கார்த்திகை தீபம் பற்றி அறிந்து கொள்வோம்

கார்த்திகை தீபத்தன்று நாம் ஏற்றும் விளக்கில் ஜோதி வடிவில் இறைவன் காட்சி தருவார் என்பது ஐதீகம்.

கார்த்திகை தீபம் பற்றி அறிந்து கொள்வோம்

கார்த்திகை தீபம்

கார்த்திகை மாதம் பௌர்ணமியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் தினத்தன்று தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இத்தீபத் திருவிழாவை தமிழர்கள் தொன்றுதொட்டு கொண்டாடி வருகின்றனர்  என்பது சங்க கால நூல்களில் உள்ள குறிப்புகள் தெளிவுபடுத்துகிறது.  கார்த்திகை தீபத்தன்று அனைத்து சிவன் கோயில்கள் மற்றும் முருகப்பெருமான் கோயில்களில்  தீபம் ஏற்றப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. வீடுகளிலும் மக்கள் விளக்குகளை ஏற்றி வழிபட்டுவருகின்றனர்.

காத்திகையில்  தீபம் ஏற்றும் பழக்கம் எப்படி வந்தது 

ஒரு எலி கோவிலில் தினமும் விளக்கில் உள்ள நெய்யை குடித்து வந்துள்ளது. ஒரு நாள் நெய்யை குடிக்கும்போது எலியின் வால் எதிர்பாராத விதமாக விளக்கின் திரியை தூண்டிவிட்டு கொண்டிருந்தது. இதனால் அந்த கோவிலின் கர்ப்பகிரக தீபம் அணையாமல் இருள் இன்றி பிரகாசமாக இருந்தது. இந்த எலி தன்னை அறியாமலேயே செய்த இந்த காரியத்தால் இறைவனின் அருள் பெற்று மறு பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறந்து சகல செல்வங்களையும் பெற்றது. கர்வத்தில் இருந்த மகாபலி ஒரு நாள் அகங்காரத்துடன் கோயிலுக்கு சென்றதால் அங்கிருந்த விளக்கின் தீப்பொறி அவரின் உடையில் பட்டு எரிந்தது, உடல் புண்ணாயிற்று, தனது தவற்றை உணர்ந்து இறைவனை வணங்கி தனக்கு ஏற்பட்ட ரணத்தைப்  போக்கியருளுமாறு வேண்டினார். தினமும் கோயிலில் தீபங்களை ஏற்றி வணங்கி வந்தால் உன் துன்பம் நீங்கும் என்ற அசரீதி வாக்கு அவனுக்கு கேட்டது. அதனால் அன்றிலிருந்து  நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வரிசை வரிசையாக நெய் விளக்குகளை ஏற்றி வழிபட்டான். அதேபோல் கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வந்த நாளில்  விளக்கை ஏற்றினான். அன்று இறைவன் ஜோதி வடிவில் வந்து அவனின் துன்பத்தை போக்கியருளினார். இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே கார்த்திகை தீபத் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. காத்திகை தீபத்தன்று நாம் ஏற்றும் தீபம் நம் பாவங்களை போக்குவதோடு, சகல ஐஸ்வர்யத்தையும் அருளும்.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏன் சிறப்பாக கொண்டாடப்படுகிறது:

