செயற்கை இனிப்புகள்  - 10 விதமான ஆபத்துகள் 

இன்றைய  நவீன காலகட்டத்தில், எல்லா பொருட்களும் நவீன மயமாகி விட்டன. எல்லாவற்றிற்கும் ஒரு மாற்று உள்ளது. இது சுவைக்கும் பொருந்தும்.

செயற்கை இனிப்புகள்  - 10 விதமான ஆபத்துகள் 

இயற்கை இனிப்புகளைத்  தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு செயற்கை இனிப்புகள் கைவசம் உள்ளன. இன்று எல்லா விதமான பானங்கள், உணவு பொருட்கள் போன்றவற்றில் செயற்கை இனிப்புகள் சேர்க்கப்படுகின்றன. சோடா போன்ற பானங்கள் முதல் கேக் போன்ற தின் பண்டங்கள், மற்றும் டூத் பேஸ்ட்டில் கூட செயற்கை இனிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை, மிகவும் லேசான உணவுகள், டயட் உணவுகள், சர்க்கரை இல்லாத உணவுகள் என்று மக்களைக்  கவரும் விதத்தில் சந்தையில் அறிமுகம் செய்வது உணவு தொழிற்சாலையின் பணியாக உள்ளது. இயற்கை இனிப்பில் உள்ள அதே சுவை, கலோரி குறைவாக கிடைக்கும்போது, மக்கள் அதனை ஒரு ஆரோக்கிய தேர்வாக நினைத்து வாங்குகின்றனர் . ஆனால் , இதனை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினால், பல திடுக்கிடும் தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. நாம் அனைவரும் நினைப்பது போல், செயற்கை இனிப்புகளில் ஆரோக்கியம் என்பது வாய்வழி செய்தி மட்டும் தான். இதன் பயன்பாட்டில் பல ஆபத்துகள் உள்ளன என்பது நாட்கள் செல்லச் செல்ல நன்கு புலனாகிறது. சர்க்கரைக்கு மாற்றாக பல இயற்கை இனிப்புகள் உள்ளன. செயற்கை இனிப்புகளில் ஆர்வம் உள்ளவர்கள், இந்த பதிவை படித்து, இதில் இருக்கும் ஆபத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஊட்டச்சத்து அல்லாத இனிப்பு அல்லது அதி தீவிர இனிப்பு என்று கூறப்படுவது தான் செயற்கை இனிப்புகள் . பொதுவாக இது சர்க்கரைக்கு மாற்றாக கருதப்படும் ஒரு பொருள். உணவின் சுவையை அதிகப்படுத்தவும், அதன் இனிப்பு தன்மையை அதிகரிக்கவும் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக பயன்பாட்டில் இருக்கும் சுக்ரோஸ் என்னும் வெள்ளை சர்க்கரையை விட அதிக இனிப்பு சுவையைக் கொண்டது இந்த செயற்கை இனிப்பு. சர்க்கரையை விட மிகக் குறைந்த அளவு பயன்பாட்டில் சர்க்கரையின் சம அளவு இனிப்பை இது தருகிறது. மேலும், செயற்கை இனிப்புகள் மிகக் குறைந்த அல்லது முற்றிலும் கலோரிகள் அல்லாத சுவையைத் தருகின்றன. ஆகவே இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வேண்டாம் என்று நினைப்பவர்களின் மனம் கவர்ந்த பொருளாக இந்த செயற்கை இனிப்புகள் உள்ளன. அஸ்பார்டேம், சைக்லமேட் , சக்கரின் மற்றும் ஸ்டீவியா போன்ற பல ஒழுங்குமுறை நிறுவனம்-அங்கீகரிக்கப்பட்ட செயற்கை இனிப்பு வகைகள் உள்ளன.

