கோயில் மணியின் முக்கியத்துவம் 

இறைவனின் கருவறையை நெருங்கும்போது அங்கிருக்கும் மணியை அடிப்பது எல்லோரின் வழக்கம். இதற்குக் காரணம் உங்கள் வருகையை கடவுளுக்கு உரைப்பதாகும்

கோயில் மணியின் முக்கியத்துவம் 

இந்து மதத்தில், பல தெய்வங்கள் உள்ளன, பல நம்பிக்கைகளும், பல சடங்குகளும் உள்ளன, ஒவ்வொன்றும் வித்தியாசமானவை, ஒவ்வொரு சடங்கு மற்றும் நம்பிக்கைக்கு வெவ்வேறு அர்த்தங்கள் உண்டு.  ஆனால் ஒரு பொதுவான நோக்கம், பரம்பொருளை அடைவது மட்டும் தான். வேற்றுமையில் ஒற்றுமை என்று கூட இதனை சொல்லலாம். இதுவே இந்த மதத்தின் அழகு என்றும் கூறலாம். கடவுளை அடைய பல்வேறு வழிகள் இருந்தாலும், கடவுளை அடைவது என்ற ஒன்று மட்டுமே அனைவரின் குறிக்கோள் ஆகும்.

நெற்றியில் அணியும் குங்குமம், கைகளில் மற்றும் கழுத்தில் அணியும் கடவுளின் புனித கயிறு போன்றவை அதனை அணிந்திருப்பவர் மனதில் ஆன்மீக உணர்வை அதிகரிக்க உதவுகிறது. சங்கில் இருந்து எழும்பும் ஒலி , கோயில் மணியில் இருந்து எழும்பும் ஓசை, சமஸ்க்ருத மந்திரங்களில் இருந்து வரும் சக்தி போன்றவை கோயிலை சுற்றியுள்ள இடங்களை இன்னும் அழகாக மாற்றுகிறது. மேலும் மனிதர் மனதில் நேர்மறை அதிர்வுகளை உண்டாக்குகிறது. இந்த ஓசைகள், இறைவன் நம்முடன் இருக்கிறார் என்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்துகிறது. இறைவன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று சொல்வது உண்மை என்று சில நேரம் நம்மை உணர வைக்கும் அறிகுறிகளாக இவை உள்ளதை நாம் உணரலாம்.

இந்து மதத்தில் புனிதமாக கருதப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் , பின்பற்றப்படும் ஒவ்வொரு சடங்குக்கும் ஒரு காரணம் உண்டு. உதாரணத்திற்கு நெற்றியில் வைக்கும் சந்தன பொட்டு , மனதிற்கு அமைதியை தருகிறது. சங்கில் இருந்து வெளிப்படும் ஒலி , நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. மற்றும் சங்கு இருக்கும் இடத்தில் அமைதி நிலவுகிறது. இதே போல், கோயில்களில் பயன்படுத்தப்படும் மணியும் சில காரணத்திற்காகவே பயன்பாட்டில் உள்ளது. இந்த காரணங்களைப் பற்றி தான் நாம் இன்று தெரிந்துக் கொள்ளப் போகிறோம். 

மணி என்பது கோயில்களில் மட்டும் காணப்படுவதில்லை. இந்து மதத்தினர் வீடுகளிலும் பூஜை அறையில் மணி வைத்திருப்பார்கள். கடவுளுக்கான பூஜையிலும் எந்த ஒரு சடங்கிலும் மணியோசை இல்லாமல் இருக்காது. இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறும்போதும், ஆரத்தி எடுக்கும் நேரம் மற்றும் பூஜையின் முடிவில் மணி அடிப்பது ஒரு கட்டாய நடைமுறையாகும். 

