அன்போடு சமையுங்கள்

நாம் உண்ணும் உணவு நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதோடு மட்டும் இல்லை, நமது மனதிற்கும் ஆரோக்கியத்தை தருகிறது.

அன்போடு சமையுங்கள்

நாம் சமைக்கும் போது நமக்கு  இருக்கும் மனநிலையின் தாக்கம் அல்லது அதிர்வு  நாம் சமைத்த உணவுகளில் நேரடியாக பிரதிபலிக்கும். இதனால் அந்த உணவின் ஆற்றலும் சுவையும் மாறுபடுகிறது.  நமது மனநிலையின் மூலம் நாம் சமைக்கும் ஒவ்வொரு உணவையும் நோயை குணப்படுத்தும் மருந்தாக்கலாம் . உணவு எப்படி மருந்தாகும் என்பதனை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சமையுங்கள் :
இந்த பிரபஞ்சத்தில் எல்லாவற்றிற்கும் ஒரு அதிர்வு அதாவது வைபரேஷன் உண்டு. மரம், செடி, பூ, பாறை, கல் என்று எல்லாவற்றிற்கும் அதற்குரிய ஒரு அதிர்வு இருக்கும். ஆன்மீக ரீதியாக நாம் அந்த அதிர்வுகளின் ஆற்றலால் தான் இணைக்கப்பட்டிருக்கிறோம் என்று கூறப்படுகிறது. நமக்கு இந்த ஆற்றல், உணவு, காற்று மற்றும் தண்ணீர் வழியாக கிடைக்கிறது. 

நம்முடைய பல கலாச்சாரங்களில் சமையலில் எண்ணம் மற்றும் உணர்ச்சி பற்றிய முக்கியத்துவம் உள்ளது என்று அறியப்படுகிறது. பண்டைய க்ரீக்க்ளின் கலாச்சாரப்படி,எல்லையற்ற அன்புடன் சமைக்கப்பட்ட உணவுக்கு ஒரு தனி சுவை இருப்பதாகவும், அது ஒரு மருந்தை போல் அவர்கள் நோய்களை குணப்படுத்துகிறது என்றும் நம்பினர். பகவடகீதையில், ஒரு மனிதனின் நோக்கம் , அவன் சமைக்கும் உணவில் பரிமாறப்படுகிறது  என்று குறிப்பிடப்படுகிறது .

ஒரு ஜப்பானிய ஆராச்சியாளர், இந்த ஆற்றலின் விளைவுகளை தண்ணீர் கொண்டு சோதித்தார். நேர்மறை எண்ணங்கள், வார்த்தைகள், நோக்கங்கள் மற்றும் வழிபாடுகள் ஒத்திசைவான படிக  உருவங்களை தண்ணீரில் உருவாக்கின. ஒரு மாசுபட்ட தண்ணீரையும் இவைகள் தூய்மையாக்கின . எதிர்மறை எண்ணங்கள்,வார்த்தைகள் மற்றும் உணர்வுகள் ஒழுங்கற்ற படிகங்களை உருவாக்கின 
 
புனித நீர்:
நாம் பல சம்பிரதாயங்களில், புனித நீர் என்ற ஒன்றை கேள்விபட்டிருப்போம். கிறிஸ்தவர்கள் அவர்கள் ஆலயங்களில் இந்த புனிதநீரை பாதிரியாரிடம் இருந்து பெற்று வந்து, வீட்டில் வைத்திருப்பர். உடல் நலம் இல்லாதபோது மற்றும் வேறு சில பிரச்சனைகளின் போது இந்த நீரை பயன்படுத்தி சுகம் பெறுவார். இந்துக்கள் கோவில்களில் தீர்த்தம் தரும் முறை இருந்து வருகிறது. இந்த தீர்த்தங்களை தலையில் தெளித்து கொள்வதும் பருகுவதும் நாம் பின்பற்றி வரும் முறையாகும். நல்ல நாட்களில் இந்த தீர்த்தங்களை நாம் வீடு முழுவதிலும் தெளிப்பதும் நமது வழக்கத்தில் உள்ளது. இந்த தீர்த்தங்களுக்கு என்ன சக்தி உள்ளது? கடவுள் இருக்கும் இடத்தில வைக்கப்பட்டு பூஜித்து தரப்படுவதால் அவற்றில் ஏற்படும் நேர்மறை அதிர்வு தான் இதனை பயன்படுத்துவதில்  பல நன்மைகள் நடப்பதற்கு ஒரு காரணம். வேறு எந்த ஒரு மந்திரமோ தந்திரமோ இவற்றில் இல்லை. 