அஸ்பார்டேம்:
ஜேம்ஸ் எம்.ச்லேட்டேர் அவர்களால் 1965ம் ஆண்டு இந்த சர்க்கரை மாற்று கண்டுபிடிக்கப்பட்டது. எந்த ஒரு வாசனையும் இல்லாத ஒரு வெள்ளை தூள் போல் இது இருக்கும். பொதுவான சர்க்கரையை விட 200 மடங்கு அதிக சுவை கொண்டதாக இந்த அஸ்பார்டேம் உள்ளது. இது அடிக்கடி பானங்கள், உறைந்த இனிப்பு, கம், மற்றும் ஜெலட்டின் உள்ள இனிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. உயர் வெப்ப நிலையில் அல்லது சமைக்கப்படும்போது, இது அமினோ அமிலங்களை உடைப்பதால் , இதனை பேக் (bake) செய்வது நல்லதல்ல. இதனை சாப்பிட்டு முடித்தவுடன் சக்கரின் போல ஒரு சிறு கசப்பு தன்மையை தரும். இவ்வித கசப்பு உணர்வு, இயற்கை இனிப்புகளில் இருக்காது. இது மிக அதிக இனிப்பு சுவையை கொண்டிருப்பதால், மிகக் குறைந்த  அளவு அஸ்பார்டேம் சேர்ப்பதால் உணவு மற்றும் பானங்கள் அதிக சுவையைப் பெறுகின்றன. இதனால் இந்த செயற்கை இனிப்பு, உணவின் கலோரி அளவைக் குறைக்க உதவுகிறது. வருடங்கள் செல்லச்செல்ல இந்த இனிப்பின் பாதுகாப்பு பற்றிய கேள்வி எழ அது பற்றிய ஆராய்ச்சி விரிவாக ஆராயப்பட்டது. புற்று நோய், மனநலக் கோளாறு, நரம்பியல் பக்க விளைவுகள் போன்றவை இந்த இனிப்பின் பயன்பாட்டால் ஏற்பட்டிருக்கலாம் என்ற உண்மை தெரிய வந்தது. 

சைக்லமேட்:
சைக்லமேட் என்பது மற்றொரு செயற்கை இனிப்பு. சாதாரண சர்க்கரையை விட 30 முதல் 50  மடங்கு அதிக இனிப்புதன்மையை இந்த இனிப்பு தருகிறது. செயற்கை இனிப்புகளில் மிகக் குறைந்த அளவு இனிப்பு சுவையைத் தருவது இந்த செயற்கை இனிப்பு தான். பொதுவாக, சக்கரின் என்ற மற்றொரு செயற்கை இனிப்புடன் சேர்த்து தான் இதனை பயன்படுத்துவர். இன்று உலகில் 130 நாடுகளுக்கு மேல் இந்த செயற்கை இனிப்பை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அமெரிக்காவில் இந்த செயற்கை இனிப்பு தடை செய்யப்பட்டுள்ளது.

சக்கரின் :
1879ம் ஆண்டு முதன் முதால்க கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை இனிப்பு இந்த சக்கரின் . சாதாரண சர்க்கரையை விட 300 முதல் 500 மடங்கு அதிக இனிப்பு சுவையைத் தரும் ஒரு செயற்கை இனிப்பு இந்த சக்கரின் . பற்பசை, டயட் பானங்கள், டயட் உணவுகள், இனிப்புகள், மற்றும் மருந்துகளில் சக்கரின் பயன்படுத்தப்படுகின்றன. அஸ்பார்டேம் போல், இதிலும் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு கசப்பு தன்மை உண்டு. ஆனால் மற்ற செயற்கை இனிப்புகள் சேர்த்து பயன்படுத்தப்படுவதால் அதன் கசப்பு தன்மை குறைக்கப்படுகிறது. 

இதனை கண்டுப்பிடிக்கப்பட்ட முதல் சில ஆண்டுகளில், எலிகளில் சோதனை நடத்தப்பட்டு , இதனை பயன்படுத்துவதால் சிறுநீரக புற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் உயர் விலங்குகள் சோதனையில் இந்த கருத்து நிரூபிக்கப்படாததால், புற்று நோய் பற்றிய கருத்துக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டது. சக்கரின் ஒரு பாதுகாப்பான ஒரு பொருள் என்று அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் அதன் பயன்பாட்டு அளவுகள் பல நாடுகளில் குறைக்கப்பட்டது.

ஸ்டீவியா:
ஸ்டீவியா என்பது பரவலாக, குறிப்பாக தென் அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் ஒரு செயற்கை இனிப்பு. ஜப்பானில் இந்த செயற்கை இனிப்பை 1970 களில் இருந்து பயன்படுத்தி வருகின்றனர். ஸ்டீவியா பொதுவாக அதன் பூஜ்ய கலோரி மற்றும் பூஜ்ய க்ளைகமிக் குறியீட்டு பண்புகள் காரணமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த தன்மைகள் ஸ்டீவியாவில் மட்டுமே உள்ளன. சாதாரண சர்க்கரையை விட 100 முதல் 300 மடங்கு அதிக இனிப்பு சுவையை இது தருகிறது. 
ஒரு உணவு சேர்க்கையாக இதன் சட்டப்பூர்வ நிலைப்பாடு ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடுகிறது . உதாரணத்திற்கு, அமெரிக்கா 1991ம் ஆண்டு ஸ்டீவியாவை தடை செய்தது. பின்னர் பல ஆராய்ச்சி முடிவுகள் ஸ்டீவியா முற்றிலும் பாதுகாப்பானது என்று கூறியதால் 2008ம்  ஆண்டு மீண்டும் இதனை அமெரிக்கா அங்கீகரித்தது. அதே சமயத்தில் ஐரோப்பிய நாடுகள்  2011ம்  ஆண்டு பிற்பகுதியில்  இதனை ஒரு உணவு சேர்க்கையாக அனுமதித்தது. 

