பிரஹலாதனும் நரசிம்ம அவதாரமும் 

நரசிம்ம அவதாரத்தின் நோக்கம் என்பது அரக்கன் ஹிரண்யகசிபுவைக் கொல்வதாகும்.

பிரஹலாதனும் நரசிம்ம அவதாரமும் 

தேவர்கள் மற்றும் அசுரர்கள் பற்றிய கதைகளை நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். அசுரர்கள் மனித குலத்தையும், தேவர்களையும் அவ்வப்போது துன்புறுத்துவதும், பாதிக்கப்பட்டவர்களை காக்கும் நோக்கத்தோடு இறைவன் மற்றும் இறைவி ஒரு அவதாரம் எடுத்து காப்பதும் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அதுபோல் ஒரு அரக்கன் தன் சொந்த மகனை அழிக்க நினைத்து அவனே அழிந்த ஒரு கதையை நாம் இன்று பார்க்கவிருக்கிறோம். 

பகவான் விஷ்ணுவின் தீவிர பக்தனாக இருந்த காரணத்தினால், தன் மகன் பிரஹலாதனை, கொல்லத் துணிந்தான் அரசன் ஹிரண்யகசிபு. ஹிரண்யகசிபு பெற்ற ஒரு மிகப்பெரிய வரத்தைத் தாண்டி அவனை நரசிம்ம அவதாரம் எடுத்து விஷ்ணு பகவான் கொல்லும் அளவிற்கு பிரஹலாதனின் பக்தி சிறப்பாக விளங்கியது. அவனை இறைவன் எவ்வாறு அழித்தார் என்பது குறித்து மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

ஹிரண்யகசிபு :
சத்யா யுகத்தில் கஷ்யப்ப முனிவரும் அவர் மனைவி திதிக்கும் இரண்டு மகன்கள் பிறந்தனர். அவர்கள் பெயர் ஹிரண்யாக்ஷன் மற்றும் ஹிரண்யகசிபு. ஹிரண்யாக்ஷன் தேவர்களையும் மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். ஆகவே அவன் கொடுமையில் இருந்து மீண்டு வர மனிதர்களும் தேவர்களும் பகவான் விஷ்ணுவிடம் சென்று தங்களைக் காக்க வேண்டி முறையிட்டனர். பகவான் விஷ்ணுவும் காக்கும் கடவுளாக இருப்பதால், பன்றி அவதாரம் எடுத்து அவர்களை காத்தார். இதுவே வராஹ அவதாரம் என்று அறியப்படுகிறது.

ஹிரண்யாக்ஷன் இறப்பால், தேவர்கள் மற்றும் மனிதர்கள் மேல் தீராக் கோபம் கொண்ட ஹிரண்யகசிபு, அசுரர்களின் படையுடன் தேவர்களைத் தாக்க வந்தான். தேவர்கள் ஹிரண்யகசிபு மற்றும் அவன் படைகளுடன் போராடினர். ஒவ்வொரு முறையும் தேவர்கள் வெல்வதற்கு பகவான் விஷ்ணு உதவுவதை ஹிரண்யகசிபு அறிந்திருந்தான். எனவே, அவன் பிரம்ம தேவரை நோக்கி கடுமையான தவம் இருந்து இறையருளைப் பெற விரும்பினான் . இதனால் தன்னை மறந்து தன் ராஜ்ஜியத்தை மறந்து கடுமையான தவம் செய்யத் தொடங்கினான். 

