இரத்தத்தை சுத்தம் செய்யும் உணவுகள்

உடல் இயங்குவதற்கு இரத்தத்தின் தேவை மிக முக்கியமான ஒன்றாகும்.

இரத்தத்தை சுத்தம் செய்யும் உணவுகள்

நமது தமிழ் மொழியில் உடன்பிறந்தவர்களை இரத்த சம்மந்தம் உள்ளவர்கள் என்று பேச்சு வழக்கில் கூறுவார்கள். “அதே இரத்தம் , அப்படிதான்  இருக்கும்!” என்று சூப்பர் ஸ்டார் அவர்கள் “கோச்சடையான் “ திரைப்படத்தில் ஒரு வசனம் பேசுவார் . அந்த அளவுக்கு  இரத்தம்  என்பது உயிரை குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது. 

ஆக்சிஜென் மற்றும் ஊட்டச்சத்துகளை உடல் முழுதும் கொண்டு செல்ல இரத்தம் உதவுகிறது. போதுமான இரும்பு சத்தை கொண்டு ஹீமோகுளோபின் அளவை அதிகமாக கொண்டுள்ள இரத்தம் ஆரோக்கியமானது என்று அறியப்படுகிறது. இரத்தம் தூய்மையாக இருக்க சமச்சீரான இரத்த சர்க்கரை , லிப்பிட், மினெரல் போன்றவை இருக்க வேண்டும். சிறுநீரகம், கல்லீரல் போன்றவை நச்சுக்களை வெளியேற்றி இரத்ததை சுத்தீகரிக்க உதவுகின்றன. 

இயற்கையான முறையில் இரத்தத்தை சுத்தம் செய்வதற்கான வழிகளை இந்த பதிவில் பார்ப்போம்.

வெல்லம் :
இந்தியாவின் பிரபல இனிப்பு வகையில் ஒன்று வெல்லம். இது சுத்தீகரிக்கப்படாத பழுப்பு நிற சர்க்கரை ஆகும். இரத்தத்தை தூய்மையாக்க இது பெரிதும் உதவுகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமான மண்டலத்தை தூய்மையாக்கி, மலச்சிக்கலை தீர்த்து, உடலில் இருந்து கழிவுகள் வெளியேற்ற படுகிறது. இரும்பு சத்து அதிகம் இருப்பதால் , ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. குழந்தை பிறப்பிற்கு பின்னர், வயிற்றில் தங்கியிருக்கும் அழுக்குகளையும், உறைந்த இரத்தத்தையும் வெளியேற்ற வெல்லம் பெரிதும் உதவுகிறது.

மஞ்சள்:
அழற்சி மற்றும் வீக்கத்தை போக்கும் தன்மை இயற்கையாகவே அமைந்த ஒரு பொருள் மஞ்சள். கல்லீரல் தொந்தரவை போக்கி அதனை சீராக இயங்க வைக்கும். இரத்த சுத்தீகரிப்புக்கு தேவையான முக்கியமான உடல் பாகங்கள் கல்லீரலும், சிறுநீரகமும் .
மஞ்சளுடன் பால் சேர்த்து  பருகும்போது கல்லீரல் தூய்மை அடைகிறது. மஞ்சள் கலந்த பாலுடன், சிறிது மிளகு, ஏலக்காய், பட்டை, கிராம்பு, இஞ்சி போன்றவற்றை சேர்த்து பருகினால் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும் . இந்த பால் ஆரோக்கியத்தை காக்கும் ஒரு டானிக் போல் செயல்படுகிறது.

பழங்கள்:
பெக்டின் அதிகம் உள்ள ஆப்பிள், கொய்யா, பிளம், பேரிக்காய் போன்றவை உடலில் இருந்து நச்சுக்களை விரட்டுகிறது. அதிக அளவு கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. இவற்றில் இருக்கும் நார்ச்சத்து கொழுப்பை கரைக்க உதவுகின்றன. லைகோபீன் மற்றும் க்ளுட்டத்தியோன், உடலில் உள்ள கழிவு மற்றும் ரசாயனத்தை வெளியேற்றுகிறது.

இலைகளையுடைய பச்சை காய்கறிகள்:
பச்சை காய்கறிகளில் மிகவும் அதிகமான ஊட்டச்சத்துகள்  உள்ளன. சிவப்பு இரத்த அணுக்களுக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகளை அழிக்க இந்த காய்கறிகளில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்டுகள் உதவுகின்றன. தீய கூறுகள் உடலில் இருந்து வெளியேற்றப்பட்டதால் இரத்தத்தில் புதிய அணுக்கள் உற்பத்தியாகிறது. 

தண்ணீர்:
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் என்பதற்கு இணங்க , இரத்தத்தை சுத்தமாக்க உதவும் சரியான ஒரு கிளென்சர் , தண்ணீர். உடல் அதிக நீர்ச்சத்துடன் இருப்பதால், நாம் உண்ணும் உணவுகள், நார்ச்சத்து , மினரல்கள் போன்றவற்றின் உதவியால், சிறுநீரகம் கழிவுகளை வெளியேற்ற முடிகிறது. 
நச்சுக்களை வெளியேற்றி உடல் நலமுடன் இருக்க தண்ணீர் மிகவும் முக்கியம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. வெதுவெதுப்பான நீரை ஒரு தாமிர பாத்திரத்தில் வைத்து விட்டு. காலையில் எழுந்தவுடன் அந்த நீரை பருகுவதால் இரத்தம் சுத்தம் செய்ய படுகிறது. தாமிரம், கல்லீரலை குளிர்ச்சியடைய வைக்கிறது. தண்ணீர் கழிவுகளை வெளியேற்றுகிறது.

இரத்தம் சுத்தமாக இருப்பதால் உடலின் இயக்கம் சீராக இருக்கும். இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். நாம் இளமையாக உணருவோம்.