மானசாரம் - தேரின் சிறப்புகளை எடுத்துரைக்கும் நூல்

மானசார நூலின் சிறப்பிற்கு தேரே சான்றாகும். இது போன்ற தமிழனின் படைப்புகளை நாம் பாதுகாப்பதன் மூலம் நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் காக்க முடியும். 

மானசாரம் - தேரின் சிறப்புகளை எடுத்துரைக்கும் நூல்
created to wikipedia
மானசாரம் - தேரின் சிறப்புகளை எடுத்துரைக்கும் நூல்

மானசாரம் இவ்வளவு சிறப்புடையதா! 

தேர் என்பது கடவுளை ஊர்வலம் எடுத்து செல்ல பயன்படுத்தும் வண்டியாகும். கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட முடியாதவர்களாக இருக்கும் முதியோர்கள் மற்றும் நோயாளிகள் போன்றவர்க்கு இறைவனை காண முடியவில்லையே என்ற ஏக்கத்தை போக்கவும், அனைவருக்குமே இறைவனின் அருள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும்  இந்த தேரோட்ட திருவிழா கொண்டாடப்படுகிறது என்று கூறுகின்றனர். தேர் என்று சொன்னாலே திருவாரூர் என்று சொல்லும் அளவுக்கு ஒரு ஊரையே பெருமைபடுத்திய சிறப்பு ஆழித்தேருக்கு உண்டு.

தேரின் வடிவமைப்பு:

மயமதம்-மானசாரம் போன்ற நூல்களில் தேரை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தேர் செய்வதற்கு இலுப்பை, தேக்கு, மருது, கோங்கு, வேங்கை ஆகிய மரங்கள் பயன்படுகின்றன.  சதுரம், அறுகோணம், பதின்கோணம், பன்னிருகோணம், வட்டம், நீள்வட்டம், நீள்சதுரம், எண்கோணம், முட்டைவடிவம் என 9 வடிவங்களில் தேர் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த நூல்களில் உள்ளபடி தான் தேரை வடிவமைப்பார்கள். கோயிலுக்கு அமைக்கப்பட வேண்டிய அனைத்து அங்கங்களும் இந்த தேரில் அமைக்கப்பட்டு விளங்குவதால் இதை நகரும் கோயில் என்றும் கூறுவார்கள். தேரின் அமைப்பைப் பொருத்தவரை அது கோவில் விமானத்தின் அமைப்பைப் பிரதிபலிப்பதாக அமைகிறது. தேரானது நான்கு நிலைகளையும் பூதப்பார், சிறுஉறுதலம், பெரிய உறுதல், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசனம் பீடம் என ஏழு அடுக்குகளைக் கொண்டுள்ளது. தேரின் முன்புறத்தில் நான்கு பெரிய வடம் பிடிக்கும் கயிறுகள் மற்றும் தேரின் மேல் புறத்தில் 1மீட்டர் உயரத்திலான கலசமும், அடியில் 4 சக்கரங்களும் பொருத்தப்பட்டிருக்கும்.

தேரில் இடம் பெற்றுள்ள உருவங்கள்:

மயமதம் -மானசாரம் எனும் சிற்ப நூல்களில் தேரை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்பதை மட்டுமல்ல ஒவ்வொரு நிலைக்கும் எந்தெந்த சிற்பங்கள் இடம்பெற வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளது. இதில் உள்ள முறைப்படி தான் தேரில் உருவங்களை செதுக்குவார்கள். சிங்கம், யானை, முதலை, பூதகணம், யட்சி, நாகம், பிரம்மா, விஷ்ணு, சண்முகர், சரஸ்வதி, கணபதி, துர்க்கை, தேவதைகள், சிறு தெய்வங்கள், அரசன், அர்ச்சகர்கள், பிராமணர், பக்தர்கள், துவாரபாலகர், நாகர், கருடன் ஆகியவை தேரில் அமைய வேண்டும் என மானசாரம் எனும் நூல் கூறுகிறது. தமிழகத்துத் தேர்களில் முக்கியத் தட்டுகளில் உள்ள சிற்பங்கள் எட்டு அங்குலம் முதல் இரண்டரை அடி உயரம் கொண்டதாக அமைந்திருக்கும். மிக சிறிய அளவில் உள்ள சிற்பங்கள் ஆறு அங்குலம் உயரம் கொண்டனவாக இருக்கும். தேரின் பாதுகாவலர்களாகக் கருதப்படும் கணபதி, முருகன், பூத கணங்கள் ஆகியோரின் உருவங்கள் அச்சுப்பகுதியில் இடம்பெற்றிருக்கும். இந்து சமயமான சைவ மற்றும் வைணவப் புராணக் கதைகளும் , மக்களின் வாழ்க்கை முறைகளைச் சித்திரிக்கும் சிற்பங்களும் தேரின் அதிட்டானப் பகுதிகளில் செதுக்கப்பட்டிருக்கும். நாட்டியப் பெண்கள், இசைக் கருவிகளை மீட்டுவோர், அட்டதிக் பாலகர்கள், கஜலட்சுமி போன்ற உருவங்கள் தேரின் பீடத்தில் இடம்பெற்றிருக்கும். 

முன்பெல்லாம் பெரிய தேர்கள் நிலைக்கு வந்து சேர 3லிருந்து 5 நாட்கள் ஆகிவிடும். ஆனால் இப்போது இயந்திரத்தின் உதவியுடனும், சக்கரங்கள் மரத்திற்குப் பதிலாக இரும்பில் செய்யப்படுவதாலும், புல்டோசர் பயன்படுத்தப்படுவதாலும் தேர்கள் ஒரே நாளில் நிலைக்கு வந்து விடுகின்றன. மானசார நூலின் சிறப்பிற்கு தேரே சான்றாகும். இது போன்ற தமிழனின் படைப்புகளை நாம் பாதுகாப்பதன் மூலம் நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் காக்க முடியும்.