சத்துமாவு தயாரிக்கும் முறை

நம் முன்னோர் கண்டுபிடித்த சத்து மாவை எடுத்துக் கொண்டாலே நம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.

சத்துமாவு தயாரிக்கும் முறை

சத்துமாவு 

சத்துமாவில் பல சத்துக்கள் உள்ளதால் அது நம் உடலுக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது. சிலர்  தங்கள்  ஆரோக்கியத்திற்காக ஊட்டச்சத்து மாத்திரைகள் மற்றும் டானிக்கையும்,  சிலர் கடைகளில் விற்பனையாகும் ஊட்டச்சத்து  பானம் என்கிற பெயரில் விற்கப்படும் பல பானங்கள் பக்க விளைவுகள் ஏற்படுத்தும், என்பதை அறியாமல் உபயோகப்படுத்துகின்றனர். எந்தப் பக்க விளைவும் ஏற்படுத்தாத நம் முன்னோர் கண்டுபிடித்த சத்து மாவை எடுத்துக் கொண்டாலே நம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.

யாருக்கெல்லாம் கொடுக்கலாம்:

 • ஆறு மாத குழந்தைகளுக்கு,
 •  கர்ப்பிணி பெண்களுக்கு,
 • முதியவர்களுக்கு
 • அனைத்து, வயதினருக்கும் சத்துமாவு ஏற்றது.   

சத்துமாவு தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:

 1.  கேழ்வரகு 400 கிராம், 
 2.  கோதுமை 100 கிராம், 
 3.  கம்பு 100 கிராம், 
 4.  மக்காச்சோளம் 100 கிராம், 
 5. பாசிப்பயிறு 100 கிராம், 
 6.  கொண்டைக்கடலை 100 கிராம், 
 7.  சோயா பீன்ஸ் 100 கிராம், 
 8.  வேர்கடலை 100 கிராம்,
 9. கொள்ளு 100 கிராம், 
 10. கருப்பு உளுந்து  100 கிராம், 
 11.  தினை 100 கிராம், 
 12.  காய்ந்த மொச்சை 100 கிராம், 
 13.  பொட்டுக்கடலை 100 கிராம், 
 14.  சிகப்பரிசி 100 கிராம், 
 15. ஜவ்வரிசி 50 கிராம், 
 16.  சுக்கு 30 கிராம், 
 17.  ஏலக்காய் 15 கிராம், 
 18.  பாதாம் பருப்பு 50 கிராம், 
 19. முந்திரி 50 கிராம், 
 20.  காய்ந்த பேரிச்சம்பழம் 50 கிராம். 
 21. தேவையான அளவு உப்பு.  

செய்முறை:

இதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் தனித்தனியாக குறைந்த தணலில் வறுத்து எடுத்து ஆறிய பிறகு, அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளவும் . இதில் உள்ள சத்து இன்னும் அதிகமாக வேண்டும் என்றால் மேல் குறிப்பிட்டுள்ள முதல் 12 பொருட்களை தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் தண்ணீரை வடிகட்டி ஈரத்துணியால் சுற்றி வைத்து அடுத்த நாள் எடுக்க முளைகட்டி இருக்கும். இதை உலர்த்தி லேசாக வறுத்து எடுத்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள மற்ற பொருட்களுடன் சேர்த்து மாவாக  அரைத்தால் இதன் சத்து இன்னும் நமக்கு அதிகமாக கிடைக்கும்.

 இது ஒரு வருடம் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். வீட்டில் நாமே செய்வதால் கடையில் வாங்கும் பானங்களை விட செலவும் மிகக் குறைவாகவே இருக்கும். இதில் பிரிசர்வேட்டிவ் எதுவும் இல்லாததால் உடலுக்கு எந்த பக்க விளைவையும் ஏற்படுத்தாது.