சென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது

சென்னையில் 50 வருடங்களுக்கு மேலாக திரைப்படங்கள் வாயிலாக ரசிகர்களை மகிழ்வித்து வந்த அகஸ்தியா திரையரங்கம் பொருளாதார பற்றாக்குறை காரணமாக செப்டம்பர் 1, 2020 முதல் மூடப்படுகிறது.

சென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது

வட சென்னை தண்டையார்பேட்டையில் அமைந்தது அகஸ்தியா திரையரங்கம். இந்த  திரையரங்கம் 1967ம் ஆண்டு துவங்கப்பட்டது.  

70mm ம்ஸ்க்ரீன் கொண்ட ஒரு திரையரங்கம் இதுவாகும். திரையரங்கில் 1004 இருக்கைகள் உள்ளன. மேலும் இத்தனை இருக்கைகள் கொண்ட ஏசி இல்லா ஒரே திரையரங்கம் இது. இந்தத் திரையரங்கின் முன் ஒரு அழகிய பூங்கா இருக்கிறது. மேலும் இத்திரையரங்கத்தின் வாகனம் நிறுத்துமிடம் மிகவும் பெரியது.

இங்கு திரையிடப்பட்ட  முதல் படம்” பாமா விஜயம்”. இந்தத் திரைப்படம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த திரைப்படத்தில் முத்துராமன், நாகேஷ், சௌகார் ஜானகி ஆகியோர் நடித்திருந்தனர். 

எம்ஜிஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் நடித்த பல படங்கள் இந்த திரையரங்கில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. எம்ஜிஆரின் “ உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படம் 300 நாட்கள் ஓடி பெரிய சாதனையை படைத்தது.  சிவந்த மண், சொர்க்கம் போன்ற படங்கள் இந்த  வெற்றி பட்டியலில் சேர்ந்தவையாகும். 

ரஜினிகாந்த், கமலஹாசன் போன்ற அடுத்த தலைமுறை நடிகர்களின் வெற்றி படங்களான அபூர்வ ராகங்கள்,  பைரவி,  படிக்காதவன்,  விக்ரம் போன்ற திரைப்படங்கள் வசூலை அள்ளித் தந்தன. குஷி, கில்லி, கத்தி, காக்க காக்க, கைதி  போன்ற படங்களையும் இந்த திரையரங்கில் ரசிகர்கள் கண்டுகளித்தனர். 

மெட்ரோ ரயில் சேவைக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திரையரங்கிற்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று காரணமாக திரையரங்கம் அடைக்கபட்டதால்,  வருவாய் இழப்பு காரணமாக இந்த திரையரங்கம் மூடப்படுவதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.