இந்திரனின் செயல்:

இதற்கிடையில், ஹிரண்யகசிபு தன் மக்களை வழிநடத்தவில்லை என்பதை அறிந்து கொண்டார் இந்திர பகவான். இந்த தருணத்தைப் பயன்படுத்தி, அசுரர்களை முற்றிலும் அழிக்க எண்ணினார் அவர். இதனால் தேவர்களுக்கு ஒருபோதும் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது என்று நினைத்து அசுரர்களை தாக்கினர் இந்திர பகவான். அசுரர்கள் போரில் தோல்வியைத் தழுவினர். வெற்றியின் மமதையால், ஹிரண்யகசிபுவின் மனைவி கயாதுவைத் தூக்கிச் செல்ல துணிந்தார் இந்திர பகவான். ஆனால் பக்திமானாகிய அவன் மனைவியை நாரத முனிவர் காப்பாற்றினார். அவளுடைய கற்பைக் காக்கவும், வயிற்றில் இருக்கும் அவள் குழந்தையை பாதுகாக்கவும் தன்னுடைய ஆசிரமத்திற்கு அவளை அழைத்துச் சென்றார் நாரதர்.

கயாது ஒரு அதிபுத்திசாலியாக இருப்பதை அறிந்தார் நாரத முனிவர். எதையும் உடனுடக்குடன் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் அவளுக்கு இருந்தது. மாலை வேளைகளில் நாரத முனிவர் ஓய்வெடுக்கும் சமயத்தில், கயாதுவிற்கு பகவான் விஷ்ணுவின் கதைகளைக் கூறினார். இவற்றைக் கேள்விப்பட்ட கயாது , விரைவில் பகவான் விஷ்ணு மீது ஒரு இணைப்பை உணர்ந்தாள். அவள் கருவில் இருக்கும் அந்தக் குழந்தையும் இந்த கதைகளைக் கேட்டபடி இருந்தது. அதனால் அந்தக் குழந்தையும் பகவான் விஷ்ணு மீது தீராத பக்தி கொண்டது.

பிரம்மரின் வரம் :

இதற்கிடையில் சொர்க்கத்தில் திடீரென்று காற்று அனலாக வீசத் தொடங்கியது. தேவர்கள் மூச்சு விடவும் சிரமப்பட்டனர். என்ன நடக்கிறது என்று அனைவரும் வியந்தனர். இதற்கான காரணம் என்னவென்று தேடித் பார்க்கையில் , ஹிரண்யகசிபுவின் தவம் அந்த அளவிற்கு சக்தி மிகுந்ததாக மாறி, சொர்க்கத்தின் காற்றை சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அதனால் ஹிரண்யகசிபுவை சந்திக்க பிரம்ம தேவர் சம்மதித்து , அவனைக் காண பூலோகம் புறப்பட்டார்.

பிரம்ம தேவர் பூலோகத்தில் ஹிரண்யகசிபுவை பார்த்து அதிர்ந்துவிட்டார். அவனுடைய ஆழ்ந்த தவத்தின் காரணமாக அவன் மேல் கொடிகள் மற்றும் செடிகள் படர்ந்து இருந்தன. ஹிரண்யகசிபுவின் தவத்தை மெச்சிய பிரம்ம தேவர் அவருடைய கமண்டலத்தில் இருந்து சிறிது நீரை எடுத்து அவன் மீது தெளித்தார். அசுர அரசன் ஹிரண்யகசிபு தன்னுடைய சுயநினைவிற்கு வந்து பிரம்ம தேவர் அவன் கண்முன் நிற்பதை உணர்ந்தான். பிரம்ம தேவர் அவனிடம் விரும்பும் வரத்தை கேட்கச் சொன்னார். உடனடியாக ஹிரண்யகசிபு தனக்கு சாகாவரம் வேண்டும் என்று கேட்டான். ஆனால் அது இயற்கையுடன் தொடர்பு கொண்ட ஒரு வரம் என்பதால் அதனை அளிக்க பிரம்ம தேவர் மறுத்து விட்டார். அந்த புத்திசாலி அரக்கன் பின்வருமாறு ஒரு வரம் கேட்டான் - "இறைவனே, ஒரு மனிதன் அல்லது கடவுள் அல்லது ஒரு விலங்கு அல்லது உன்னால் படைக்கபட்ட எந்த ஒரு ஜீவனாலும் எனக்கு அழிவு ஏற்படக் கூடாது, பகல் அல்லது இரவில் நான் கொல்லப்படக் கூடாது, சொர்க்கத்திலோ அல்லது பூமியிலோ எனது அழிவு நிகழக் கூடாது , வீட்டின் உட்புறம் அல்லது வீட்டின் வெளிப்புறம் ஆகிய எந்த ஒரு இடத்திலும் நான் அழிக்கப்படக் கூடாது, மற்றும் எந்த ஒரு ஆயுதத்தாலும் நான் மரணிக்கக் கூடாது" என்ற வரத்தைக் கேட்டான் ஹிரண்யகசிபு.

