கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் பிசிஓஎஸ் பாதிப்பு

கருவுற்றிருக்கும்போது பிசிஓஎஸ் பாதிப்பை நிர்வகிப்பது எப்படி ?

கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் பிசிஓஎஸ் பாதிப்பு

பிசிஓஎஸ் என்பது பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ரோம் என்னும் கருப்பை நீர்கட்டிகளைக் குறிக்கிறது. நாளமில்லா சுரப்பிகளில் உண்டாகும் கோளாறு காரணமாக இனப்பெருக்க மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பு ஒழுங்கற்ற அல்லது தடைபட்ட அண்டவிடுப்பிற்கு வாய்ப்பாக அமைகிறது.  உலகம் முழுவதும் பெண்களை பாதிக்கும் இந்த கோளாறு, பெண்களில்  2.2% முதல் 26% வரை பாதிக்கிறது  என்று  கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பாக தென்னிந்தியா மற்றும் மஹாராஷ்டிராவில் 9.13% மற்றும் 22.5% வழக்குகள் பதிவாகியுள்ளன.

நீர்கட்டிகள் பற்றிய புரிதல்:

கருப்பையில் நீர்கட்டிகள் பெருகி இருக்கும் நிலையை பாலிசிஸிட்டிக் ஓவரி என்று குறிப்பிடுகிறோம் இந்த நிலையால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஆண் ஹார்மோன்களான அன்ட்ரொஜென் போன்றவற்றை சற்று அதிக அளவில்  உற்பத்தி செய்கின்றனர். இதன் காரணமாக ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, முகம் மற்றும் உடலின் மற்ற பகுதிகளில் அதிகமான முடி வளர்ச்சி, உடல் எடை அதிகரிப்பு, பருக்கள்  போன்ற அறிகுறிகள் உண்டாகிறது.

பிசிஓஎஸ் காரணமாக பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்கள்:

பிசிஓஎஸ் காரணமாக பிரசவம் தொடர்பான சில சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அவற்றை இப்போது காணலாம்.

கருச்சிதைவு :

பிசிஓஎஸ் அறிகுறிகளில் ஒன்று ஒழுங்கற்ற மாதவிடாய். சிலருக்கு மாதவிடாய் நீடித்த நாட்கள் இருக்கும். அதனால் அண்டவிடுப்பு ஏற்படுவதில் தாமதம் ஏற்படுகிறது. அதனால் வளர்ச்சி பெற்ற முட்டை பல எண்ணிக்கையிலான ஹார்மோன்களுக்கு வெளிப்படுகின்றன. இதன் காரணமாக கருமுட்டைக்கு சேதம் ஏற்படுகிறது. கட்டுப்படுத்தப்படாத இரத்த சர்க்கரை மற்றும் கருச்சிதைவிற்கு ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இன்சுலின் எதிர்ப்பு மற்றும் அதிகரித்த இன்சுலின் அளவு போன்றவை மோசமான முட்டை தரம் மற்றும் கருச்சிதைவிற்கு வழிவகுக்கிறது

இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

திருமணத்திற்கு பின் கருவுறுதல் தொடர்பான சந்தேகங்களுக்காக மகப்பேறு மருத்துவரை அணுகுவது  அவசியம் . நீர்கட்டிகளுக்கான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் ஸ்க்ரீனிங் மற்றும் கவுன்சிலிங் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் பல சிக்கல்கள் தடுக்கப்படும். இதனைத் தடுக்கும் விதமாக சில குறிப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. கருவுருவதற்கு முன்பு மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவதால் சில குறிப்பிட்ட வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதால் சில அபாயங்கள் குறையலாம்
  2. கருவுருவதற்கு முன் வழக்கமான சோதனைகள் மற்றும் பராமரிப்பு தேவை
  3. இரத்த சர்க்கரை அளவில் கவனம் தேவை.
  4. பதப்படுத்தப்பட்ட உணவு, சுத்தீகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் பொரித்த உணவுகள் ஆகியவற்றை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.
  5. உயர் நார்ச்சத்து கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளான ஆப்பிள், ப்ளம், ப்ரோக்கோலி, காலிப்ளவர் போன்றவை, நலிந்த இறைச்சி, முழு தானியம் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்
  6. உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்
  7. சோடியம் மற்றும் ஆல்கஹால் உட்கொள்ளல் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்
  8. கொழுப்பு மீன்கள், நட்ஸ், அவகேடோ, ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உட்கொள்வதால் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் கிடைக்கிறது. இவற்றிற்கு இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை உண்டு.

பிசிஓஎஸ் பாதிப்பை  முன்கூட்டியே அறிவது மிகவும் அவசியம். இன்சுலின் எதிர்ப்பு, டைப் 2  நீரிழிவு,      உயர் கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பல்வேறு மருத்துவ பாதிப்புகளை வளர்க்கும் ஒரு நீண்ட கால அபாயமாக பிசிஓஎஸ் பாதிப்பு விளங்குகிறது