எளிய முறையில் ஆரோக்கிய உணவு பழக்கம்

சமச்சீரான உணவை உண்ணுவது என்பது சிரமமான வேலை இல்லை. ஒரு சிறு முயற்சியால் சமச்சீர் உணவை நமது பயன்பாட்டில் கொண்டு வரலாம். அந்த முயற்சயை பற்றியது தான் இந்த தொகுப்பு.

எளிய முறையில்  ஆரோக்கிய உணவு பழக்கம்

உணவு திட்டம்:
வாரத்தின் விடுமுறை நாளில், வரும் வாரத்திற்கான உணவு அட்டவணையை தயார் செய்யுங்கள். ஆரோக்கியமான உணவை சமைப்பதற்கு தேவையான மூல பொருட்களை கடைக்கு சென்று வாங்கி வாருங்கள். இதனை செய்வதால் சாப்பாடு எடுக்காமல் அலுவலகம் சென்று ஹோட்டலில் சாப்பாடு வாங்கும் நிலை ஏற்படாது. ஒரு வாரத்திற்கான உங்கள் உணவு அட்டவணை, ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் என்ன சமைப்பது என்ற கேள்விக்கு விடை தரும். இந்த திட்டத்தை பற்றி உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள். அவர்களும் பயன் பெறட்டும்.

காய்கறிகள்:
வைட்டமின்  மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை வாங்கி வையுங்கள். உங்கள் கையில் உள்ள 5 விரல்களை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். 3 விரல்கள் காய்கறிகளுக்கு , இரண்டு விரல்கள் பழங்களுக்கு என்று எண்ணி கொள்ளுங்கள். தினமும் 3 கப் காய்கறிகளும், 2 கப் பழங்களும் உங்கள் உணவில் இருக்க வேண்டும். காலை உணவில் சிறு அளவும், மாலை சிற்றுண்டியில் சிறிதளவும் பழங்களை சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் மொத்த உணவில் ஒரு பாதி காய்கறிகள் மற்றும் பழங்கள், கால் பகுதி புரதம் மற்ற கால் பகுதி கார்போஹைடிரேட் என்று பிரித்துக் கொள்ளுங்கள்.

தண்ணீர்:
சாப்பிட்டு முடித்த பின்னும் பசி எடுக்கும் உணர்வு ஏற்பட்டால், சிறிதளவு குளிர்ச்சியான தண்ணீரை சிறிது சிறிதாக பருகுங்கள். சோடாவோ ஜூஸோ பருகாதீர்கள்.

நள்ளிரவு பசி:
இரவு உணவை சீக்கிரமாக முடித்து விட்டீர்கள். தூங்குவதற்கு நேரம் எடுக்கிறது. நேராக சமையலறை சென்று பிரிட்ஜில் என்ன இருக்கிறதென்று ஆராய்வது தான் வழக்கம். எதாவது இனிப்பு இருக்கிறதா என்று தேடுவோம். நள்ளிரவு பசிக்கு சிறந்த ஒரு தீர்வு உள்ளது. ஆப்பிளுடன் சிறிது பீனட் பட்டர் சேர்த்து சாப்பிடலாம். அல்லது வாழை பழம் சாப்பிடலாம். இதனை சாப்பிடுவதால் உங்கள் நள்ளிரவு பசி அடங்கும். காலையில் வேறு பாதிப்புகளும் ஏற்படாது.

நொறுக்கு தீனிகள் :
டிவி பார்த்துக் கொண்டு நொறுக்கு தீனி உட்கொள்வது உங்கள் வயிற்றுக்கு  மிகவும் ஆபத்தானதாகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை உங்கள் சிற்றுண்டிகளாக சேமித்து வைத்து கொள்ளுங்கள். தேவைப்படும்போது எடுத்து உண்ணலாம். உங்கள் ஆரோக்கியமும் கெடாது.
* தினம் உண்ணும் சாலடுடன் சிறிது பாலசமிக் வினிகர் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். போரடிக்கும் சாலட் புது சுவையோடு இருக்கும்.
* நட்ஸ் கலவையை கொறியுங்கள் . ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் அதன் அளவை பார்த்துக் கொள்ளுங்கள். 
* வெள்ளரிக்காய், கேரட், பேரிக்காய், ஆப்பிள், பப்பாளி போன்ற காய்கறிகள் அல்லது பழங்களை சிறிய துண்டுகளாக்கி கிரீக் யோகர்டுடன் சேர்த்து சுவையுங்கள். மிகவும் அற்புதமாக இருக்கும். வயிறும் நிரம்பும்.
என்ன வாசகர்களே! இதனை படிக்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுகிறதா? உடலே உணவு அட்டவணையை தயாரித்து இந்த வாரம் முதல் உங்கள் வீட்டில் சமச்சீர் உணவை அமலுக்கு கொண்டு வாருங்கள். அனைவரும் ஆரோக்கியமாக  இருக்கலாம்.