இந்த வரத்தால் பல பிரச்சனைகள் வரக்கூடும் என்பதை அறிந்து பிரம்ம தேவர் தயக்கத்துடன் இந்த வரத்தை அளித்துவிட்டார். இந்த வரத்தைப் பெற்றதும், ஒரு நொடி கூட தாமதிக்காமல், உடனடியாக சொர்க்கம் மற்றும் பூமி ஆகிய இரண்டையும் கைப்பற்றினான் ஹிரண்யன். தன்னுடைய மனைவியைக் கண்டுகொண்டான் ஹிரண்யன். ஆனால் அவனுடைய வன்முறையை கைவிடச் சொல்லி அவள் கூறிய அறிவுரையைக் கேட்க மறுத்தான். தேவர்கள், பகவான் விஷ்ணுவிடம் தஞ்சம் அடைந்தனர். பகவான் விஷ்ணு, தேவர்களிடம் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்கச் சொன்னார். ஹிரண்யகசிபுவின் மகன் பிரஹலாதன் தன்னுடைய பக்தன் என்றும் கூறினார். ஹிரண்யகசிபு தன்னுடைய பக்தனை கொள்ள வரும்போது அவனை வதம் செய்வதாகவும் கூறினார்.

அனைத்து உலகங்களையும் கைப்பற்றிய பின்னர், ஹிரண்யகசிபு ,மூன்று உலகிலும் தன்னை விட பெரியவர் யாரும் இல்லை, விஷ்ணு கூட தன்னை விய பெரியவர் இல்லை என்றும், தன்னை மட்டுமே அனைவரும் வழிபட வேண்டும் என்றும் வலியுறுத்தினான். 

பிரஹலாதனின் பிறப்பு :
அந்த நேரம் கயாது ஒரு ஆண்மகனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு பிரஹலாதன் என்று பெயரிடப்பட்டது. பிரஹலாதன் வளர்ந்து பெரியவனாகிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், ஹிரண்யகசிபு இன்னும் இன்னும் அதிக சக்திசாளியாகி, மக்களுக்கும் தேவர்களுக்கும் பல இன்னல்களைக் கொடுத்தவாறு இருந்தான். ஆனால், பிரஹலாதன் தன் தந்தையிடமிருந்து முற்றிலும் வேறுபட்டு இருந்தான். அவன் தந்தை போல், மற்ற உயிரினங்களை துன்பப்படுத்தும் குணம் அவனுக்கு இல்லை. பகவான் விஷ்ணு  மீத அதீத பக்தியுடன் விளங்கினான். அவரை வழிபட அதிகம் விரும்பினான். பிரஹலாதன் மற்றவர்களிடம் மென்மையாகவும் அதிக அன்பு செலுத்துபவனாகவும் இருந்தான். ஹிரன்யகசிபுவைப் பார்த்து மக்கள் அனைவரும் அஞ்சும் அதே வேளையில் பிரஹலாதனை அனைவரும் மிகவும் விரும்பினார்கள்.

ஒரு முறை ஹிரண்யகசிபு தன் மகன் பிரஹலாதனை தன்னுடைய மடியில் வந்து அமருமாறு கூறினான். ஹிரண்யகசிபு தன் மகனின் தலைமுடியை வாஞ்சையுடன் கோதிவிட்டு, "நீ ஒரு அருமையான புதல்வன் , உன்னுடைய பள்ளி வாழ்க்கை எவ்வாறு சென்று கொண்டிருக்கிறது? என்று வினவினான்.

