மாணிக்கவாசகர் வரலாறு

சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் வாழ்க்கையில் நடந்தவற்றை பற்றி இக்கட்டுரையில் காணலாம் வாருங்கள்

மாணிக்கவாசகர் வரலாறு

மாணிக்கவாசகர் வரலாறு 

மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர் ஆவார். இவர் எழுதிய பாடல்கள் மூலம் இவர் காலம் கி.பி 9ஆம் நூற்றாண்டாக இருக்கும் என்று தெரிகிறது. மாணிக்கவாசகர் வாழ்க்கையில் நடந்தவற்றை பற்றி இக்கட்டுரையில் காணலாம் வாருங்கள்

இளமைப்பருவம்:

மாணிக்கவாசகர்  பாண்டிய நாட்டில் வைகை ஆற்றங்கரையில் அமைந்த திருவாதவூரில் அந்தணரான சம்பு பாதசாரியாருக்கும், சிவஞானவதியாருக்கும் மகனாக பிறந்தார். இவரின் இயற்பெயர் வாதவூரார் என்பதாகும். இறைவன் திருவருளால் அவதரித்ததால் 16 வயது நிரம்புவதற்கு முன்பே அனைத்து கலைகளையும் கற்றார். இவரின் ஆற்றலை அறிந்த  அரிமர்த்தன பாண்டிய அரசன் தன் அமைச்சரவையில் இவரை முதலமைச்சராக ஆக்கினார். அமைச்சர் தொழிலை செவ்வனே ஆற்றினார். மன்னனிடம் “தென்னவன் பிரம்மராயன்” என்னும் பட்டம் பெற்றார். உலகத்தில் உள்ள இன்பங்கள் அனைத்தும் நிலையற்றது என்று உணர்ந்த வாதவூரார் ஆன்மீகத்தின் மீது மிகுந்த  ஈடுபாடுக் கொண்டு இருந்தார்.

சிவனின் சிஷ்யன் ஆனார்:

அரிமர்த்தன பாண்டிய மன்னன் சோழ நாட்டில் நல்ல குதிரை கிடைக்கிறது என்று கேள்விப்பட்டான். அதனால் வாதவூராரை அழைத்து எவ்வளவு பொருள் வேண்டுமோ அவ்வளவு பொருளை எடுத்துக் கொண்டு குதிரைகள் வாங்கி வருமாறு ஆணையிட்டார்.

அரசர் விரும்பியபடி கருவூலத்திலிருந்து பெரும் பொருள் எடுத்துக் கொண்டு குதிரை வாங்க கீழக்கடற்கரைக்கு சிலருடன் சென்றார். செல்லும் வழியில் சிவ முழக்கம் அவர் காதில் விழ முழக்கத்தின் வழியே சென்றார். இப்போது ஆவுடையார் கோயில் என்று வழங்கும் திருப்பெருந்துறையின் உள்ள மரத்தடியில் அடைந்தார். அங்கு இவரை ஆட்கொள்ளும் பொருட்டு சிவபெருமான் ஞானகுருவாய் 999 மாணவர் புடை சூழ அமர்ந்து இருந்தார். ஆசானாக சிவனை கண்டதும் அவரின் திருவடியில் விழுந்து வணங்கினர். தன்னை மறந்து அந்த மாணவர் கூட்டத்தில் அவரும் அமர்ந்து சிவபெருமானின் உபதேசங்களை கேட்டார். சிவபெருமானும் ஐந்தெழுத்தான 'நமச்சிவாய' என்னும் நற்றமிழ் மறையினை உபதேசித்தருளினார். இதுவே சிவபெருமானின் திருப்பெயருமாகும். ஆண்டவன் உபதேசித்தருளிய முதல் மந்திரம் நமச்சிவாய ஆகும். மாணிக்கவாசகர் உபதேசம் பெற்றதும் இறைப்பணியில் தன்னை இணைத்துக் கொண்டார். 

மாணிக்கவாசகரான கதை:

ஐந்தெழுத்தின் உண்மையினை திருவருளால் தெளிந்துணர்ந்த பின் தனித்தமிழ் மந்திரம் எனப்படும் திருவாசக பாடலை நமச்சிவாய வாழ்க என தொடங்கி பாடினார். இதை கேட்ட சிவபெருமான் இந்த பாடல்களில் உள்ள வார்த்தைகள் மாணிக்கம் போல் ஜொலிக்கிறது. அதனால் இன்று முதல் நீ 'மாணிக்கவாசகர்' என்னும் திருப்பெயரால் அழைக்கப்படுவாய் என்று கூறி மறைந்தார். மாணிக்கவாசகரும் இறைபணியாகிய தொண்டில் ஈடுபட்டு ஆண்டவனின் ஆணைப்படி உடன் கொண்டு வந்த பொருளை அனைத்தையும் செலவு செய்து திருப்பெருந்துறையில்  சிறந்த சிவன் கோயிலை கட்டினார். எஞ்சிய பொருளை சிவனடியார்களுக்கு செலவு செய்தார்.

