30 வயதிற்கு மேல் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்

நாம் சாப்பிடும் உணவில் அதிக கவனம் செலுத்தி ஆரோக்கிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். 

30 வயதிற்கு மேல் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்

வயது அதிகரிப்பது இயற்கையான விஷயம். மனிதனுக்கு, குறிப்பாக பெண்களுக்கு வயது அதிகரிக்கும்போது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது சவாலான ஒரு காரியமாக உள்ளது. ஆனால் வயது அதிகரிக்கும்போது தான் ஆரோக்கியமும் அதிகமாக இருக்க வேண்டும். இதனால் மட்டுமே நமது அன்றாட வேலைகளை நம்மால் மற்றவர் துணையின்றி செய்து கொள்ள வேண்டும். இன்றைய அவசர காலகட்டத்தில் அவரவர் உடல் ஆரோக்கியத்தை அவரவர் மேம்படுத்தும் வேலையை செய்து கொள்வது அவசியம். உடல் ஆரோக்கியத்தை அதிகரித்துக் கொள்வதில் உணவு முக்கிய பங்காற்றுகிறது. 

இளம் வயதில் எந்த உணவை சாப்பிட்டாலும் அது உடலுக்கு அதிக பாதிப்பை உண்டாக்குவதில்லை. ஆனால் வயது அதிகரிக்கும்போது நாம் தேர்ந்தெடுக்கும் உணவு குறித்த விழிப்புணர்வு அவசியம்.
20 வயதில் நீங்கள் உட்கொள்ளும் உணவின் காரணமாக உங்கள் உடலில் உண்டாகும் மாற்றம் பற்றி உங்களால் உணர முடியாது. ஆனால் அதே உணவை 30 வயதில் நீங்கள் சாப்பிடும்போது சில வகை உடலியல் மாற்றங்களை உங்களால் உணர முடியும். அந்த வயதில் உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது சற்று கடினமாகத் தோன்றும். ஆனால் சில வகை உணவுகளை சாப்பிடுவதாலும், சில வகை உணவுகளைத் தவிர்ப்பதாலும் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து, குறிப்பிட்ட சில நோய்கள் தாக்காமல் பாதுகாக்க முடியும்.

இந்த விதத்தில் நீங்கள் 30 வயதைக் கடந்தவுடன் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய 4 உணவுகள் இதோ உங்களுக்காக..

மீன் :
வயது அதிகரிக்கும்போது உடல் பல சவால்களை ஏற்றுக் கொள்ள வேண்டி வரும். இவற்றுள் ஒன்று மூட்டு வலி. இது அனைவருக்கும் 30 வயதைக் கடந்த பின் ஏற்படுவதில்லை என்றாலும் பெண்கள் இந்த மூட்டு வலியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இங்கிலாந்தில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில், மீன் சாப்பிடுவதால் குருத்தெலும்பு-உண்ணும் நொதிகள் குறைந்து, எலும்பு ஆரோக்கியம் மேம்படுகிறது  என்று கூறுகிறது. மீன் சாப்பிடுவதால், குருத்தெலும்பு சீர்குலைவு குறைந்து, மூட்டுகளில் வீக்கம் குறையலாம், இதனால் நீங்கள் ஆரோக்கியமான எலும்புகளைப் பெறலாம்.

நட்ஸ்:
30 வயது என்பது வாழ்க்கையில் அதிக சவால்களை சந்திக்கும் வயது. சிலர் தொழில் ரீதியாக தங்கள் உயரத்தை தொட முயற்சித்துக் கொண்டிருப்பார்கள். சிலர் இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து புதிய குடும்ப சூழலுக்குள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருப்பார்கள். இவற்றையெல்லாம் சீராக நிர்வகிக்க உடலுக்கு அதிக ஆற்றல் அவசியம். இந்த அதீத ஆற்றலைத் தர உதவுவது நட்ஸ். இதில் வைடமின் ஈ சத்து அதிகம் இருப்பதால் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் அதிக ஆரோக்கியமாக வலிமையாக விளங்குகிறது. மேலும் நட்ஸ் வைடமின் பி சத்துகளைக் கொண்டிருப்பதால் இரத்த அழுத்தம் சீராக நிர்வகிக்கப்படுகிறது . இதனால் உங்கள் இதய ஆரோக்கியம் சரியான பாதையில் இயங்குகிறது.

புரதம்:
வளர்சிதை மாற்றத்தில் இடையூறு ஏற்பட்டால் உங்கள் உடல் ஆரோக்கியம் குறையும் வாய்ப்பு உண்டாகும். உடலில் தேவையற்ற பாதிப்புகளை உண்டாக்கும். வளர்சிதை மாற்றத்தின் காரணமாக நாம் உண்ணும் உணவில் இருந்து  உடல் கலோரிகளை பெற்று அவற்றை ஆற்றலாக மாற்றுகிறது. 30 வயதிற்கு மேல் கலோரிகளை எரிக்கும் செயல்பாடு கடினமாகி ஆற்றல் உற்பத்தி கடினமாகிறது. இதனைத் தவிர்க்க பெண்கள் 30 வயதிற்கு மேல் புரதம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சவ்வற்ற இறைச்சி மற்றும் மீன் எடுத்துக் கொள்வதால் வளர்சிதை மாற்றம் ஊக்குவிக்கப்பட்டு ஆற்றல் அதிகரிக்கிறது. இதனால் வயிறு நிரம்பி இருக்கும் நிலை உருவாகி, தேவையற்ற நேரத்தில் தேவையற்ற உணவை சாப்பிடும் நிலை தடுக்கப்படுகிறது. உயர் புரத சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவதால் உங்கள் வளர்சிதை மாற்றம் சீரான வழியில் செல்கிறது , இதானல் உங்கள் உடல் எடை சரியான அளவில் நிர்வகிக்கப்படுகிறது, மற்றும் இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் உள்ளது.

பீன்ஸ்:
30 வயதின் மத்தியில், முகத்தில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் தென்பட நேரலாம். பீன்ஸ் சாப்பிடும் பெண்களுக்கு இந்த கோடுகள் மற்றும் சுருக்கம் மிகக் குறைவாக தென்படுவதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒரு ஆராய்ச்சி குறிப்பிடுகிறது. மேலும் சூரியஒளியால் உண்டாகும் சேதமும் குறைவதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. பீன்ஸில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் சூரிய வெளிப்பாடு மற்றும் மாசில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. மேலும் உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி சருமத்தை பாதுகாப்புடன் வைக்கிறது.