தந்தையே, என்று அன்புடன் அழைத்த பிரஹலாதன் , கருமை நிறக் கடவுளான பகவான் விஷ்ணு, மூவுலகையும் ஆட்சி செய்யும் ஒரே கடவுள் ஆவார். அவரிடம் நாம் பக்தி கொண்டிருந்தால், அவர் எப்போதும் நம்முடன் இருப்பார் " என்று கூறினான்.

ஹிரண்யகசிபுவின் கோபம்:

மக்கள் அனைவரும் தன்னை மட்டுமே வழிபட வேண்டும் என்று விரும்பிய ஹிரண்யகசிபு தன் மகனின் பதிலால் மிகவும் ஏமாற்றம் அடைந்தான். தன்னுடைய சொந்த மகன் விஷ்ணுவின் நாமத்தை ஜெபிப்பதை நினைத்து வருந்தினான். அவனுடைய மனதை மாற்றுவதற்காக சுக்ராச்சாரியாரின் மகன் சாகு மற்றும் அமர்காவின் ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தான். பிரஹலாதனின் திடமான விஷ்ணு பக்தியை அவர்களால் கூட கரைக்க முடியாமல் தோல்வி கண்டனர்.

தன் மகனின் மனதை மாற்றுவதற்காக ஹிரண்யகசிபு மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இறுதியில் தன் மகன் மீது கடுமையான கோபம் கொண்டு அவனைக் கொல்ல முடிவெடுத்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் ஹிரண்யகசிபு ப்ரஹலாதனைக் கொல்ல முயற்சிக்கும்போதும் பகவான் விஷ்ணுவின் மந்திரக் கைகள் அவனைக் காப்பாற்றியது.

ஹிரண்யனின் சதிசெயல்கள்:

அரசனின் வீரர்கள், பிரஹலாதனுக்கு விஷம் கொடுத்தனர், தண்ணீரில் மூழ்கடித்தனர், மலையில் இருந்து கீழே தள்ளினர். ஆனால் ஒவ்வொரு முறையும் பகவான் விஷ்ணு ப்ரஹலாதனைக் காப்பாற்றினார்.

"இந்த சிறுவனை இழுத்துச் சென்று , மல உச்சியில் இருந்து கீழே தள்ளி விடுங்கள்" என்று ஹிரண்யகசிபு கூறியதைக் கேட்ட அவனுடைய வீரர்கள், அவனை மலை உச்சிக்கு கூட்டிச் சென்றனர். பிரஹலாதனின் உடலை கயிற்றால் கட்டி மலையில் இருந்து கீழே தள்ளி விட்டனர். ஆனால் பிரஹலாதன் மலையில் இருந்து பாதுகாப்பாக உருண்டு வந்தான். அவன் விழும்போது பகவான் விஷ்ணுவின் நாமத்தை ஜெபித்ததால், எந்த ஒரு காயமும் இல்லாமல் அவன் உயிர் பிழைத்தது.


இந்த அசுர அரசன், ஒரு மதம் பிடித்த யானையை  அனுப்பி பிரஹலாதனைக் கொல்லத் திட்டமிட்டான். ஆனால் அந்த யானை பிரஹலாதனை தனது தும்பிக்கையால் தூக்கி அதன் முதுகில் ஏற்றி அமர வைத்தது. ஒவ்வொரு முறை தோற்கும்போதும், ஹிரணியனுக்கு அவன் மகனைக் கொல்ல வேண்டும் என்ற கோபம் அதிகரித்தது. அதனால் இன்னும் கடுமையான தண்டனைகள் மூலம் அவன் ப்ரஹலாதனைக் கொல்வதற்கு திட்டம் தீட்டினான்.

