புருவங்கள் அடர்த்தியாக வளர சில வழிமுறைகள்

நம் உடலின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பயனை கொண்டது. அதில் இந்த புருவங்கள் கண்களை வியர்வை மற்றும் ஈரப்பதத்தில் இருந்து காக்கின்றது. ஒரு சுவாரஸ்யமான ஆய்வு நடத்தப்பட்டது. அதில், பிரபலங்களின் முகத்தை புருவங்கள் இல்லாமல் வரைந்து , அவர்களை அடையாளம் காண முயன்றபோது பலரும் கடினமாக உணர்ந்தனர். கண்கள் இல்லாத பிரபலங்களின் முகத்தைக்கூட எளிதில் கண்டுபிடித்தனர். இதிலிருந்து, நமது தோற்றத்தில் புருவத்தின் முக்கியத்துவம் புரியும்.

புருவங்கள் அடர்த்தியாக வளர சில வழிமுறைகள்

சிலருக்கு புருவ முடிகள் உதிரும் பிரச்சனை  இருக்கும். இது தைராய்டு பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். மன அழுத்தம் , புரதம் அல்லது வைட்டமின் குறைபாடு  போன்றவற்றாலும் புருவ முடி உதிர்தல் ஏற்படலாம். புருவ முடி உதிர்தலுடன் , தலை முடி உதிர்வும் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. 
இதற்கிடையில் சில இயற்கை தீர்வுகளை முயற்சித்து புருவ முடியை அதிகரிக்கலாம்.

விளக்கெண்ணெய் :
புருவ முடியை அடர்த்தியாக மற்றும் விரைவாக வளர செய்ய பழங்காலம் முதல் நடைமுறையில் இருந்து வருவது விளக்கெண்ணெய். இது வேர்க்கால்களை புத்துணர்ச்சி அடையச் செய்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.
* ஒரு பஞ்சை எடுத்து விளக்கெண்ணெய்யில் நனைத்து, புருவத்தில் தடவவும்.
* விரல்  நுனியை கொண்டு 2-3 நிமிடம் நன்றாக மசாஜ் செய்யவும்.
* 30 நிமிடங்கள் விடவும்.
* பின்பு வெது வெதுப்பான நீரில் கழுவவும்.
தினமும் ஒரு முறை இதனை செய்யலாம். குறிப்பாக இரவு படுப்பதற்கு முன் இதனை செய்யலாம்.

தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய்யில் வைட்டமின் ஈ மற்றும் இரும்பு சத்து உள்ளது. இது முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் லாரிக் அமிலம், முடியில் ஊடுருவி, புரத இழப்பை கட்டுப்படுத்துகின்றன. முடி வளர்ச்சிக்கு புரத சத்து தான் அடிப்படையாகும்.
* இரவு நேரத்தில் சில துளி தேங்காய் எண்ணெய்யை எடுத்து உங்கள் புருவத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும்.
* மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் முடி வளர்ச்சி அதிகரிக்கிறது.
* இரவு முழுதும் அப்படியே விட்டு வவிடவும்.
* மறுநாள் காலை, வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
* சில மாதங்கள் தொடர்ந்து இதனை செய்வதால் நல்ல மாற்றம் தெரியும்.

ஆலிவ் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய்யை போல் ஆலிவ் எண்ணெய்யையும் புருவ முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். இதில் இருக்கும் ஓலிக் அமிலம், புருவத்திற்குள் ஊடுருவி,  ஈரப்பதத்தை லாக்  செய்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஈ வேர்க்கால்களை வலுவாக்கி முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. வேர்க்கால்கள் வலிமையாக இருக்கும்போது இரத்த ஓட்டம்  அதிகரிக்கிறது . இதனால் வலிமையான முடி வளர்ச்சி அதிகரிக்கிறது.
* ஆலிவ் எண்ணெய் சில துளிகள் எடுத்து புருவத்தில் தடவவும்.
* நன்றாக மசாஜ் செய்யவும்.
* இரவு முழுதும் அப்படியே விடலாம் அல்லது 30 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
* ஆலிவ் எண்ணெய்யுடன் தேன் சேர்த்து புருவத்தில் தடவலாம்.
* நன்றாக மசாஜ் செய்து 10 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவலாம்.
* தினமும் இதனை செய்வதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

வெங்காய சாறு:
வெங்காயம் ஒரு ஆரோக்கியமான உணவு மட்டும் இல்லை, முடி வளர்ச்சிக்கும் இது பயன்படுகிறது. வெங்காயத்தில் ஆன்டிஆக்ஸிடென்டுகள் அதிகம் உள்ளது. சல்பர் அதிகம் உள்ளது. இது முடி வளர்ச்சிக்கு தேவையான ஒரு முக்கிய மினெரல் ஆகும்.
* வெங்காயத்தை அரைத்து  சாறு எடுத்துக் கொள்ளவும்.
* புருவத்தில் இந்த சாறை தடவி நன்றாக மசாஜ் செய்யவும்.
* காயும் வரை அப்படியே  விடவும்.
* காய்ந்தபின் குளிர்ந்த நீரால் கழுவவும்.
* ஒரு நாளைக்கு இரண்டு முறை , ஒரு மாதம் இதனை செய்யவும்.

முட்டையின் மஞ்சள் கரு :
முட்டையில் புரத சத்து அதிகம் உள்ளது. புரதம் முடி வளர்ச்சிக்கு முக்கியம். முட்டையின் மஞ்சள் கருவில், புரத சத்து அதிகமாக இல்லை என்றாலும், அதில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது. இது முடி ஆரோக்கியத்திற்கு நல்லது. மஞ்சள் கருவிலும் சல்பர் உள்ளது.
* முட்டையை உடைத்து, மஞ்சள் கருவை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
* க்ரீம் போல் வரும் வரை நன்றாக அடித்துக் கொள்ளவும்.
* ஒரு பஞ்சை  இதில் நனைத்து புருவத்தில் வைக்கவும்.
* 15-20 நிமிடங்கள் அப்படியே  விடவும்.
* பின்பு குளிர்ந்த நீரால் கழுவவும்.
* வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்யலாம்.

இந்த முறைகளை பின்பற்றி அடர்த்தியான புருவ முடிகளை பெறலாம்.