார். இவ்வாறு மனித உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் கண்களுக்கு உண்டு. அதனை நல்ல விதமாக பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

இன்றைய வேலை பளு , அழுத்தம் மிகுந்த வாழ்க்கை  முறை, சீரற்ற உணவு பழக்கம் போன்றவற்றால் கண்கள் தமது இயற்கை அழகை இழந்து காணப்படுகிறது. இதனால், கருவளையம், வீக்கம், கண்கள் சிவந்து போவது, கண் எரிச்சல், சுருக்கங்கள், இன்னும் பல வித பிரச்சனைகள் கண்களில் தோன்றுகிறது. ஆழ்ந்த தூக்கத்திற்கு பின்னும், கண்கள் ஒளியில்லாமல் சோர்வாகவே காணப்படுகின்றன. இவற்றை தடுத்து, கண்களுக்கு இயற்கையாக ஒளியை தந்து, பளிச்சென்ற கண்களை பெற சில குறிப்புகள் உண்டு. அவற்றை அறிந்து கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவும். தொடர்ந்து படியுங்கள். உங்கள் இதய வீட்டின் ஜன்னல் போன்ற கண்களை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

கருவளையத்தை போக்க சில குறிப்புகள்:

1. டீ பேக் :
குளிர்ச்சியான டீ பேக்கை கண்களை மூடி அதன் மேல் வைத்து கொள்ளலாம். பொதுவாக ப்ளாக் டீ  பேக்கை வைத்து கொள்ளலாம்.

2. குளிர வைத்த பஞ்சு:
பஞ்சை குளிர்ந்த நீரில் நனைத்து கண்களில் வைத்து கொள்ளலாம்.

3. வெள்ளரிக்காய்:
சோர்வான கண்களுக்கு வெள்ளரிக்காய் ஒரு அரு மருந்து. வெள்ளரிக்காயை துண்டு துண்டாக வெட்டி, கண்களில் மேல் வைத்துக் கொள்ளலாம். இதன் குளிர்ச்சி தன்மையோடு சேர்த்து, இது, கருவளையங்களையும் போக்குகிறது. 

4. வெள்ளரிக்காய் சாறு:
 . வெள்ளரிக்காயை வெட்டி, அரைத்து, வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும்.
 . பஞ்சை அந்த சாறில் 2 நிமிடம் நனைத்து எடுக்கவும்.
 . கண்களில் இமைகள் மற்றும் கருவளையம் உள்ள இடத்தில் அந்த பஞ்சை வைக்கவும்.
 . 15 நிமிடங்கள் கழித்து பஞ்சை எடுக்கவும்.
 . 2-3 நாட்கள் தொடர்ந்து செய்யும்போது நல்ல விளைவுகள் கிடைக்கும்.

5. தக்காளி விழுது  :
 . 1 தக்காளியை அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.
 . அதனுடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள், ½ ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 ஸ்பூன் கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.
 . கண் இமைகள் மற்றும் கருவளையம் உள்ள இடத்தில்  மென்மையாக தடவவும்.
 . ½ மணி நேரம் கழித்து, ஈர பஞ்சால் அந்த கலவையை கண்களில் இருந்து நீக்கவும்.
 . ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்.

6. பாதாம் எண்ணெய்:
 . 1 ஸ்பூன் பாதாம் எண்ணெய்யுடன் ½ ஸ்பூன் எலுமிச்சை சாறை சேர்க்கவும்.
 . இரவில் உறங்க செல்வதற்கு முன், கண்களில் கருமை உள்ள இடத்தில இந்த கலவையை தடவவும்.

