பாலக் பனீர் செய்வது எப்படி ?

இன்றைய நவீன காலங்களில் அனைவருக்கும் சில உணவுகள் வெகுவாக பிடிக்கின்றன. அவற்றுள் ஒன்று பனீர்.

பாலக் பனீர் செய்வது எப்படி ?

பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவு பொருள் என்பதால் பனீரில் ஊட்டச்சத்துகளும் அதிகம் உள்ளன. பனீர் கொண்டு தயார் செய்யப்படும் எல்லா உணவிலும் ஒரு தனி சுவை உண்டு. இன்று நாம் பனீர் தயாரிப்பில் ஒரு அதி சுவை உணவை காண போகிறோம். அது பாலக் பனீர். வட இந்தியாவில் ரொட்டி அல்லது சப்பாத்தியுடன் சேர்ர்த்து அதிகம் விரும்பி உண்ணப்படும்  இந்த உணவு, இன்று எல்லா இடங்களிலும் பரவலாக தயாரிக்கப்படும் ஒரு உணவு பொருளாக உள்ளது.

நீங்கள் உடல் பருமன் உடையவரா? உங்கள் தினசரி உணவு அட்டவணையில் பாலக் பனீர் சேர்ப்பதன் மூலம் உங்கள் எடை குறைப்பு திட்டம்  விரைவில் நல்ல பலனை கொடுக்கிறது. இதன் கலோரி அளவு மிகவும் குறைவு. ஆனால் வயிறு நிரம்பு உணர்வை தரும் ஒரு உணவாக உள்ளது. எவ்வாளவு அதிகம் பசலி கீரையை எடுத்துக் கொண்டாலும் மிக குறைந்த கலோரி அளவை இது காட்டுகிறது. நார்ச்சத்து மிகவும் அதிகமாக இருப்பதால், பசி எடுக்கும் உணர்வு குறைகிறது. ஆகவே தொப்பையை  குறைக்க நினைப்பவர்கள் இந்த உணவை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். 100% உங்களுக்கு நல்ல பலனை தரும் உணவாக பாலக் பனீர் உள்ளது. இந்த உணவில், மக்னீசியம், போலேட், வைட்டமின் ஏ, வைட்டமின் கே, பொட்டஷியம், கால்சியம் போன்றவை அதிகமாக உள்ளன. கர்ப்பிணி தாய்மார்கள் இந்த உணவை அதிகம் எடுத்துக் கொள்வதால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. பனீர் சேர்க்கப்படுவதால், குழந்தை வளர்ச்சிக்கு நன்மை தருகிறது. பாலக் கீரையில் இருக்கும் போலேட், குழந்தையின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சிக்கு துணை புரிகிறது.

பாலக் பனீர் என்பது பாலக் கீரை விழுதுடன் பனீர் மற்றும் சில மசாலா பொருட்கள் சேர்த்து தயார் செய்யப்படும் ஒரு உணவு. இந்த உணவை மேலும் விரும்பி சுவைப்பதற்கு மற்றொரு காரணம் , இதன் நிறம். அடர்ந்த பச்சை நிறத்தில் இருக்கும் பாலக் பனீர் குழந்தைகள் கூட விரும்பி சுவைக்கும் ஒரு உணவு பொருளாக உள்ளது. பாலக் பனீர் தயாரிக்கும்போது பனீரை பொறித்து போடுவதால், அதன் சுவை மேலும் அதிகரிக்கிறது. ஆனால் நமது ரெசிபியில் பிரெஷ் பனீர் தான் சேர்க்கப்படுகிறது. இந்த பாலக் பனீர் விரைந்து தயார் செய்யப்படும் ஒரு ரெசிபி. வாருங்கள் இதன் தயாரிப்பை ஒவ்வொரு கட்டமாக பார்க்கலாம்.

பாலக்  பனீர் எப்படி செய்வது ?