பிரம்மாவும், விஷ்ணுவும் யார் பெரியவர்கள் என்று சண்டையிட்டுக் கொண்டனர். பிறகு இந்த பிரச்சனையை சிவனிடம் கொண்டு சென்றனர். இவர்களின் கர்வத்தை அடக்குவதற்காக அவர்கள் முன் ஜோதிப்பிழம்பாக மாறி தன்னுடைய அடி அல்லது முடியை காண்பவரே பெரியவர் என்று கூறி தேட சொன்னார். அவர்களும் அதை ஒப்புக் கொண்டு ஜோதியின் உச்சியை தேடி அன்னப்பறவை ரூபத்தில்  பிரம்மா விண்ணுலகத்தை சுற்றினார். ஜோதியின் அடியை தேடி விஷ்ணு வராக ரூபத்தில் பாதாளத்தை சுற்றினார். இருவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. தங்களின் தோல்வியை ஏற்று கொண்ட இருவரும் முழு முதற் கடவுள் சிவனே என்று உணர்ந்தனர்.  காத்திகை பௌர்ணமி தினத்தன்று சிவபெருமான் அக்னி மலையாக திருவண்ணாமலையில் அம்பிகைக்கு காட்சியளித்து  அம்பிகையை இடப்பாக்கத்தில் ஏற்று அர்த்தனாரீஸ்வரர் ரூபம் கொண்டார். அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தை அக்னி லிங்கம் என்று கூறுவதற்கான காரணமும் இதுவேயாகும். அதனால் தான் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றி சிவனுக்கு விசேஷ பூஜைகள் செய்து விமர்சையாக கொண்டாடுகின்றனர். இந்நாளில் நாம் ஏற்றும் விளக்கில் ஜோதி வடிவில் இறைவன் காட்சி தருவார் என்பது ஐதீகம்.

கார்த்திகை தீபத்தன்று ஏன் முருகனை வழிபடுகிறோம்

சிவனுடைய நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பிழம்பு தோன்றி ஆறு பொறிகளாக சிதறியது. அந்த 6 பொறிகளை 6 குழந்தைகளாக மாற்றிய பார்வதி தேவி அக்குழந்தைகளை சரவண பொய்கையில் தீப் பிழம்பு போலத் தோற்றமளிக்கின்றன இந்த ஆறு நட்சத்திரங்களான அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி என்ற கார்த்திகை பெண்களிடம் வளர்க்க ஒப்படைத்தார். சில காலங்கள் கழித்து இத்தினத்தன்று இந்த 6 குழந்தைகளையும் ஒரே குழந்தையாக ஒருங்கிணைத்து தன்னுடன் அழைத்துச்சென்றார். இத்தீபத் திருவிழாவின் போது தீபங்கள் ஏற்றி முருக பெருமானை வழிபட்டால் ஒளியின் வடிவான முருகனின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைப்பதோடு சகல சௌபாக்கியமும் கிடைக்கும். 

தீபங்கள்:

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்ட பின்னரே நாம் அனைவரும் நம் வீட்டில் தீபங்களை ஏற்ற வேண்டும். 

எத்தனை விளக்குகள் வேண்டுமென்றாலும் ஏற்றலாம், ஆனால் ஒற்றைப்படையாக ஏற்ற கூடாது.

கார்த்திகை தீபத்திற்கு முன் தினமும் மாலையில் தீபம் ஏற்ற வேண்டும். இதை பரணி தீபம் என்று கூறுவார்கள். 

கார்த்திகை தீபத்தன்று மாலை 4.30 முதல் 6 மணிக்குள் விளக்குகளை ஏற்ற வேண்டும். 

கார்த்திகை தீபத்திற்கு மறு நாளும் தீபம் ஏற்ற வேண்டும். இதை குப்பை தீபம் என்று கூறுவார்கள். 

எந்த திசையில் விளக்கை ஏற்ற வேண்டும்:

வடக்கு திசை: வடக்கு திசையில் விளக்கை ஏற்றினால் திருமணத்தடை நீங்கும், வளர்ச்சியை தரும். 

கிழக்கு திசை: கிழக்கு திசையில் ஏற்றினால் துன்பங்கள் அகலும். 

மேற்கு திசை: மேற்கு திசையில் ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும், தோஷங்களை போக்கும். 

தெற்கு திசை: தெற்கு திசையில் தீபங்களை ஏற்றக்கூடாது.

அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில்

கார்த்திகை மகா தீபத்தை பார்ப்பவர்களுக்கு 21 தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும் என்று அருணாசல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . இந்த தீப ஒளியில் அனைவரின் வாழ்க்கையும் ஒளிரட்டும் என்று நம் குரல் வாயிலாக கார்த்திகை தீபத் திருவிழா நல்வாழ்த்துக்கள்.