கோயிலில்  இருக்கும் மணிகள், கட்மியம், ஜின்க், குரோமியம், நிக்கல், மற்றும் மக்னீசியம் போன்ற உலோகங்களால் ஆனது. கோயிலுக்குள் இறைவனை வணங்க உள்ளே நுழையும்போது , ஒரு நபருக்கு முழு ஆற்றல், உற்சாகம் போன்றவை இருக்க வேண்டும். அவர் இறைவனைப் பற்றி பாடிக்கொண்டே உள்ள நுழைய வேண்டும். கோயிலை விட்டு வெளியில் செல்லும்போது மென்மையாக மன அமைதியுடன் செல்ல வேண்டும். கோயிலில் இருந்து வெளிப்படும் மணியோசை ஒரு நபருக்கு உற்சாகத்தை கொடுக்கிறது . இது மட்டும் அல்ல, இன்னும் பல்வேறு அறவியல் காரணங்களும் உண்டு, வாருங்கள் அவற்றை இப்போது பார்க்கலாம். 

நாம் கடவுளின் கருவறையின் வாயிலில் இருப்பதால், கவனச் சிதறல் இல்லாமல், மனதில் கடவுளை மட்டும் நினைக்க வேண்டும் என்பதை மனதிற்கு உணர்த்தும் ஒரு அறிகுறியாகவும் இந்த மணியோசை பார்க்கப்படுகிறது.

கடவுளின் கர்ப்பக்ருகத்தில் கட்டப்பட்டிருக்கும் மணியில் இருந்து வரும் ஓசையும்  "ஓம் " என்ற மந்திரத்தில் இருந்து எழும்பும் ஓசையும் ஒன்றாக இருக்கும் என்று அறியப்படுகிறது. இந்த ஓசை வரும் இடத்தை சுற்றி நேர்மறை அதிர்வுகள் மற்றும் நேர்மறை ஆற்றல்  அதிகமாக இருக்கும். இந்த பிரபஞ்சம் தொடங்கும்போது, இந்த ஒலி உருவானது என்று நம்பப்படுகிறது. இந்த முழு பிரபஞ்சமும் ஒரு முடிவிற்கு வரும்போதும், இதே ஒலியுடன் இருக்கும் என்றும் அறியப்படுகிறது. ஆகவே இந்த மணியோசை, கணக்கிடமுடியாத காலத்தின் சின்னம் என்று அறியப்படுகிறது.

ஒரு மணி ஒலிக்கும்போது, வளிமண்டலத்தில் சில அலைகள் உருவாகின்றது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த அலைகள் நீண்ட தூரம் பயணிப்பதால், காற்றில் உள்ள நுண்கிருமிகள் மற்றும் நுண்ணுயிர்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுசுழல் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் மாறுகிறது.

சுற்றுச்சூழலில் ஒரு புனிதத்தன்மையை தருவது இந்த மணியோசை என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. வீடுகளில் கேட்கும் மணியோசையால் கெட்ட சக்திகள் மற்றும் எதிர்மறை சக்திகள் விலகி, சுற்றிலும் நேர்மறை ஆற்றலைத்  தருகிறது. குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு மத்தியில் வீண் விவாதங்கள் மற்றும் சண்டையை குறைக்கிறது இந்த மணியோசை. 

மூளையின் வலது மற்றும் இடது பாகங்களை சமநிலையில் வைக்க இந்த மணியோசை உதவுகிறது. ஒரு முறை அடிக்கும் மணியின் ஓசை பத்து வினாடிகள் நமது காதுகளில் நிலைத்து நிற்கிறது. இந்த ஓசை, உடலின் 7 சக்கரங்களையும் ஊக்குவிகிறது. மன அமைதியை தருகிறது. கவனத்தை அதிகரிக்கிறது.

இப்படியாக, கோயில் மணியில் இருந்து வெளிப்படும் ஓசை, மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகிய மூன்றிற்கும் ஆற்றலைத் தருகிறது .கோயில் மணியை சுற்றிலும் நேர்மறை ஆற்றல் நிறைந்திருப்பதால் மட்டுமே, கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.