ஒரு நாள் அரசன் ஒரு நெருப்பு குண்டத்தை உண்டாக்கினான். தனது தங்கை ஹோலிகாவின் மடியில் பிரஹலாதனை அமர வைத்து அந்த நெருப்பில் இறக்கினான். ஹோலிகாவிற்கு நெருப்பு தீண்டாத வரம் உண்டு என்பதால் ஹோலிகா உயிர் பிழைத்து பிரஹலாதன் கொல்லப்படுவான் என்று நினைத்து அவன் அவ்வாறு செய்தான். பிரஹலாதனுக்கு தன்னைச் சுற்றி நடக்கும் எந்த ஒரு சதியும் தெரியாது. எனவே அவன் தந்தை சொன்னபடி செய்தான். நெருப்பால் தீண்டமுடியாத வரம் பெற்ற ஹோலிகா நெருப்பில் இறங்கியவுடன் எரியத் தொடங்கினாள். அவள் செய்த பாவங்கள் நெருப்பாக மாறி அவளை எரித்தன. அவள் முற்றிலும் எரிந்து சாம்பலானவுடன் அந்த சாம்பலின் மத்தியில் ஒரு முடி கூட கருகாத நிலையில் பிரஹலாதன் அமர்ந்திருந்தான். ஆனால் ஹோலிகா அழிந்திருந்தாள்.

நரசிம்ம அவதாரம் 

தன்னுடைய மகன் எந்த ஒரு தீங்கும் நேராமல் காக்கப்பட்டதையும் தன்னுடைய தங்கை உயிர் இழந்ததையும் தாங்கிக் கொள்ள முடியாத ஹிரண்யகசிபு, ஒரு இரும்பு தூணை சூடாக்கி பிரஹலாதனிடம், "இந்த சூடாக இருக்கும் இரும்புத் தூணில் உன்னுடைய கடவுள் விஷ்ணு பகவான் இருக்கிறாரா? " என்று கேட்டான்.

ஒரு நிமிடம் கூட யோசிக்காமல், பிரஹலாதன் ஓடிச் சென்று கொதிக்கும் அந்த தூணை ஆறத் தழுவிக் கொண்டான். மிகுந்த வெப்பத்துடன் இருக்கும் அந்தத் தூண் பிரஹலாதனை எரிக்கவில்லை. கோபமுற்ற ஹிரண்யகசிபு உக்ரமாக அந்தத் தூணை தனது தண்டாயுதத்தால் தாக்கினான் .

அங்கு இருந்தவர்கள் அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்! அவன் ஓங்கி தாக்கியவுடன் அந்தத் தூண் இடியோசையுடன் பிளக்கப்பட்டு, அதில் இருந்து விஷ்ணு பகவான் நரசிம்மர் வடிவத்தில் வெளிவந்தார். அவர் உடலின் ஒரு பகுதி சிங்கத்தைப் போன்றும், மறுபாதி மனிதரைப் போன்றும் இருந்தது. அவர் தலையில் நீளமான முடி படர்ந்திருந்தது, அவர் முகத்தில் பெரிய மீசை இருந்தது, அவருடைய பற்கள் கோரமாக இருந்தன. அவருடைய கை விரல்களில் கோரமான நகங்கள் இருந்தன.

ஹிரன்யகசிபுவிற்கு அவன் இறப்பு குறித்த முதல் வரம் நினைவிற்கு வந்தது. மனிதனும் இல்லாமல் மிருகமும் இல்லாமல் இருக்கும் ஒருவர் தன்னைக் கொல்ல வேண்டும். 

மேலும் அது அந்தி சாயும் பொழுதாக இருந்தது, பகலும் இல்லாமல் இரவும் இல்லாமல் இருந்த நேரம், இறப்பு குறித்த அவனுடைய இரண்டாவது விருப்பம்.
 
ஹிரண்யகசிபு தண்டாயுதத்தால் நரசிம்மரைத் தாக்கினான் , ஆனால் நரசிம்மர் அதனை வேகமாகத் தள்ளிவிட்டார். நரசிம்மர், ஹிரண்யகசிபுவை பிடித்து இழுத்து தனது தொடையில் கிடத்தினார். அந்த அரசவையின் வாசற்படியில் அமர்ந்து அவருடைய நகங்களால் ஹிரண்யகசிபுவின் உடலை கிழித்தார். அந்த இடத்திலேயே அசுர அரசன் ஹிரண்யகசிபுவின் உயிர் பிரிந்தது. அவனுடைய இறப்பு குறித்த மூன்றாவது விருப்பமான, வீட்டிற்கு வெளியிலும் அல்லாமல் வீட்டிற்கு உள்ளேயும் அல்லாமல் வாசற்படியில் அவன் உயிர் பிரிந்தது.

