கழுத்து பகுதியில் உண்டாகும் சுருக்கங்கள்

கழுத்து பகுதியில் சுருக்கங்கள் ஏன் உண்டாகிறது மற்றும் அவற்றைப் போக்குவதற்கான வழிகள் என்ன?

கழுத்து பகுதியில் உண்டாகும் சுருக்கங்கள்

வயது முதிர்வதற்கான தவிர்க்க முடியாத அறிகுறிகளில் ஒன்று சுருக்கங்கள். குறிப்பாக அதிகம் வெளியில் வெளிப்படும் பகுதிகளான முகம், கழுத்து, கைகள் போன்ற இடங்களில் சுருக்கங்கள் தோன்றுகிறது. மேலே கூறிய பகுதிகளில்  தோல்பகுதி மிகவும் மென்மையாக இருப்பதால் அவை தீங்கு உண்டாக்கும் புறஊதா கதிர்களால் எளிதில் தாக்கப்பட்டு இந்த நிலை உண்டாகிறது. இதன் காரணமாக இந்த பகுதிகள் எளிதில் வயது முதிர்ச்சிக்கான அறிகுறிகளை விரைவில் வெளிப்படுத்துகிறது. மாசு, சூரியஒளி , புகை போன்றவை சரும முதிர்ச்சிக்கான அபாயங்களை அதிகம் ஊக்குவிக்கும் காரணிகளாகும். பொதுவாக வயது முதிர்விற்கான அறிகுறிகளை போக்க முயற்சிக்கும்போது முகத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்து பகுதிக்கு கொடுப்பதில் நாம் தவறிவிடுகிறோம். உண்மையில் வயது முதிர்வை அதிகம் வெளிப்படுத்தும் பகுதியாக இந்த கழுத்துப் பகுதி உள்ளது என்பதை நாம் உணர்ந்து இனி அதன்மேல் தனி கவனம் செலுத்துவது அவசியம்.

கழுத்து சுருக்கத்திற்கு பின் இருக்கும் அறிவியல்:

சுருக்கங்கள், மெல்லிய கோடுகள் போன்றவை உடலின் எந்த பகுதியிலும் ஏற்படலாம். சில சுருக்கங்கள் வெளிப்படையாக தோற்றமளிக்கும் மற்றும் சில கண்களுக்கு தென்படாமல் இருக்கும். பொதுவாக கடுமையான சுருக்கங்கள் தென்படும் இடங்களாக முகம் மற்றும் கழுத்துப் பகுதி உள்ளது. குறிப்பாக கண்ணைச் சுற்றி இருக்கும் இடங்கள், உதடு, கன்னங்கள் மற்றும் கழுத்து  பகுதிகளில் அதிக சுருக்கங்கள் தோன்றலாம். வயது அதிகரிக்கும்போது நமது சருமம் மிகவும் பலவீனமாகி, அதன் எலாஸ்டிக் தன்மையை இழப்பதால் சுருக்கங்கள் உண்டாகிறது. மேலும் இயற்கை எண்ணெய்யின்  உற்பத்தி உடலில் குறைவதால் சருமம் மிகவும் வறண்டு  தொங்கத் தொடங்குகிறது.

கழுத்து சுருக்கத்தை ஊக்குவிக்கும் காரணிகள்: 

இயற்கையாக  வயது முதிர்ச்சியின் காரணமாக கழுத்து சுருக்கங்கள் ஏற்படுவதை நாம் மேலே பார்த்தோம். ஆனால் இது தவிர இதர காரணிகள் கழுத்து சுருக்கத்தை ஆழமாக உருவாக்குகின்றன. கழுத்து பகுதியை சுற்றி இருக்கும் சதைப்பகுதி  மிகவும் மென்மையாக இருப்பதால் சூரிய ஒளியால் உண்டாகும் சேதங்கள் மற்றும் பேரழிவை உண்டாக்கும் சுற்றுப்புற காரணிகள் ஆகியவை இந்த பகுதியில் அதிக பாதிப்பை உண்டாக்குகின்றன.

