நாட்பட்ட வலி என்றால் என்ன ?

திடீர் வலி என்பது காயங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதை நரம்பு மண்டலம் உங்களுக்கு  உணர்த்தும் அறிகுறியாகும்.

நாட்பட்ட வலி என்றால் என்ன ?

எல்லோருக்கும் உடலில் வலி ஏற்படுவது சகஜம். ஒரு காயம் ஏற்படும்போது காயம் ஏற்பட்ட இடத்தில் இருந்து வலியின் சிக்னல்கள் முதுகு தண்டு மற்றும் மூளையை நோக்கி பயணம் செய்கிறது.

நாட்பட்ட அல்லது நீடித்த வலி :
பொதுவாக காயங்கள் குறைய குறைய வலி குறையும். இது சாதாரணம். நாட்பட்ட வலி என்பது காயங்கள் குறைந்தாலும் வலி நீடிப்பது. உடலில் இருந்து வலிக்கான சிக்னல்கள் தொடர்ந்து மூளையை நோக்கி சென்று கொன்டே இருக்கும். இந்த நீடித்த வலி சில வாரங்கள் முதல் வருடங்கள் வரை இருக்கலாம். இந்த நாட்பட்ட வலி உடலின் இயக்கத்தையும் நெகிழ்வு தன்மையையும் பாதிக்கலாம். உங்கள் தினசரி வேலைகளை  செய்வதும் ஒரு சவாலான செயலாகவே இருக்கும்.

12 வாரங்கள் தொடர்ந்து இருக்கும் வலியை குறிப்பாக நாட்பட்ட வலி என்று கூறுகிறோம். இந்த வலி கூர்மையாகவும், பாதிக்கப்பட்ட இடத்தில்  ஒரு வித எரிச்சலையும் உண்டாக்கலாம். எந்த ஒரு காரணமும் இல்லாமல் வலி வருவதும் போவதுமாக இருக்கலாம். உடலின் எந்த பாகத்திலும் நாட்பட்ட வலி ஏற்படலாம். வலியின்  உணர்வு ஒவ்வொரு இடத்தையும் பொறுத்து வேறுபடும்.
நாட்பட்ட நோயின் சில வகைகள் , தலைவலி, அறுவைசிகிச்சைக்கு பிறகு ஏற்படும் வலி, கீழ் முதுகு வலி, புற்று நோய் வலி,  அதிர்ச்சிக்கு பின்  ஏற்படும் வலி, நரம்பு வலி, உளவியல் வலி போன்றவையாகும்.
1.5 பில்லியன் மக்கள் இந்த நாட்பட்ட வலியால் உலகம் முழுதும் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் செயலிழப்பிற்கு இது ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

நாட்பட்ட வலியின் காரணம்:
தசை பிடிப்பு அல்லது முதுகு பிடிப்பு தான் பெரும்பாலும் இதன் காரணங்கள் . நரம்புகள் சேதமடையும்போது  நாட்பட்ட வலி அதிகரிக்கிறது. நரம்புகள் பாதிக்கப்பட்டவுடன் வலி இன்னும் ஆழமாகிறது மற்றும் நீடித்து இருக்கிறது. இந்த நிலையில் காயத்தை மட்டும் ஆற்றுவது வலியை குறைக்காது. காயங்கள் ஏற்படாமலும் சிலருக்கு இந்த நாட்பட்ட வலி உண்டாகும். இதற்கு ஆரோக்கியமற்ற உடல் நிலை காரணமாயிருக்கலாம். அதன் சில வகைகள்,
* நாட்பட்ட சோர்வு - வலியுடன் கூடிய சோர்வு 
* இடமகல் கருப்பை அகப்படலம் (endometriosis )  - கருப்பையின் படலம் கருப்பையையிட்டு வெளியில் வளர்வதால் ஏற்படும் வலி.
* பைப்ரோமியால்கியா (fibromyalgia) - எலும்புகள் மற்றும் தசைகளில் ஏற்படும் வலி.
* குடல் அழற்சி நோய் (inflammatory bowel disease) - செரிமான பாதையில் ஏற்படும் வலி.
* வோல்வோடைனியா (vulvodynia) - பெண்களின் கருவாயில் ஏற்படும் வலி.  இதற்கு குறிப்பிட்டு சொல்லும் காரணங்கள் கிடையாது.

யாரை அதிகம் தாக்கும்?
எல்லா வயதினரும் இந்த வலியால் தாக்கப்படலாம். குறிப்பாக வயதானவர்களை அதிகம் பாதிக்கும். வயதை தவிர வேறு சில காரணங்களும் உண்டு. அவை, காயம் , அறுவை சிகிச்சை , உடல் பருமன் போன்றவையாகும்.

சிகிச்சை முறை: 
வலியை குறைத்து உடல் இயக்கத்தை அதிகரிப்பதுதான் இதற்கான சிகிச்சையின் முக்கிய குறிக்கோள். வலியின் தன்மை மற்றும் ஆழத்தை பொறுத்து சிகிச்சை வேறுபடும். ஒவ்வொருவரின் வலியும் ஒவ்வொரு விதம். ஆகையால் வலி மேலாண்மை திட்டம் ஒன்றை ஏற்படுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக மருத்துவர்கள் கையாள்கின்றனர். ஒவ்வொருவரின் உடல் நலத்திற்கும், அறிகுறிக்கும் ஏற்ற ஒரு திட்டத்தை செயல்படுத்துகின்றனர். மருத்துவ சிகிச்சைகள், வாழ்க்கைமுறை மாற்றங்கள் , ஆகியவை இந்த நோய்க்கான சிகிச்சை முறைகள் ஆகும்.

மருத்துவ முறைகள்:
மருந்து மாத்திரைகள் மட்டும் இல்லாமல், நாட்பட்ட வலியை குறைக்க வேறு சில வழிகளும் பின்பற்ற படுகின்றன.
அவை,
* லேசான எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து வலியை  குறைப்பது.
* நரம்பு தடுப்பு இன்ஜெக்ஷன் மூலம், மூளைக்கு சிக்னல்கள் செல்லாமல் செய்வது.
* அக்குபஞ்சர் முறையில், சிறு ஊசி கொண்டு உடலில் குத்துவதன் மூலம் வலியை  குறைப்பது.
* சரியாக ஆற்றப்படாத காயங்களை அறுவை சிகிச்சை கொண்டு சரி செய்வது 

வாழ்வியல் தீர்வுகள்:
இந்த நாட்பட்ட வலியை குறைக்க நமது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம். அவை, யோகா, இசை மற்றும் ஓவிய சிகிச்சை , செல்லப்பிராணி சிகிச்சை , பிசியோதெரபி , மசாஜ், தியானம் போன்றவையாகும்.