ஹிரண்யகசிபுவைக் கொன்ற பின்னும், நரசிம்மரின் வெறி அடங்காமல் காண்பவரை எல்லாம் கொன்றார் நரசிம்மர்.

இதனைக் கண்ட கடவுள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று இந்த வன்முறையை நிறுத்துமாறு வேண்டினர். சிவபெருமான், வீரபத்ரர் மற்றும் பத்ரகாளி ஆகிய இருவரையும் அனுப்பி நரசிம்மரை நிறுத்தும்படி கூறினார். ஆனால் நரசிம்மர் அவர்கள் மீது பாய்ந்தார். அவர் பகவான் விஷ்ணு என்று அறிந்த வீரபத்ரரும் பத்ரகாளியும் அவரை எதிர்கொள்ளமுடியாமல் சரணடைந்தனர்.

நரசிம்மர் அவர்கள் இருவரையும் கொல்ல முற்படும்போது, சிவபெருமான் ஒரு மிகப்பெரிய ராட்சச பறவையாக, ஆயிரம் கைகள் கொண்ட ,நரமாமிசம் உண்ணும் ஷரபா வடிவத்தில் நரசிம்மர் முன் தோன்றினார். ஷரபா தனது இறக்கையால் நரசிம்மரைக் கீறி, அவரை நினைவிழக்கச் செய்தது. பிறகு அந்த இடத்தில் இருந்து நீண்ட தூரம் நரசிம்மரைத் தூக்கிச் சென்றது.
 
தன் தவறை உணர்ந்த நரசிம்மர், சிவபெருமானிடம் சரணடைந்தார். பிறகு நரசிம்மரின் மண்டை ஓட்டை தனது கழுத்தில் ஏற்கனவே அணிந்திருக்கும் மண்டை ஒட்டு மாலையில் சேர்த்து தனது கழுத்தில் அணிந்து கொண்டார் சிவபெருமான்.  

நரசிம்மரின் சிறப்பம்சங்கள் 
செய்ய இயலாத விஷயத்தின் மீது நம்பிக்கை, துன்புறுத்தல் மீது வெற்றி, தீமை அழிப்பு போன்றவற்றின் ஒரு சின்னமாகப் பார்க்கப்படுவது நரசிம்மர் அவதாரம். வெளிப்புற தீங்கை மட்டும் அழிப்பவராக இல்லாமல், அவர் ஒரு மனிதரின் உள்ளம், பேச்சு மற்றும் மனதில் உள்ள தீங்கையும் அழிப்பவராக இருக்கிறார்.

தென்னிந்தியக் கலைகளான சிற்பம், ஓவியம், போன்றவற்றில் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் ஒரு கருவாக இருப்பது இந்த நரசிம்மர் அவதாரமாகும். மேலும், விஷ்ணுவின் அவதாரங்களில் ராமர், கிருஷ்ணருக்கு பிறகு மிகவும் புகழ்பெற்ற அவதாரம் நரசிம்மர் அவதாரமாகும்.
 
தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் பல்வேறு வடிவங்களில் இந்த நரசிம்மர் வழிபாடு நடைபெற்று வருகிறது. பல கோயில்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் நரசிம்மர் உருவம் சித்தரிக்கப்படிருந்தாலும் அஹோபிலம் என்ற இடத்தில் ஒன்பது வித நரசிம்மருக்காக ஒன்பது கோயில்கள் எழுப்பப்பட்டு நரசிம்மருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.  பல கோயில்களில் நரசிம்மர் உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தாலும்  பொதுவாக அவருடைய உருவங்களை யாரும் வழிபடுவதில்லை.