நரியை பரியாக்கிய சிவபெருமான்:

இதனை கேள்விபட்ட பாண்டிய அரசன். மாணிக்கவாசகரை பாண்டியில் நாட்டிற்கு வரும்படி ஆணையிட்டார். அவரும் பாண்டிய நாட்டிற்கு வந்து சேர,அவரிடம் குதிரை எங்கே என்று கேட்டார் அரிமர்த்தன பாண்டியன். அதற்கு பதில் அளிக்காததால் பணத்தை தரும்படி கேட்டான். என்ன செய்வது என்று அறியாமல் நின்ற மாணிக்கவாசகர் இறைவனிடம் தன்னை காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டார். ஆண்டவர் அவரிடத்தில் ஆவணி மூலத்தில் (பரி)குதிரை வந்து சேரும் என்று கூறுவாயாக என்று சொன்னார். அவ்வாறே மாணிக்கவாசகர் குதிரைகள் ஆவணி மூலத்தில் வரும் என்று மன்னரிடம் கூறினார். ஒற்றர்கள் மூலம் குதிரைகள் வாங்காத செய்தியை அரசன் உணர்ந்தான். காவலரை கொண்டு மாணிக்கவாசகரை கடுமையாக தண்டித்தான். அவரும் ஆண்டவனிடத்தில் முறையிட்டு வேண்டிக் கொண்டார். சிவபெருமான் ஒரு ஆவணி மூலத்தன்று  நரிகளை குதிரைகளாக கொண்டு வந்து அரசனிடம் ஒப்படைத்து மாணிக்கவாசகரை காப்பாற்றினார். மறுநாள் பரிகள் நரிகளாக மாறி பெரும் துன்பத்தினை விளைவித்தன. தன்னை மாணிக்கவாசகர் ஏமாற்றி விட்டார் என்று மன்னனுக்கு மீண்டும் அவர்மேல் கோபம் வந்தது.

வைகையில் வெள்ளப்பெருக்கு:

மன்னன் கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை மாணிக்கவாசகரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு காவலரிடம் கூறினான். சிவபெருமானும் அடியவரின் துன்பத்தை கண்டு வைகை ஆற்றில் பெரு வெள்ளத்தை ஏற்படுத்தினார். கரையை உடைத்துக்கொண்டு ஆறு பெருக்கெடுக்க  தொடங்கிவிட்டது. இதை கண்ட மன்னன் வீட்டிற்கு ஒரு ஆள் வந்து இந்த கரையை அடைக்க வேண்டும் என்று ஆணையிட்டார். வந்தி என்னும் பிட்டு விற்கும் கிழவியின் வயது மூப்பு காரணமாக சிவபெருமான் அவள் சார்பு கூலி ஆளாய் வந்து சரியாக வேலை செய்யாமல் கால விரயம் சீது கொண்டிருந்தார். அதனால் கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன, ஆனால் வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது. இதனை கண்ட மன்னன் கோபம் கொண்டு கூலியாளைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட அது  சரியாகிவிட்டது. கூலியாள் உருவதில் இருந்த ஆண்டவன் மேல்பட்ட அடி பாண்டிய மன்னன் முதலாக எல்லா உயிர்களும் மேலும் பட்டது. ஆண்டவனும் மறைந்தான்.

அரசனும் உண்மையை உணர்ந்து மாணிக்கவாசகர் திருவடிகள் விழுந்து வணங்கினான். அவரும் மன்னனிடம் விடைபெற்று தல யாத்திரை தொடங்கினார். 

இறைவனிடம் அவரை முழுமையாக அர்ப்பணித்தார்:

பல ஊர்களில் உள்ள கோயில்களுக்கு சென்று பல  பாடல்கள் பாடினார். அவைகள் எழுதப்படாத நிலையில் கடைசியாக தில்லை(சிதம்பரம்) வந்தடைந்தார். அங்கு அந்தணர் ரூபத்தில் வந்த சிவபெருமான் மாணிக்கவாசகரிடம் தங்கள் பாடல்களை நான் எழுதி கொள்கிறேன் என்று கேட்க மாணிக்கவாசகரும் அவருக்காக பாட அதை அந்த அந்தணர் ஏட்டில் முழுவதுமாக எழுதி முடித்ததும், ஓலைச்சுவடியின் முடிவில் 'மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்' என்று கையொப்பமிட்டுத் திருமுறையைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார்.காலையில் திருக்கதவை திறந்தவர்கள் ஏட்டினைக் கண்டு பேரின்பம் கொண்டனர். மாணிக்கவாசகர் பெருமானை அழைத்து அந்த ஏட்டை காட்டி பொருள் விளக்கி அருள வேண்டும் என்றதால் அவரும் திருவருளால் அம்மை அம்பலவாணரே இதன் பொருள் என்று கூறிய  உடனே அருட்பேரொளி ஒன்று தோன்றியது. அந்த ஜோதியில் மாணிக்கவாசகப் பெருமான் இரண்டறக் கலந்து இறைவனடி சேர்ந்தார்.

குரு பூஜை நாள்:

மாணிக்கவாசகர் இறைவனோடு இரண்டறக் கலந்த நாள் ஆனி மாத மகத்திருநாளாகும். இந்த நாளில் அனைத்து சிவாலயங்களிலும் மாணிக்கவாசகரின் குரு பூஜை சிறப்பாக நடைபெறும்.