இரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை

இரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கையை உயர்த்த இயற்கை உணவுகள்

இரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை

இரத்தத்தில் உள்ள பிளேட்லெட் என்று சொல்லப்படும் நுண் தட்டுகள் குறைவது என்பது உடலை அச்சுறுத்தக்கூடிய ஒரு செயலாகும். குறிப்பிட்ட அளவில் இருந்து குறையும் இதன் எண்ணிக்கை பல கிருமிகளின் தாக்குதலால் ஏற்பட கூடியது.  டெங்கு  நோய் தாக்குதலால் கூட நுண் தட்டுக்கள் குறையும் வாய்ப்புகள் உள்ளது. சிக்கென்பாக்ஸ் என்னும் சின்னம்மை, ரூபெல்லா, மம்ப்ஸ் போன்ற வைரஸ் தாக்குதலாலும் இரத்தத்தில் நுண்தட்டுகள்  எண்ணிக்கை குறையலாம்.

பிளேட்லெட்டின் எண்ணிக்கை :
ஆரோக்கியமான மற்றும் சராசரியான நுண்தட்டுக்கள் எண்ணிக்கை ஒரு மைக்ரோ லிட்டருக்கு 150,000 - 450,000 இருக்கும். குறைந்தபட்ச அளவில் இருந்து ஒரு சிறு துளி குறைந்தாலும் அதனை உடனே அதிகப்படுத்த வேண்டும். இதற்கான காரணத்தை அறிந்து களைய முற்படாமல் இருந்தால் தொடர்ச்சியான இரத்தப்போக்கு ஏற்பட்டு, நிலைமை விபரீதமாகலாம். நுண்தட்டுகள் குறையும்போது இயற்கையான உணவு முறையால் அதனை அதிகப்படுத்தலாம். அவற்றை பற்றிய விளக்கம் தான் இந்த தொகுப்பு.

பப்பாளி இலை சாறு:
பப்பாளி இலையின் சாறு இரத்த நுண்தட்டுக்கள் அதிகரிக்க சிறந்த மருந்தாக பார்க்கப்படுகிறது. பப்பாளி இலையை அரைத்து அதன் சாறை எடுத்துக் கொள்ளவும். ஒரு நாளில் இரண்டு முறை 2 டேபிள்ஸ்பூன் அளவு பப்பாளி சாறை குடித்து வரவும். இதனால் நிச்சயம் உங்கள் பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கீரைகள் :
நுண்தட்டுகள் குறைவாக இருப்பவருக்கு வைட்டமின் கே பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு ஆய்வில் இரத்த நுண் தட்டுகள் குறைவாக இருப்பவர்களுக்கு வைட்டமின் கே கொடுத்ததில் 27% நல்ல முன்னேற்றம் கண்டதாகவும் 8% போதுமான அளவு நுண் தட்டுகள் கிடைக்கப்பெற்றதாகவும் குறிப்பிடப்படுகிறது. இரத்தம் உறைதலை ஏற்படுத்துவதால், இரத்தப்போக்கு தடுக்கப்படுகிறது. நுண்தட்டுகள் குறையும்போது இரத்தப்போக்கிற்கு அதிக வாய்ப்பிருப்பதால், வைட்டமின் கே அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்வது நல்லது.
நூல்கோலின் இலைகள் , பரட்டை கீரை போன்றவை வைட்டமின் கே அதிகம் உள்ள உணவுகள். கீரை வகையில் ½ கப் எடுத்துக் கொள்ளும்போது 444மைக்ரோ கிராம் அளவு வைட்டமின் கே அதில் உள்ளது. 

வைட்டமின் சி :
தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவு வைட்டமின் சி எடுத்துக் கொள்வது பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரிக்க நல்ல தீர்வாகும். ஆரஞ்சு , எலுமிச்சை, தக்காளி, கீரை, குடை மிளகாய் போன்றவற்றில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது. பிளேட்லெட் புரதத்தை அழிக்கும் ப்ரீ ரேடிக்கல்களை இந்த வைட்டமின் சியில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் அழிக்கின்றன. வைட்டமின் சி எடுத்துக்கொள்ளும் 35% மக்கள் நுண்தட்டுகள் அளவு அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர். 10% போதுமான அளவு பெற்றதாக கூறுகின்றனர்.

வைட்டமின் பி12 :
வைட்டமின் பி12 அதிகம் இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வதால் பிளேட்லெட் எணிக்கை அதிகமாகிறது. மட்டி மீனில் வைட்டமின் பி12 அதிகமாக உள்ளது. சால்மன், கோழி இறைச்சி, முட்டை, பால், வலுவூட்டப்பட்ட தானியங்கள் போன்றவற்றிலும் வைட்டமின் பி12 அதிகமாக காணப்படுகிறது.

நெல்லிக்காய்:
வைட்டமின் சி அதிகமாக இருக்கும் நெல்லிக்காய் ஆயுர்வேத முறைப்படி ஒரு சிறந்த தீர்வாக உணரப்படுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்க நெல்லிக்காய் உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் 3 அல்லது 4 நெல்லிக்காய் சாப்பிடலாம் அல்லது ஒரு நாளைக்கு மூன்று முறை 2 டேபிள்ஸ்பூன் அளவு நெல்லிக்காய் சாறை தேனுடன் சேர்த்து  பருகலாம்.

வைட்டமின் டி :
பிளேட்லெட் உற்பத்திக்கு பொறுப்பேற்கும் முதுகு தண்டில் இருக்கும் சில ஸ்டெம் செல்களின் ஆரோக்கியமான செயல்பாடுகளுக்கு வைட்டமின் டி  தேவைப்படுகிறது. சூரிய வெளிச்சம் படும்போது உடல் தானாகவே வைட்டமின் டி யை உற்பத்தி செய்கிறது. மற்றும் கொழுப்பு மீன்கள், முட்டையின் மஞ்சள் கரு, பால், ஜூஸ், தானியங்கள் போன்றவற்றில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது. இரத்த நுண் தட்டுகள் குறைவதை எளிதாக எடுத்துக் கொள்ளாமல் உடனே அதனை அதிகரிக்கும் வழிகளை அறிந்து அதிகரிப்பதே உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.