முதல் உதவியின்போது செய்யும் தவறுகள் 

வீட்டிலோ வெளி இடத்திலோ சின்ன சின்ன விபத்துகள் ஏற்படும்போது உடனடியாக வலிக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் நாம் சில முதல் உதவிகளை மேற்கொள்கிறோம்.  முதல் உதவி செய்யும்போது பொதுவாக சில தவறுகளை நாம் தவறு என்று உணராமலே செய்து  வருகிறோம்.

முதல் உதவியின்போது செய்யும் தவறுகள் 

சில செயல்களை  காலம்காலமாக பின்பற்றி வருவதால் இத்தகைய தவறுகள் ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவரின் நிலைமை இன்னும் மோசமாகிறது.  இதனை அறிந்து நாம் மாற்ற முயற்சிப்பதால் சிறந்த முதல் உதவியை நம்மால் பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்க முடியும். 

ஐஸ் பேக் :
ஐஸ் கட்டிகளை நேரடியாக உடலில் வைக்கக்கூடாது. இதனால் cold burn எனப்படும் ஒரு வித எரிச்சல் உண்டாகும். ஐஸை ஒரு துணியில் வைத்து அந்த துணியை நமது உடலில் வைத்து ஒத்தி எடுப்பதே சரியான முறையாகும்.

கண்களில் தூசு :
கண்களில் தூசு படிந்தால் அதனை நமது கை  விரல் கொண்டு எடுக்க கூடாது. தெரியாமல் ஆட்டிவிட்டாலோ அல்லது நடுக்கத்தினாலோ கண்களை கீறும் அபாயம் இருப்பதால் கண்களை நீரில் கழுவிட்டு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

ஆல்கஹால் :
காய்ச்சலின்போது உடல் வெப்பத்தை குறைக்க சிலர் ஆல்கஹால்  அல்லது வினிகர் போன்றவற்றை சருமத்தில் தடவுவர். இது முற்றிலும் தவறு. இப்படி தடவும் போது அவை சருமத்தை ஊடுருவி இரத்தத்தில் கலக்கும். ஆல்கஹால் உடலில் நச்சு தன்மையை ஏற்படுத்தும். வினிகர் அசிடிட்டியை ஏற்படுத்தும். காய்ச்சலின் போது மருத்துவரிடம் சென்று தீர்வு  காண்பதே சிறந்ததாகும்.
 
ஆயின்மென்ட் :
காயங்கள் ஏற்பட்டவுடன் எதாவது ஒரு ஆயின்மென்ட் தடவுவது தவறாகும். இதனை செய்வதால் ஈரப்பதம் அதிகரிக்கும். காயத்திற்குள்  செல்லும் காற்றோட்டத்தை இந்த ஆயின்மென்ட் தடை செய்யும் . இதற்கு மாற்றாக காயத்தை நன்றாக கழுவி ஒரு பேண்ட் எயிட் போடுவது நல்லது.
தீக்காயத்தின் மேல் பட்டர் தடவுதல்:
தீக்காயங்கள் ஏற்பட்டவுடன்  வெண்ணெய்யை தடவுவதால் ஒரு குளிர்ச்சி ஏற்படும். இது அந்த நேரம் இதமாக இருக்கலாம். ஆனால் அது தவறான செய்கையாகும். காயத்தின் மீது தடவிய  வெண்ணெய் காய்ந்தவுடன் காயத்தின் மீது  ஒரு படிவத்தை உருவாக்கும். இது சருமத்தின் துளைகளை அடைத்து சருமம் சூடாக உணரச்செய்யும். இதற்கு மாற்றாக , தீ காயங்கள் ஏற்பட்டவுடன் , காயம் ஏற்பட்ட இடத்தை குழாய் நீரில் நன்றாக  கழுவுவது நல்லது . இது நல்ல பலனை தரும். பின்பு மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாம். 

மயக்கம்:
யாரவது மயங்கி விழுந்தால் உடனே அவர் முகத்தில் தண்ணீர் தெளிப்பது தவறான செயல். மயங்கிய நிலையில் இருப்பவருக்கு காபீ  அல்லது காஃபின்  கலந்த பானங்களை கொடுப்பது தவறானது. மயங்கி விழுந்தவுடன் அவரை தூங்குவதும் கூட தவறானது. உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். 
மேலே கூறிய முறைகளை பின்பற்றி முதலுதவிகளை மேற்கொள்வோம்.