செயற்கை இனிப்புகளின் ஆபத்துகள் :

ஒழுங்குமுறை முகவர்கள் எல்லா வித செயற்கை இனிப்புகளுக்கும் அங்கீகாரம் வழங்குவது இல்லை. அதிகமான செயற்கை இனிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட செயற்கை இனிப்புகளுக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைத்துள்ளது. துரதிஷ்டவசமாக , சில அங்கீகரிக்கப்படாத செயற்கை இனிப்புகளும் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றின் பயன்பாடு மிகவும் ஆபத்தானது. மேலும்  இவற்றைப் பற்றிய அடுத்த கட்ட ஆராய்ச்சிகள் இதன் ஆபத்தான பக்க விளைவுகளை மேலும் அறிந்து கொள்ள தேவைப்படுகிறது. சில நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட செயற்கை இனிப்புகள் , வேறு சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. ஆராய்ச்சிகள் மற்றும் அதன் ஆபத்துகளின் முடிவுகளின்  கருத்து வேறுபாடுகளே இந்த நிலைமைக்கு காரணம். உதாரணமாக, அசுல்பெம் பொட்டாசியம் அமெரிக்காவில் மட்டும்  4000 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளில் ஒரு செயற்கை இனிப்புப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த தயாரிப்பில் புற்று நோய் பாதிப்பிற்கான சாத்தியம் இருப்பதாக அறியப்படுவதால் மற்ற நாடுகள் இது குறித்து அடுத்த கட்ட ஆரய்ச்சிகள் தேவை என்று கருதி இந்த செயற்கை இனிப்பை அங்கீகரிக்கவில்லை.  பிறப்பிற்கு முந்தைய கருவின் வளர்ச்சி மற்றும் கட்டி வளர்ச்சி போன்றவற்றில் இதன் எதிர்மறை தாக்கம் இருப்பதாக மேலும் சில ஆய்வுகள் கூறுகின்றன. 

செயற்கை இனிப்புகளுடன் தொடர்புடைய நோய்கள் :
தவறான அல்லது அதிகமான அளவு பயன்படுத்துவதால், செயற்கை உணவுகளில் பல ஆபத்துகள் உள்ளன. ஆய்வுகள் மீது ஆய்வுகள் செயற்கை இனிப்பு நோயாளிகளின் ஆபத்துகளை உறுதிப்படுத்துகின்றன மற்றும் நீண்டகால சிறுநீரக நோய் , டைப் 2 நீரிழிவு, வளர்சிதை மாற்ற குறைபாடுகள் மற்றும் நரம்பியல் விளைவுகள் போன்ற நாட்பட்ட நோய்களுடன் இந்த செயற்கை இனிப்பிற்கு தொடர்பு உள்ளதாக அறியப்படுகிறது..

இரசாயன உட்கொள்ளல்
இயற்கையாகவே சர்க்கரை உற்பத்தி செய்யக்கூடிய இனிப்புத்திறனைப் பிரதிபலிப்பது செயற்கையான இனிப்புகள் ஆகும். இயற்கை இனிப்புகளைப் போல் , செயற்கை இனிப்புப் பொருள்கள் எடை அதிகரிப்பு, உடல் பருமன், மற்றும் கலோரிகளால் நிரம்பியிருக்காது. இது ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும் கூட, செயற்கை இனிப்புகளில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது என்பது ஒரு முக்கியமான உண்மை. இவ்வித இனிப்புகள்  "செயற்கை" என்பதால், இவைகள்  செயற்கை அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுவது ஆச்சரியமல்ல. இத்தகைய பொருட்களை உடல் ஏற்றுக் கொள்ளும்படி வடிவமைக்கப்படாததால், இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன. 