 7. ரோஸ் வாட்டர்:
ரோஸ் வாட்டர் சருமத்தை புதுப்பிக்க வைக்கும் ஒரு பொருள். இவை சோர்வான கண்களுக்கு நல்ல தீர்வை கொடுக்கிறது. 
 . பஞ்சை எடுத்து ரோஸ் வாட்டரில் நனைத்து கண்களில் வைக்கவும்.
 . 15 நிமிடம் கழித்து பஞ்சை எடுக்கவும்.
 . கருவளையத்தை போக்க இது ஒரு மிக சிறந்த தீர்வாகும். எங்கும் எப்போதும் இதனை செய்து கருவளையத்தை போக்கலாம்.

பள்ளமான கண்கள்:
கண்ணுக்கு கீழே கருவளையம் இருக்கும்போது, கண்கள் குழிக்குள் இருப்பது போல் தோன்றும். இதனை தடுக்க சில எளிய முறைகள் உண்டு.

1. தேன் மற்றும் பாதாம் எண்ணெய்:
 . 1 ஸ்பூன் தேனுடன் ½ ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்க்கவும்.
 . இரவு உறங்க செல்லும் முன் இந்த  கலவையை கண்களை சுற்றி தடவவும்.
 . மறுநாள் காலை வழக்கம் போல் முகத்தை கழுவவும்.
 . சில நாட்களில் நல்ல மாற்றத்தை உணரலாம்.

2. பாதாம் மற்றும் பால்:
 . 5 பாதாம் எடுத்து இரவில் ஊற வைத்துக் கொள்ளவும்.
 . மறுநாள் காலை, பாதாமின் தோலை உரித்து விட்டு, அதனை  நன்றாக மென்று சாப்பிடவும் .
 . இதை தொடர்ந்து 1 டம்ளர் பால் குடிக்கவும்.
 . 21 நாட்கள் தொடர்ந்து இதனை செய்யும் போது நல்ல மாற்றம் கிடைக்கும்.

கண்கள் வீக்கமாக சிவந்து காணப்படுவது:
காலையில் கண்விழிக்கும்போது , கண்கள் வீக்கமாக சிவந்து காணப்படும். இரவு முழுதும் அழுதது போல் அல்லது அதிகமாக மது அருந்தியது போல் தோற்றமளிக்கும் இந்த வீக்கம் மற்றும் சிவப்பு நிறத்தை குறைக்க சில எளிய வழிகள் உண்டு. அதனை இப்போது பார்க்கலாம்.

1. வெள்ளரிக்காய் மற்றும் உருளை கிழங்கு:
 . வெள்ளரிக்காய் மற்றும் உருளை கிழக்கை சிறிதாக அரிந்து, அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.
 . தண்ணீரை கொதிக்க வைத்து சிறிது துளசியை அதில் போட்டு சிறிது நேரம் கழித்து வடிகட்டி அந்த நீரை எடுத்துக் கொள்ளவும்.
 . அந்த துளசி நீரில், அரைத்து வைத்த வெள்ளரி - உருளை கிழங்கு  விழுதை சேர்க்கவும்.
 . இவற்றை நன்றாக கலந்து ஐஸ் ட்ரேயில் ஊற்றி ப்ரீசரில் வைக்கவும்.
 . ஐஸ் கட்டியான பின்பு அதை எடுத்து ஒரு துணியில் சுற்றி  வீக்கமாக இருக்கும் கண்களில் வைக்கவும்.
 . 10 நிமிடம் கழித்து அதனை எடுத்து விட்டு கண்களை கழுவவும்.

2. குளிர்ந்த ஸ்பூன்:
 . குழியாக இருக்கும் ஸ்பூனை சில நிமிடங்கள் ப்ரிட்ஜில் வைக்கவும்.
 . சில நிமிடம் கழித்து அந்த ஸ்பூனை எடுத்து கண்களில் வீக்கம் இருக்கும் இடத்தில்  வைக்கவும். 
 . இதனால் வீக்கம் விரைவில் குறையும்.

கண்களை அழகாக மற்றும் பொலிவாக வைத்துக்  கொள்ள இந்த குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும். முயற்சித்து பளிச் கண்களை பெற்றிடுவீர்!