தமிழ் புத்தாண்டு

புத்தாண்டின் காலையில் எழுந்தவுடன் இவைகளை பார்த்தால் அந்த ஆண்டு முழுவதும் நேர்மறை நிகழ்வுகளே ஏற்படும் மற்றும்   நல்லதே நடக்கும் என்பது ஐதீகம்.

தமிழ் புத்தாண்டு
created to wikipedia

தமிழ் புத்தாண்டு

தமிழர்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுகின்றனர், ஏனென்றால்  தமிழர்கள் பின்பற்றுவது சூரிய நாட்காட்டி என்பதால் சூரியன் மற்றும் பன்னிரண்டு ராசிகளையும் கொண்டே மாதங்களை கணித்தனர் நம் முன்னோர்கள்.மேழம் (சித்திரை) மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக ஏன் கொண்டாடுகின்றோம் என்பதையும், வருடப்பிறப்பை எவ்வாறு கொண்டாடினால் அந்த ஆண்டு முழுவதும் நேர்மறை நிகழ்வுகள் ஏற்படும் என்பதையும் இக்கட்டுரையில் காணலாம்.  

தமிழ் சூரிய மாதங்களின் பெயர்கள்:

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியை குறிக்கும். ஒவ்வொரு ராசி மாதங்களிலும் அதே ராசியில் எத்தனை நாட்கள் சூரியன் காலையில் உதிக்கும் என்பதை வைத்தே மாதத்தின் நாட்களையும், அடுத்தடுத்து வரும் மாதங்களையும் கணித்தனர் என்று கூறப்படுகிறது.சூரியன் எந்த ராசியில் உதிக்குமோ அந்த ராசியின் பெயரையே மாதங்களுக்கு வைத்தார்கள்.  மேழம் மாதம் முழுவதும் மேஷ ராசியில் தான்  சூரியன் காலையில் உதிக்கும். இந்த ராசி முதலில் வருவதால் இந்த மாதமே ஆண்டின் முதல் மாதம் என்கிறார்கள்.அதனால் தான் மேழம் மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகின்றோம்.

மேழம் (மேஷம்) -30 நாட்கள்,

விடை (ரிஷபம்) -31 நாட்கள், 

ஆடவை (மிதுனம்) -31 நாட்கள்,

 கற்கடகம்(கடகம்)-31 நாட்கள், 

மடங்கல்( சிம்மம்) -31 நாட்கள், 

மடந்தை (கன்னி) -30 நாட்கள், 

துலை ( துலாம்)-29 நாட்கள்,

நளி (விருச்சிகம்) -29 நாட்கள்,

சிலை (தனுசு) -29 நாட்கள்,

சுறவம் (மகரம்) -29 நாட்கள்,

குடம் (கும்பம்) -29 நாட்கள், 

மீன் (மீனம்) -30 நாட்கள். 

இந்த சூரிய மாதப் பெயர்களையே தமிழர்கள் பண்டைய காலத்தில்  பயன்படுத்தினார்கள் என்று சங்க கால நூல்கள் குறிப்பிட்டுள்ளது .  

தமிழ் சந்திர மாதங்களின் பெயர்கள்:

சூரியன் காலையில் உதிக்கும் போது எந்த ராசி மாதம் உள்ளதோ அந்த மாதங்களில் வரும் பௌர்ணமி எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரை கொண்டு சந்திர மாதங்களின் பெயர்களான சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி வைக்கப்பட்டது. இன்று நாம் பயன்படுத்துவது சந்திர மாதப் பெயர்கள் ஆகும். 

புத்தாண்டு பிறப்பதற்கு முதல் நாள் செய்ய வேண்டியவை:

புத்தாண்டு பிறப்பதற்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து கடவுளுக்கு முன் ஒரு வாழை இலையில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூக்கள், முக்கனிகளான மா, பலா, வாழை  வைக்க வேண்டும். அதேபோல் ஒரு கப் அரிசி, ஒரு கப் பருப்பு, ஒரு கப் சர்க்கரை அல்லது வெல்லம், ஒரு கப் கல் உப்பு, தங்கம், வெள்ளி நகைகள், சில்லறைக் காசுகள், கண்ணாடி  ஆகியவற்றையும் ஒரு தாம்பூலத்தில் வைக்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்தவுடன் இவைகளை பார்த்தால் அந்த ஆண்டு முழுவதும் நேர்மறை நிகழ்வுகளே ஏற்படும் மற்றும்   நல்லதே நடக்கும் என்பது ஐதீகம்.

புத்தாண்டின் போது முக்கியமாக வைக்க வேண்டிய பிரசாதம்: 

வருடப்பிறப்பிற்கு கடவுள் முன் விளக்கேற்றி, கடவுளுக்கு பிரசாதம் படைக்கும் போது முக்கியமான பிரசாதமாக மாங்காய் பச்சடியை  வைத்து பூஜை செய்ய வேண்டும்,  ஏனென்றால் சித்திரை மாதம் என்பது  கோடை காலம் ஆதலால் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களை தடுக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் , ஒருவர் வாழ்க்கையில் ஏற்படும் இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்த இனிப்பு (வெல்லம்), புளிப்பு (மாங்காய்), கசப்பு (வேப்பம்பூ), கார்ப்பு( மிளகாய்), உவர்ப்பு( உப்பு), துவர்ப்பு (நெல்லிக்காய்) ஆகிய அறுசுவைகள் உள்ள மாங்காய் பச்சடியை வருடப் பிறப்பிற்கு செய்ய வேண்டும் என்னும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள் நம் முன்னோர்கள். 

வருடப்பிறப்பை குடும்பத்தோடு ஒன்றுகூடி கொண்டாடும் போது அனைவருக்கும்  மகிழ்ச்சியை தருவதோடு, அந்த ஆண்டு முழுவதும் நேர்மறை நிகழ்வுகளையே ஏற்படுத்தும் என்பதற்காகவும் கொண்டாடுகின்றோம். புத்தாண்டின் போது எவர் ஒருவர் அன்னதானம் செய்கிறாரோ அவர்களுக்கு கடவுளின் அருள் பூரணமாக கிடைக்கும். அனைவரும் தங்களால் இயன்ற உதவியை மற்றவர்களுக்கு செய்து நன்மையை பெற்றிடுங்கள். உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்க்கும் நம் குரல் வாயிலாக தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.