தேவையான பொருட்கள்:

பாலக் அல்லது பசலை கீரை - 2 கட்டு
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1 கப்
தக்காளி (பொடியாக நறுக்கியது) - 1 கப் 
பச்சை மிளகாய் - 1 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 4
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
தண்ணீர் - தேவைகேற்ப
பிரெஷ் க்ரீம் - 3 ஸ்பூன்
பனீர் - 1 கப் 

தயாரிக்கும் முறை :

1. 2 கட்டு பசலைக் கீரையை எடுத்து நன்றாக கழுவி கொள்ளவும்.
2. கழுவிய கீரையை குக்கரில் போடவும்.
3. கீரையுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். 1 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
4. ஒரு கடாயில்  1 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.
5. நறுக்கி வைத்த 1 கப் வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
6. நறுக்கி வைத்த 1 கப் தக்காளியை இதனுடன் சேர்த்து வதக்கவும்.
7. ஒரு ஸ்பூன் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
8. இந்த கலவையுடன் 4 முந்திரி பருப்பை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
9. இதற்கிடையில் குக்கரில் உள்ள கீரையை எடுத்து ஆற வைக்கவும்.
10. வதக்கிய கலவையை மிக்சி ஜாரில் போடவும்.
11. மிக்சி ஜாரில்  உள்ளவற்றை பேஸ்ட் போல் விழுதாக அரைக்கவும். அரைத்த விழுதை தனியே எடுத்து வைக்கவும்.
12. கடாயில்  2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.
13. அரைத்த விழுதை கடாயில்  கொட்டி வதக்கவும்.
14. மிளகாய் தூள் 1 ஸ்பூன் மற்றும் உப்பு 1 ஸ்பூன் சேர்த்து மேலும் வதக்கவும்.
15. 2 ஸ்பூன் பிரெஷ் க்ரீம் சேர்க்கவும்.
16. கடாயை மூடிவைத்து 1 நிமிடம் காத்திருக்கவும்.
17. ஒரு நிமிடம் கழித்து கடாயை இறக்கி வைக்கவும்.
18. இப்போது மிக்சியில் ஆறிய பசலை கீரையை சேர்க்கவும்.
19. மென்மையான விழுதாகும் வரை நன்றாக அரைக்கவும்.
20. இறக்கி வைத்த கடாயில் இந்த கீரை விழுதை சேர்க்கவும்.
21. மறுபடி அடுப்பில் வைத்து 1 நிமிடம் வேக விடவும்.
22. ஒரு நிமிடம் கழித்து, அந்த கிரேவியில் பனீர் துண்டுகளை சேர்க்கவும்.
23. ஒரு கிண்ணத்தில் மாற்றி ,மேலும் சிறிது பிரெஷ் க்ரீம் சேர்த்து கிளறவும்.
24. பின்பு சூடாக பரிமாறவும்.


இப்போது சுவையான பாலக் பனீர் தயார். குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதனை விரும்பி சுவைப்பர். நீங்களும் முயற்சித்து பாருங்கள்.

ஆரோக்கியமான பாலக் பனீர் செய்வதற்கான சில குறிப்புகள் :
1. குறைந்த கொழுப்பு பனீரை வாங்கி பயன்படுத்தலாம்.
2. பாலக் அல்லது பசலை கீரை, எந்த ஒரு மசாலா பொருளும் இல்லாமலே அதிக சுவை கொடுப்பதால், மிதமான அளவு மசாலா பொருட்களை பயன்படுத்தலாம்.
3. கீரையை அதிகமாக வேக வைக்க வேண்டாம். அப்படி செய்தால் அதில் உள்ள ஊட்டச்சத்துகள் குறைந்து விடும்.
4. பனீரை கீரையுடன் சேர்ப்பதற்கு முன், 1/2 மணி நேரம் வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்க வேண்டும். இதனால், பனீர் மிகவும் மென்மையாக இருக்கும்.