துர்கா பூஜை

இந்த பத்து நாட்களும் பக்தர்களுக்கு அருள் புரிய பூமியில் வீற்றிருப்பார் தேவி துர்க்கை.

துர்கா பூஜை

துர்கா பூஜை

துர்கா பூஜையை இந்தியாவில்  பல பகுதிகளில் மகிஷாசுரனை வதம் செய்த சக்தியின் வடிவமான துர்கையைப் போற்றும் வகையிலும், பெண்களின் சக்தியை உலகிற்கு உணர்த்தும் வகையிலும் கொண்டாடப்படும்  முக்கிய பண்டிகை இது.தீய சக்தியை நல்ல சக்தி அழித்து வெற்றி பெற்றதற்காகவும், உற்றார், உறவினர்களோடு சேர்ந்து கலாச்சாரத்தையும், பழக்கவழக்கங்களையும்    பேணும் வகையிலும் கொண்டாடப்பட்டுவருகிறது..

துர்கா பூஜையின் விசேஷங்கள்:

 இந்த விழாவின் போது பக்தர்கள் பக்திகரமாக பத்து நாட்களும் விரதமிருந்து வழிபடுவார்கள்.இதில் கடைசி நான்கு நாட்களான சப்தமி ,அஷ்டமி, நவமி மற்றும் விஜயதசமியை இந்தியாவில் பல இடங்களில் முக்கியமாக வங்காளத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்தியாவில் ஒவ்வொரு ஊர்களிலும்  அவரவர்களின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்பவும், கலாச்சாரங்களுக்கு ஏற்பவும்,  ஐந்து நாட்களாவும், ஏழு நாட்களாகவும், முழுமையாக  பத்து நாட்களாகவும், சிலர் ஆறாம் நாளான சஷ்டியில் ஆரம்பித்து பத்தாம் நாளான விஜயதசமி வரை கொண்டாடுவார்கள் .

துர்கா பூஜையின் பின் புலன்:

இமாலய மன்னருக்கும் மேனகாவுக்கு மகளாகப் பிறந்த பார்வதி, சதியாக மாறி சிவபெருமானை திருமணம்  செய்து கொண்டார்.இந்த உலகை தீய சக்தியிடம் இருந்து காப்பாற்ற துர்க்கை ஒன்பது நாட்கள்  சண்டையிட்டு கடைசி பத்தாம் நாள் அன்று கொடிய அரக்கனான மகிஷாசுரனை கொன்று உலகத்தை காப்பாற்றி வெற்றி பெற்றதற்காக இந்த பத்து நாள் விழாவை  அன்னையான துர்க்கையை போற்றும் விதமாக இந்த  தசராப்பண்டிகையை கொண்டாடிவருகிறோம்.நவராத்திரியின் போது தேவி துர்க்கையை ராமர் வழிபட்டதால் துர்க்கையின் அருள் பெற்று ராவணனை அழித்து வெற்றி பெற்றார் என்று கூறப்படுகிறது. அதனால் இந்த பண்டிகை ராமர் காலத்திற்கு முன்பிருந்தே கொண்டாடப்டபட்டிருக்கும் என்று நம்புகின்றனர். சில சமூகத்தினர் முக்கியமாக வங்காளத்தில் இந்த பண்டிகையை பந்தல் போட்டு அலங்காரம் செய்து கொண்டாடுவார்கள். சிலர் இந்த பண்டிகையை அவரவர் வசதிக்கேற்ப ஒன்பது நாளும் வீட்டிலேயே கொண்டாடுவார்கள், கடைசி நாளன்று துர்கை சிலையை புனித கங்கை நதியில் கரைப்பார்கள். கெட்டதை அழித்து நல்லது வென்றதை போற்றும் வகையிலும் மற்றும் வெளிச்சத்தால் இருட்டு அகலும் என்பதற்காகவும் கொண்டாடிவருகிறார்கள்.

துர்கா பூஜையில் செய்யும் சடங்குகள்: 

பக்தர்களின் வேண்டுக்கோளுக்கிணங்கி மகாளய அமாவாசை அன்று பூமிக்கு வந்து பத்து நாட்கள் பக்தர்களுக்கு அருள் புரிவாள் தேவி துர்க்கை. துர்க்கை பூஜையின் முதல் நாள் துர்க்கையின் சிலையை செய்து, அதற்க்கு முதன்முதலில் பிரான் பிரட்டிஸ்தான் என்ற சடங்கை செய்வார்கள் அது என்னவென்றால் வாழைக்கன்றை (வங்காள மணப்பெண்ணாக கருதி) நதி அல்லது ஏரியில் புனித நீராட்டி அதற்கு புடவை கட்டி அலங்கரிப்பர் பிறகு அந்த வாழைக்கன்றை    மஞ்சளால் செய்த விநாயகரின் பக்கத்தில் விநாயகரின் மனைவியாக வைப்பர் . இதனால் புனித தன்மை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை இவ்வாறு பல சடங்குகள் செய்து தேவி துர்க்கையை வழிபடுவார்கள்.இந்த திருவிழாவின் போது ஒவ்வொரு நாளும் இரவு ஆரத்தியோடு முடிப்பார்கள். ஆனால் விழாவின் எட்டாம் நாளான அன்று அவர்களின் பழங்காலத்து வழக்கத்தின்படி துர்க்கையின் முன் ஆடிப்பாடி துர்கையை  வழிப்படுவார்கள். இந்த விழாவின் போது தேங்காயையும், கற்பூரத்தையும் எரிய வைத்த  மண்சட்டியை தங்கள் கையில் ஏந்தி கொண்டு துர்க்கையின் முன்பு மேளச்சத்தத்தோடு நடனமாடுவார்கள். ஒன்பதாம் நாளான  அன்று அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தையும் தங்களின் நெற்றியில் வைத்துக் கொள்வார்கள். இந்த விழாவின் கடைசி நாள் பூஜையை பெரிய ஆரத்தியுடன் நிறைவு செய்வார்கள். அதன் பிறகு துர்க்கை அவளுடைய கணவரான சிவனிடம் சென்று விடுவார் என்று உணர்த்தும் வகையில் துர்கையின் சிலையை நதியில் கரைத்து விடுவார்கள். 

இந்தியாவில் இந்த பண்டிகையை பல ஊர்களில் மிகச் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். அதிலும் கொல்கத்தாவில் இந்த பண்டிகையை  மிக விமர்சையாக பந்தல் போட்டு, வீதிகள் முழுக்க பலவகையான கடைகளை வைத்திருப்பார்கள், அதில் பலருக்கு நாக்கில் எச்சிலூரும் இனிப்பு  மற்றும்   பலகாரக் கடைகள் நிரம்பியிருக்கும் மற்றும் பல கலை நிகழ்ச்சிகளும் நடக்கும்.இவ்வாறு இந்த பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுகின்றனர். இந்தப் பண்டிகை நமக்கு உணர்த்துவது நல்லது எப்பொழுதும் தீயதை தோற்கடித்து வெற்றி பெறும், அதனால் எப்பொழுதும் நாம் நல்வழியில் நடக்க வேண்டும்.