சிறுநீரக கற்களை தடுக்க பொட்டாசியம் 

உடலில் மிக அதிகமாக இருக்கும் மினரல்களில் 3வது இடத்தை பிடிப்பது பொட்டாசியம் ஆகும். உடலில் பல செயல்பாடுகளுக்கு பயன்படும் மின்சாரத்தை வழி நடத்துவது இதன் சிறப்பான அம்சமாகும்.

சிறுநீரக கற்களை தடுக்க பொட்டாசியம் 

பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைப்பது, நீர்ச்சத்தை அதிகரிப்பது , வாதத்தை எதிர்த்து பாதுகாப்பது, சீறுநீரக கற்கள் வராமல் தடுப்பது, போன்றவை இதன் முக்கிய தன்மைகளாகும். பொட்டாசியத்தின் நன்மைகளை எடுத்துச் சொல்வதே இந்த பதிவாகும்.

உடலில் உள்ள திரவத்தை கட்டுப்படுத்துவதும், நரம்புகளுக்கு சிக்னல் அனுப்புவதும், தசை விரிப்பை கட்டுப்படுத்துவதும் இதன் பணியாகும். 98% பொட்டாசியம், செல்களில் தான் காணப்படுகிறது. அதிலும் 80% தசை செல்களில் காணப்படுகிறது. மீதம் 20% எலும்பு, கல்லீரல் மற்றும்  இரத்த அணுக்களில் காணப்படுகிறது.

தசைகள் சுருங்கி விரிவது , நரம்புகளுக்கு சிக்னல் அனுப்புவது, திரவ நிலையை சமன் செய்வது போன்ற வேலைகளுக்கு மின்சாரத்தின் பயன்பாடு அவசியம். இதற்கு பொட்டாசியம் ஒரு எலெக்ட்ரோலைட்டாக பயன்படுகிறது. ஒரு எலெக்ட்ரோலைட் தண்ணீரில் கரைந்து பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் மரபணுவாக  மாறி மின்சார உற்பத்திக்கு உதவும். இந்த வேலையை பொட்டாசியம் செய்கிறது. ஆகவே பொட்டாசியம் அளவு உடலில் சரியான நிலையில் இருப்பது அவசியம்.

திரவத்தை நிர்வகிக்கிறது :
நமது உடல் 60% தண்ணீரால் ஆனது. இதில் 40% உடலின் செல்களிலும் மீதம் செல்களின் வெளியில் , இரத்தம், முதுகு தண்டு மற்றும் செல்களுக்கு இடையில் இருக்கும். செல்களுக்கு உள்ளெ உள்ள தண்ணீரின் அளவை பொட்டாசியம் தீர்மானிக்கிறது. செல்களுக்கு வெளியே உள்ள தண்ணீரின் அளவை சோடியம் தீர்மானிக்கிறது. செல்களில் இருக்கும் எலெக்ட்ரோலலைட்டின் அளவு உள்ளேயும் வெளியேயும் ஒரே சமமாக இருக்க வேண்டும் . இந்த சமவிகிதம் குறையும் போது, நீரின்  அளவில் மாற்றம் ஏற்படும். நீர்சத்து குறையும் போது, உடலில் நீர்வறட்சி ஏற்படுகிறது. ஆகவே நீர்ச்சத்தை அதிகரிக்க பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

தசை மற்றும் இதயத்தின் சுருங்கி விரியும் தன்மைக்கு உதவுகிறது:
தசை சுருங்கி விரிவதற்கு நரம்பு மண்டலம் உதவுகிறது. பொட்டாசியம் அளவு குறைபாடு, நரம்பு சிக்னலில் குறைபாட்டை ஏற்படுத்துவதால் தசை சுருங்கும் தனமையில் பாதிப்பு ஏற்படுகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு பொட்டாசியம் அதிக அளவில் துணை புரிகிறது. செல்களுக்கு உள்ளேயும் வெளியேயும் இயங்கும் தன்மையால் இதயத்துடிப்பு சீராக இருக்க வைக்கிறது . தசைகள் சுருங்கி விரியும் தன்மையில் மாறுபாடு ஏற்படும்போது இதய துடிப்பு சீரற்ற நிலையில் இருக்கும்.

நரம்பு மண்டலத்திற்கு அவசியம்:
மூளைக்கும் உடலுக்கும் செய்திகளை பரிமாறுவதற்கு நரம்பு மண்டலம் துணைபுரிகிறது. செய்திகள் நரம்பு உந்துதலில் வழியாக பரிமாறப்படுகிறது. இது தசை விரிப்பு, இதயத்துடிப்பு, போன்ற பல செயல்களுக்கு உதவியாக இருக்கிறது. பொட்டாசியத்தின் அளவு குறையும்போது நரம்பு உந்துதலில் பாதிப்பு ஏற்படலாம்.

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது:
அதிக அளவு சோடியத்தை உடலில் குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தின் அதிகரிப்பை குறைக்கிறது.
வாதத்தை எதிர்த்து உடலை காக்கிறது:
மூளைக்கு இரத்த ஓட்டம்  குறையும் போது வாதம் ஏற்படுகிறது. பொட்டாசியம் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது வாதம் ஏற்படுவது குறைகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

சிறுநீரக கற்களை தடுக்கிறது:
சிறுநீரக கற்கள் என்பது சீறுநீரில் படியும் சில கூறுகளாகும். பொதுவாக கால்சியம் தான் அதிகமாக சிறுநீரகத்தில் படியும். பொட்டாசியம் சிட்ரைட் சிறுநீரில் கால்சியம் படிவதை  குறைக்கிறது. இதனால் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கப்படுகிறது.

பொட்டாசியம்  அதிகம் உள்ள உணவுகள்:
முழு உணவுகளில் பொட்டாசியம் சத்து அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக பழங்கள், காய்கறிகள் மற்றும் மீன்கள் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகள். ஒரு நாளைக்கு 3500-4700 மில்லி கிராம் அளவு பொட்டாசியம் உட்கொள்ளல் பரிந்துரைக்கப்படுகிறது.

இங்கே குறிப்பிட்டுள்ள உணவு பட்டியலில் 100கிராம்  உட்கொள்ளலுக்கு பொட்டாசியத்தின்  அளவு கொடுக்கப்பட்டுள்ளது.
* வேக வைத்த  கருணை கிழங்கு - 670மில்லி கிராம் 
* வேக வைத்த  உருளை கிழங்கு - 544 மி கி 
* மஷ்ரூம் - 521 மி கி 
* அவகேடோ - 485 மி கி 
* வேக வைத்த சர்க்கரைவள்ளி கிழங்கு - 475 மி கி 
* வேக வைத்த கீரை - 466 மி கி 
* சமைத்த சால்மன் மீன் - 414 மி கி 
* வாழைப்பழம் - 358 மி கி 
* வேக வைத்த பட்டாணி - 271 மி கி 

அதிகமான மக்கள் பொட்டாசியம் குறைந்த உணவுகளை தேர்ந்தெடுக்கின்றனர். மேலே குறிப்பிட்ட உணவுகளை உண்டு பொட்டாசியத்தை அதிகரித்து ஆரோக்கியத்துடன் வாழலாம்.