அதிகரித்த சர்க்கரைத் தேடல்:
உண்மையான சர்க்கரையை விட அதிக இனிப்பு சுவை கொண்டதால் இயல்பாகவே, அதிகமான அளவு இனிப்பை எடுத்துக் கொள்ளும் ஆர்வம் தூண்டப்படுவது தவிர்க்கமுடியாததாகிறது. கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்திலிருந்து ஒரு ஆய்வில், செயற்கை இனிப்பு மருந்துகள் "இயற்கை கலோரி இனிப்பு உட்கொள்ளல்" க்கான மூளையின் விருப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்யாது என்று முடிவெடுத்தது. செயற்கை இனிப்புகளில் கலோரி அல்லாத அல்லது குறைந்த கலோரி அளவுகள் உள்ளதால், இனிப்புத்  தேடலை நிர்வகிப்பதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்காது.

கர்ப்பிணிகளுக்கு ஆபத்து :
கர்ப்பகாலத்தில் தாய் மார்கள் எடுத்துக் கொள்ளும் எல்லா உணவுகளும் பரிசோதிக்கப்பட வேண்டும். கர்ப்பிணிகள் செயற்கை இனிப்புகளை எடுத்துக் கொள்வதால், கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது  என்றும் புற்று நோயின் அபாயம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதென்றும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மற்றொரு ஆய்வல், தினசரி கர்ப்பிணிப் பெண்கள் செயற்கை இனிப்புகள் கொண்ட பானங்களை அருந்துவதால் முன் கூட்டியே பிரசவிக்கும் வாய்ப்பு உள்ளது என்று அறியப்படுகிறது. 

குழந்தைகளுக்கு ஆபத்து :
குழந்தைகளில் அதிக சர்க்கரை உணவு மற்றும் ADHD உடனான உறவுகளின் எதிர்மறையான விளைவுகளை காட்டும் பல ஆய்வுகள் உள்ளன. பல பெற்றோர்கள், செயற்கை இனிப்புகள் சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை குழந்தைகள் உட்கொள்வதை ஆதரிக்கிறார்கள். குழந்தைகளின் நீண்ட நாள் ஆரோக்கியத்தில் இந்த செயற்கை இனிப்புகளின் பாதிப்பை எடுத்துக் கூறும் வகையில் மிகக் குறைந்த அளவு ஆய்வுகளே மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்பது துயரமான ஒரு விஷயமாகும். கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் செயற்கை இனிப்புகளை தவிர்க்க வேண்டும் என்பது பரிந்துரைக்கப்படுகிறது.தவிர்க்க முடியாத சூழலில், மிதமான அளவு உட்கொள்வதால் அதன் பாதிப்பும் மிகக் குறைந்த அளவு உண்டாகும்.

எடை அதிகரிப்பு :
உடல் எடை அதிகரிப்பிற்கு  செயற்கை இனிப்புப் பொருட்கள் காரணமாக இருக்கலாம் என்று நினைப்பது , முதலில் அபத்தமான மற்றும் முரண்பாடானதாக தெரிகிறது. இதற்கு  காரணம், செயற்கை இனிப்புகளில் கலோரிகள் கிடையாது. பலர் எடை குறைப்பிற்காகத்தான் பூஜ்ய சர்க்கரை குளிர்பானங்களைத் தேர்வு செய்கின்றனர். குடல் பக்டீரியாவிற்கும் எடை அதிகரிப்பதற்கும் தொடர்பு உண்டு. வாழ்வியல் முறையில் மாற்றம் மற்றும் கெட்ட உணவு பழக்கம் போன்றவை ஆரோக்கியமற்ற குடல் பக்டீரியாவை உருவாக்கி, பல்வேறு நோய்களை உருவாக்குகிறது. 
செயற்கை இனிப்புகள் குடல் பக்டீரியாவை நேரடியாக  தாக்குகின்றன. எலியில் மீது சோதனை நடத்தி பார்த்ததில் , அவற்றிற்கு க்ளுகோஸ் சகிப்புத்தன்மை குறைவதை அறிய முடிகிறது. மேலும் பக்டீரியா கலவையில் மாற்றம் ஏற்படுவதையும் அறிய முடிகிறது. பக்டீரியா கலவையில் ஏற்படும் மாற்றத்தால் கெட்ட பக்டீரியா அளவு அதிகரித்து எடை அதிகரிப்பிற்கு காரணமாகின்றன என்பது தெரிய வருகிறது. மனிதர்களிடம் இந்த சோதனை நடத்தப்படாவிட்டாலும், குடல் பாக்டீரியாவில் இதன் தாக்கம் இருப்பதால் இதனை தவிர்ப்பது நல்லது.

