நவபாஷான சிலையின் மகிமை

நவபாஷான சிலையின் மகிமையை கண்டு உலகமே வியக்கின்றது. ஏனென்றால் இது மருத்துவ குணம் கொண்ட சிலை.

நவபாஷான சிலையின் மகிமை

நவபாஷான சிலையின் மகிமை

பழனியில் உள்ள நவபாஷான முருகன் சிலையை போகர் என்ற சித்தர் உருவாக்கியுள்ளார். உலகையே வியக்க வைக்கும் இந்த நவபாஷான சிலையின் மகிமையை பற்றி எனக்கு தெரிந்த சில தகவல்களை உங்களிடம்  பகிர்கின்றேன்.

நவபாஷான சிலையில் உள்ள பொருட்கள் 

நவம் என்றால் ஒன்பது, பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள்படும். நவ பாஷாணம் என்றால் ஒன்பது வகையான பாஷாணங்கள் (விஷங்கள்). அவைகள் என்னவென்றால்,  

1.கௌரிப் பாஷாணம்,

2.கெந்தகப் பாஷாணம், 

3.சீலைப் பாஷாணம்,

4.வீரப் பாஷாணம்,

5.கச்சாலப் பாஷாணம்,

6.வெள்ளைப் பாஷாணம்,

7.தொட்டிப் பாஷாணம்,

8.சூதப் பாஷாணம்,

9.சங்குப் பாஷாணம்

இந்த நவ  பாஷாணத்தில் உள்ள ஒவ்வொரு பாஷாணத்திலும் ஒவ்வொரு  நவகிரகங்களின் குணங்கள் உள்ளன என்று உணர்ந்த போகர் இந்த ஒன்பது விஷத்தை சரியான விகிதத்தில் கலந்து மருத்துவ குணம் கொண்ட நவபாஷான சிலையை மக்களின் நலனுக்காக உருவாக்கி இருக்கிறார்.                  

நவபாஷான சிலையை பராமரிக்கும் முறை 

நவபாஷான சிலைக்கு தினமும் ஆறு முறை அபிஷேகம் நடைபெறும். நவபாஷான சிலையை ஐந்து பொருட்களான நல்லெண்ணை, சந்தனம், விபூதி, பன்னீர், பஞ்சாமிர்தம் கொண்டு  அபிஷேகம் செய்வார்கள். இதில் குறிப்பிட்டுள்ள பன்னீரை மார்கழி மாதத்தில் மட்டும் பயன்படுத்துகின்றனர். நவபாஷான சிலை இன்றும் மருத்துவ குணம் கொண்டதாக இருக்க காரணம் புலிபாணி சித்தர் அறிவுரையின்படி இன்றும் பராமரிப்பது தான். 

சிலையின் மகிமை

இந்த சிலையை தரிசித்தால் இதிலிருந்து வெளிவரும்  கதிர்வீச்சு, கண்வழியாக உடம்பின் அகத்திலும்,  புறத்திலும் பட்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இரவில் நடைபெறும் ராக்கால பூஜையின் போது சிலையின் மார்பில் வட்ட வடிவில் சந்தனம் வைக்கப்படும். நவபாஷண சிலை உஷ்ணமானது, அதனால் இரவில் இச்சிலையில் இருந்து நீர் வெளியேறும். அந்த நீரை பிரசாதமாக சேகரிக்க ஒரு பாத்திரமும் வைப்பார்கள்.  இது ‘கெளபீனத் தீர்த்தம்’ என்று அழைக்கப்படும். 


மறுநாள் காலையில் அச்சிலையின் மார்பில் வைத்த சந்தனம் அதிலிருந்து வெளிப்படும் நீருடன் கலந்து பச்சை நிறமாக மாறியிருக்கும். இந்த நீரும், சந்தனமும் பல்வேறு நோய்களைக் குணமாக்கும் என்பதால் மக்களுக்கு பிரசாதமாக கொடுப்பார்கள். அதுமட்டுமல்ல இந்த சிலையின் மீது அபிஷேகம் செய்யும் பொருட்கள்  எதுவாயினும் அதுவும் இந்த சிலையின் மருத்துவ குணத்தை பெற்றுவிடுகிறது. இந்த சிலைக்கு அபிஷேகம் செய்த பொருட்களை மக்களுக்கு பிரசாரமாக கொடுக்கிறார்கள். இந்த பிரசாதம்   அனைத்து விதமான நோய்களை குணமாக்கும் ஆற்றல் பெற்றது மட்டுமல்ல நவபாஷான  சிலையில் நவக்கிரகங்களின் தன்மை உள்ளது.  அதனால் இந்த சிலையை வணங்குவோருக்கு திருமணத்தடை நீங்கும், தொழில் வளர்ச்சி பெருகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 

இந்த நவபாஷாண சிலை மற்ற சிலைகளை விட அதிக பிரபஞ்ச சக்தியை உள்வாங்கி தன்னை தரிசிக்கும் பக்தர்களுக்கு இந்த ஆற்றலை பலமடங்காக  கொடுக்கும் என்பது இதனுடைய  மற்றொரு சிறப்பு. இதன் மகிமை இன்றும் மாறாமல் இருக்கின்றது என்பதற்கு அங்கு வரும் கோடான கோடி பக்தர்களே சான்று. இது போன்ற படைப்புகள் தமிழன் பெருமையை உலகிற்கு பறைசாற்றுகிறது.