நமது வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் நமது சருமத்தில் பாதிப்பை உண்டாக்குகின்றன. குறிப்பாக புகை பிடிக்கும் பழக்கம் வயது முதிர்ச்சியைத்  தூண்டி சருமத்தில் எதிர்மறை தாக்கங்களை ஊக்குவிக்கிறது. இதனால் சுருக்கங்கள் உண்டாகின்றன மற்றும் ஏற்கனவே இருக்கும் சுருக்கங்கள் ஆழமாகின்றன. புகை பிடிப்பதால் சருமம் தினமும் நீர்சத்து  குறைபாட்டிற்கு ஆளாகிறது , இதனால் சருமம் வறண்டு , சுருக்கங்கள் எளிதில் உண்டாகக் காரணமாகிறது.

இந்த கெட்டபழக்கங்கள் , ஆக்சிஜன் மற்றும் இதர ஊட்டச்சத்துகளைச்  சருமத்திற்கு அனுப்பும் இரத்த நாளங்களை சுருக்குகிறது. புகைபிடிக்கும் பழக்கம் சருமத்தின் வைட்டமின் ஏ அளவை பாதிக்கிறது, இதன் காரணமாக சருமத்தில் இறந்த அணுக்கள் வெளியேறுவதும்  புதிய அணுக்கள் உற்பத்தியும்  தடுக்கப்படுகிறது. இது சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை நேரடியாக பாதிக்கிறது. இதன் காரணமாக கொலஜன் உற்பத்தி குறைந்து சரும நிலை பாதிக்கிறது. இதன் காரணமாக சுருக்கம் தோன்றுகிறது.

கழுத்து சுருக்கங்களை போக்கி சிகிச்சை அளிக்க எண்ணற்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. CO2 லேசர் முறை சிகிச்சையும்  அவற்றுள் ஒன்று. இந்த சிகிச்சை மூலம் கழுத்து சுருக்கங்கள் முற்றிலும் மறைந்து, தொங்கும் சதையும் இறுக்கமாகிறது. இதன் காரணமாக வயது  முதிர்விற்கான அறிகுறிகள் மறைகின்றன.

கழுத்து சுருக்கங்களைப்  போக்குவதற்கான சில குறிப்புகள்:

1. உங்கள் முகத்தைக் கழுவும்போது கழுத்தையும் சுத்தம் செய்ய மறக்க வேண்டாம். இதனால் உங்கள் கழுத்து பகுதியில் இருக்கும் அழுக்கு, நச்சு போன்றவை வெளியேறலாம்.

2. சோப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள். இது உங்கள் சருமத்தின் pH சமநிலையை மாற்றுகிறது . மூலிகை க்ளென்சர் அல்லது மூலிகை சோப் பயன்படுத்தலாம்.

3. வீட்டை விட்டுவெளியில் செல்லும்போது சூரியஒளியில் இருந்து உங்கள் கழுத்தைப் பாதுகாக்க சன்ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள்

4. வாரத்திற்கு ஒரு முறை உங்கள் கழுத்து பகுதியை  எக்ஸ்போலியேட் செய்து கொள்ளுங்கள். இதனால் இறந்த அணுக்கள் அகற்றப்பட்டு சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். 

5. சருமம் நீர்ச்சத்துடன் இருப்பதால்  சுருக்கங்கள் குறைவாகக் காணப்படும். மற்றும் கோடுகள் உண்டாவது தடுக்கப்படும்.

6. போட்டுலினம் டாக்சின்(Botulinum toxin )  ஊசி மற்றும் எஸ்தடிக் அறுவை சிகிச்சை போன்றவற்றைப் பயன்படுத்தி கழுத்து சுருக்கங்களைக் குறைக்கலாம்.

7. வைட்டமின் சி மற்றும் ரெட்டினால் அடிப்படைக்  கொண்ட க்ரீம்  அல்லது  சீரம் பயன்படுத்தலாம். இவை  ஆன்டிஆக்சிடென்ட்களாக இருந்து , புறஊதா கதிர்களின்  தக்கத்தைக் குறைக்கின்றன, இதனால் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கிறது.