வளர்சிதை மாற்ற தடை  :
அடிக்கடி செயற்கை இனிப்புகளை உணவில் சேர்த்துக் கொள்வதால், குறிப்பாக, பானங்களில் எடுத்துக் கொள்வதால், அதிக உணவை சாப்பிட நேர்ந்து வளர்சிதை மாற்ற தடைகள் தோன்றும் என்று பெர்ட்யு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. செயற்கை இனிப்புப் பொருட்களான உணவு, பானங்கள் ஆகியவை குளுக்கோஸ் ஹோமியோஸ்டிஸ் மற்றும் ஆற்றலைக் கட்டுப்படுத்தும் உடலின் எழுச்சியுடனான பிரதிபலிப்புகளை தடுக்கின்றன, இது உடலின் இயல்பான வளர்சிதை மாற்றத்திற்கு தடையாக உள்ளது.

ஞாபக மறதி :
செயற்கை இனிப்புகளால் உண்டாகும் மற்றொரு பக்க விளைவு , ஞாபக மறதி. தொடர்ந்து செயற்கை இனிப்புகளை பானங்கள் மூலம் எடுத்துக் கொள்வதால், சிறு மூளை பாதிக்கப்பட்டு ஞாபக மறதி உண்டாகும் வாய்ப்புகள் தோன்றலாம். செயற்கை இனிப்புகள், மூளையில் உள்ள நரம்பனுக்களைத் தாக்கும் ஒரு  நரம்புநச்சாக செயல்படுகிறது. 

ஹார்மோன் கோளாறுகள் :
பர்ட்யு பல்கலைக்கழகத்தில் நடந்த மற்றொரு அறிவியல் ஆய்வில், தொடர்ச்சியாக செயற்கை இனிப்புகளை எடுத்துக் கொள்வதால், இன்சுலின் ஹார்மோன் மீது அவை தீய விளைவை ஏற்படுத்துவதாக தெரிய வருகிறது. உங்கள் நாவில் இனிப்பு சுவை படும்போது, கலோரிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், சர்க்கரை சாப்பிட்டால் வெளியிடும் அதே அளவு இன்சுலினை உங்கள் உடல் வெளியிடுகிறது. வெளியிடப்பட்ட இன்சுலின், இரத்த சர்க்கரை அளவை சுண்டி விட்டு, உங்கள் இனிப்பு தேடலை அதிகரிக்க வைக்கிறது. GLP-1 என்பது உடலில் இரத்த சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துவதோடு, தெவிட்டு நிலையை நிர்வகிக்கும் ஒரு ஹார்மோன் ஆகும். செயற்கை இனிப்புகள் , GLP-1 உருவாக்கத்தைத்  தடுக்கின்றன. இந்த இரண்டு ஹார்மோன்களும் சேர்ந்து பசியை அதிகரித்து, அதிக உணவை சாப்பிடும் சூழல் உருவாகும்.

முடிவுரை :

இந்த கட்டுரைக்கான  ஆராய்ச்சியில், செயற்கை இனிப்புகளில் அதிகமான நன்மைகள் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் இதற்கான எதிர்மறை விளைவுகள் ஏராளம் உள்ளன என்பது தெரிய வருகிறது. ஆனால் இவை பற்களுக்கு மிகவும் உகந்தது என்பது உண்மை. நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை உட்கொள்வதை நிர்வகிக்க அவற்றைப் பயன்படுத்தலாம், இது நீரிழிவுக்கான சர்க்கரை ஆபத்துக்களை நிச்சயமாகத் தடுக்கும். ஆனால் எடை இழப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக உங்கள் கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதற்கான வழிமுறையாக செயற்கை இனிப்புகளை நீங்கள் தேர்வு செய்தால், அவை எதிர்மறை விளைவுகளை உண்டாக்கலாம். எல்லா சாத்தியமான அபாயங்களையும் நீங்கள் கருத்தில் கொள்ளும்போது, இந்த செயற்கை இனிப்புகளை ஏன் உட்கொள்ள வேண்டும் என்பதற்கு எவ்வித காரணமும் இல்லை. இவை ஒரு சர்க்கரை மாற்று மட்டும் தான். அதனால் நிச்சயமாக இதனை தவிர்க்க முடியும். சர்க்கரையை சாப்பிட வேண்டாம் என்ற எண்ணம் உள்ளவர்கள், அதற்கு மாற்றாக இருக்கும் வேறு  இயற்கை இனிப்புகளை எடுத்துக் கொள்ளலாம். அதை விடுத்து, செயற்கை இனிப்புகளை உங்கள் உணவு முறையில் இணைத்து, உடல் பாதிப்புகளை நீங்களாகவே வரவழைத்துக் கொள்ள வேண்டாம்.