மிகுந்த கவனத்துடன் செய்யப்பட்ட உணவில், சிறிது அன்பையும், ஆனந்தத்தையும் சேர்த்து கலக்கும்போது அதன் சுவை நிச்சயம் நாவிற்கு இனிமை தரும். இந்த நேர்மறை எண்ணத்தின் அடிப்படையில் நாம் உணவு சமைக்கும் போது இதுவும் ஒரு புனித நீரின் ஆற்றலை பெறுகிறது. மகிழ்ச்சியாக, பொறுமையாக நாம் உணவு சமைக்கும்போது அதன் சுவை அதிகரித்து காணப்படும், இதன்மூலம் நல்ல புத்துணர்ச்சி அதனை உண்ணுபவர்களுக்கு கிடைக்கும். 

நேசத்தோடும், நல்ல எண்ணத்தோடும் சமைக்கப்படும் உணவளை விட ஆரோக்கியம் தரும் வேறு உணவுகள் கிடையாது. அனுபவித்து செய்யும் உணவுகளில் புத்துணர்ச்சி மற்றும் குணப்படுத்தும் தன்மை அதிகமாக இருக்கும். இந்த விஷயத்தை  நமது மன்னர் காலத்திலேயே அறிந்ததால் தான் , அரசவையில்  உணவு சமைப்பவர்கள் மஹாராஜா என்று அழைக்கப்பட்டனர். 

சமயலறைக்கு சென்றவுடன் மற்ற எல்லாவற்றிலும் இருந்து நமது கவனம் நீங்கி சமையலில் மட்டும் லயித்திருக்க வேண்டும். நாம் உணவில் சேர்க்கும் ஒவ்வொரு பொருளையும் கவனத்துடன் கையாள வேண்டும். பொறுமையுடனும் நிம்மதியுடனும் சமைக்க வேண்டும். நமக்கு பிடித்த இசையை கேட்டு கொன்டே சமைப்பதும் நல்ல பலனை கொடுக்கும்.

நாம் சிறு குழந்தையாய் இருந்தபோது நமக்கு நடந்த பல நினைவுகள் நம் ஞாபகத்தில் இருக்காது. ஆனால் ஒன்றை மட்டும் மறக்க முடியாது. அது நாம் உண்ட உணவு. அதன் சுவை இன்றளவும் நம் நாவினில் இருக்கும். பெரியவர்களான பின்னும், மற்ற குழந்தைகள் இப்போது அந்தவிதமான உணவை உண்ணும் போதும் நமது மனமும் நாவும் அந்த உணவை ருசித்து பார்க்க ஏங்கும். அந்த அளவிற்கு அதன் சுவை அலாதியாய் இருக்கும். இது ஏன் என்று யோசித்து பார்த்தால்  அதன் பதில், அந்த உணவு, தாய் தன குழந்தைக்காக, தானே தன்  கையால் செய்த உணவு. இதை சமைக்கும் போது குழந்தையின் நாக்கில் காரம் படக்கூடாது, குழந்தை உணவை துப்ப கூடாது, குழந்தையின் ஆரோக்கியம் உயரவேண்டும் என்று பல நேர்மறை எண்ணங்களுடன் செய்த உணவாக இருப்பதால் அதன் சுவையை மிஞ்சுவதற்கு வேறு உணவுகள் இதுவரை வர வில்லை. 

இப்போது புரிகிறதா? அன்பு மற்றும் அக்கறை குழைக்கப்பட்டு சமைக்கும் உணவில் எந்த ஒரு கெடுதலும் நாம் அடைய முடியாது. மாறாக அன்பும் அமைதியும் சமைக்கும் இடங்களில் இருந்தால், ஆனந்தமும் ஆரோக்கியமும் அதனை உண்ணும் இடங்களில் இருக்கும் என்பது உண்மையே. இதனை நாம் ஒவ்வொருவரும்  முயற்சித்து பார்க்கலாமே!